Skip to content

வீரமாமுனிவர்

வீரமாமுனிவர் (08.11.1680 – 04.02.1747)

வீரமாமுனிவர் இத்தாலி நாட்டில் பிறந்தார். இவர் இயற்பெயர் கான்ச்டன்டைன் சோசப்பு பெஸ்கி (Contantine Joseph Beschi) என்பதாகும். கிறித்துவ மதத்தைப் பரப்பும் நோக்கில் தனது முப்பதாவது வயதில் 1710 இல் தமிழகம் வந்தார். முப்பது வயதுக்கு மேல் தமிழ் கற்றுத் தமிழறிஞராகச் சிறந்து 23 நூல்களைத் தமிழில் எழுதினார். தமிழின் இலக்கண இலக்கியப் பெருமையை உலகறியச் செய்ததில் முதலாமவர் இவர் என இவரைக் குறிப்பிடலாம். தேம்பாவணி என்ற பெருங்காப்பியத்தைத் தமிழில் எழுதினார்.

திருக்குறள் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தார். உரைநடையில் வேதவிளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக்கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களை எழுதினார்.

தொன்னூல் விளக்கம்என்ற இலக்கண நூலையும் எழுதினார். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களையும் தொகுத்து எழுதினார். ‘செந்தமிழ்என்ற இலக்கண நூலில் பேச்சுத் தமிழில் இலக்கணம் வரைந்தார். எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். சதுரகராதியை உருவாக்கினார்.

தமிழில் திருக்குறள் முதன்முதலில் 1812 ஆம் ஆண்டு அச்சுக்கு வந்தது. அதற்கு முன்பே 1730 இல் திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்ட சிறப்புக்குரியவர்.

இவர் வரலாற்றை முத்துசாமிப் பிள்ளை என்பவர் 1822 இல் எழுதி வெளியிட்டார். அவரே ஆங்கிலத்திலும் இவர் வரலாற்றை 1840 இல் எழுதி வெளியிட்டார்.

வீரமாமுனிவர் தமிழில் எழுதிய திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் உரைகள் சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் ஓலைச்சுவடியாக (நூலகப் பட்டியல் எண் : D160) இருந்துள்ளது. இதனைத் தாள்படியாக 1940 இல் பெயர்த்து எழுதியுள்ளனர். இத்தாள் படியைச் சூ.இன்னாசி அவர்கள் பொதுப்பதிப்பாசிரியராகவும் திரு எஸ். சௌந்தரபாண்டியன் அவர்கள் பதிப்பாசிரியராகவும் இருந்து 1985 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளனர்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995