Skip to content

வள்ளுவத்தின் சமயவியல்-குன்றக்குடி அடிகளார்

வள்ளுவத்தின் சமயவியல்-குன்றக்குடி அடிகளார்
(ஏப்ரல் 1999 வள்ளுவம்)

வள்ளுவர் காட்டும் கடவுள்…..அஃது ஓரூரில், ஓரிடத்தில் இருப்பதன்று; எங்கணும் நீக்கமற நிறைந்து நிற்பது! உய்த்துணர்வார்க்கு உள்ளத்தின் துணையாய்த் தோழமையாய் நின்று தொழிற்படுத்துவது; வெற்றிகளைத் தருவது; இன்பங்களைத் தருவது.

இத்தகைய வள்ளுவத்தின் கடவுள் நெறியை மறுப்பார் யார்? வள்ளுவத்தின் கடவுள் நெறி வையகத்திற்கு உரி மையாக வேண்டும்! மனித குலத்தில் சமய நெறிகளில் மண்டியிருக்கும் புறச் சமயப் புதர்க் காடுகளை அழித்து வள்ளுவத்தின் சமய நெறியை உலகப் பொதுச் சமயமாக்க வேண்டும்.

இன்று உலகெங்கும் சமய வேறுபாடுகள் மலிந்து காழ்ப்புணர்ச்சிகளைத் தோற்றுவித்திருக்கிறது. சென்றகால வரலாற்றில் சமயம், மனித உலகத்தின் அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் செய்த பணிகள் நினைவிற்குரியன; போற் றுதலுக்குரியன. ஆனாலும் இடையிடையே சமய அமைப்புகள் மக்களிடையே பரப்பிய மூட நம்பிக்கைகளும் சமய நிறுவனங்களுக்கிடையே நிகழ்ந்த போர்களும் அந்த நற்பணிகளை மறைத்து விட்டன. விஞ்சியது சமயநெறிக்குப் புகழும் பெருமையுமல்ல: பழியாகவே அமைந்துவிட்டது. சமய நம்பிக்கையுடையோர் இதனை நினைந்து வருந்தவேண்டியிருக்கிறது.

மீண்டும் இந்தத் ‘துன்பியல் வரலாறு’ தொடர்ந்து நிகழாமல், தூய சமய நெறிவழியே சமுதாயத்தை வழிநடத்தி வாழ்விக்க விரும்பினால், மனிதகுல வேறுபாடுகளை, சமய வேறுபாடுகளை, ஏற்றுக் கொள்ளாத வள்ளுவத்தின் சமயம் உலகப் பொதுப்பெருஞ் சமயமாக இடம் பெறச் செய்ய வேண்டும்.

மனித குலத்தின் உரிமைகள் இயற்கையில் அமைந்தவை. அந்த உரிமைகளை நாடுகளின் அமைப்பின் மூலமோ, அரசியல்களின் மூலமோ, சமய அமைப்புகளின் மூலமோ, புன்மையான சாதி குல அமைப்புகளின் மூலமோ, யாருக்கும் பறிக்க உரிமையில்லை. உயிர்கள் பிறப்பிலேயே ஒத்த உரிமையுடையன.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் (குறள் 972)

இது திருவள்ளுவர் சமயத்தின் உயரிய கோட்பாடு. இந்தக் கோட்பாடு உலகில் இடம் பெற்றால்தான் வெள்ளையர், கறுப்பர், தீண்டத் தகாதவர் என்று மனித குலத்தினைப் பிரித்து ஆட்டிப் படைக்கும் தீமைகள் மறையும்.

கடவுள் அருச்சனைகளால், ஆராதனைகளால், படையல்களால் திருப்தி செய்யத் தக்கவரல்லர் என்ற வள்ளுவத்தின் கொள்கை இடம் பெற்றால்தான் வாழ்க்கையோடிசைந்த அறிவியல் சமயம் உலகில் வளரும். வாழ்வாங்கு வாழ்தலே சிறந்த வழிபாடு என்ற வள்ளுவத்தின் சமய நெறி வெற்றி பெற்றால்தான் சமுதாயத்தில் புரோகிதர்கள் உலா வரமாட்டார்கள்; சமய நிறுவனங்கள் தோன்றா: அவைகளுக்குள் ஆதிக்கப் போட்டிகளும் இரா.

வள்ளுவத்தின் சமயம் வெற்றி பெறுமானால் தொண்டு நிறுவனங்கள் எங்கும் தோன்றும்; தொண்டர் குலம் தழைக்கும்; மனிதகுலமும் தழைக்கும். எனவே வள்ளு வத்தின் சமயம் உலகப் பொதுச் சமயமாக மலரும் நாளே மனித குலத்திற்குப் பொற்காலம் படைக்கும் நன்னாளாகும்.

திருவள்ளுவர் தந்த திருக்குறள் ஒரு சமயத்திற்காகத் தோன்றிய நூலன்று. அது சமயச் சார்பற்ற நூல்.ஆயினும், மனித குலத்தைச் சிந்தனையில், அறிவியலில், வாழ்க்கையில் வழி நடத்தும்போது திருக்குறள் கொள்கை சமயமாக உருப்பெறுகிறது. வள்ளுவத்தின் சமயம் நெகிழ்ந்து கொடுக்கக்கூடியது ;நல்லெண்ணத்தின் பாற்பட்டது; நம்பிக்கையுடன் கூடியது. இயற்கைக்குஇசைந்தது; மெய்யுணர்தலின் பாற்பட்டது; ஒரு வாழ்க்கை முறையாக அமைவது!

வள்ளுவத்தின் சமயம் வையகத்திற்கு உரிமையாகுக.

தொகுப்பு
சி இராஜேந்திரன்
www.voiceofvalluvar.org