Skip to content

வள்ளுவரின் இறைமை பேராசிரியர் கு மோகனராசு

வள்ளுவரின் இறைமை
பேராசிரியர் கு மோகனராசு

🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

திருவள்ளுவர் செய்த இறைமைப் புரட்சி

திருவள்ளுவப் பெருந்தகை வாழ்ந்த காலத்தில் உலகாயதம், சாங்கியம், சமணம், பௌத்தம் போன்ற கடவுள் மறுப்புச் சிந்தனைகளே மேலோங்கி இருந்தன.

வேத காலத்தில் இயற்கையைக் கடவுளராகக் கற்பித்துக் காணும் பல தெய்வ வழிபாடு நிலவியுள்ளது. அவற்றினூடே பிரம்மம் ஊடுபொருளாக இருந்துள்ளது. ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் புருடன், பிரகஸ்பதி, விஸ்வகர்மா போன்ற பெயர்களில் கடவுள் ஒருவர் என்னும் அடிப்படையிலான கோட்பாடு கற்பனையாக முன் வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடவுள் மறுப்பு மற்றும் ஏற்புச் சிந்தனைகளால் மன மாறுபாட்டு உணர்வுகளும் ( இகல் ), பிரிவினை உணர்வுகளும்  ( பகல் ), பகை உணர்வுகளும் மேலோங்கி மக்களிடையே அமைதி இன்மை என்னும் நிலைமை உருவாக்கம் பெற்றுள்ளது.

இவற்றையெல்லாம் ஆராய்ந்த  திருவள்ளுவர் சமயங்கள் தோறும் சொல்லப்பட்ட கடவுளர் கற்பனை என்பதைத் தெளிவாக உணர்ந்து,
கடவுள் ஏற்பாலரும் கடவுள் மறுப்பாளரும் ஏற்கத்தக்க ஓர் இறைமையைத் தாமே படைக்க எண்ணி உள்ளார் .

இந்நிலையில் கடவுள் என்னும் பெயரைத் தவிர்த்து அதற்கு இணையான இறைவன் என்னும் பெயரை ஏற்றுள்ளார். இறைவன் என்பதில் இறைவனுக்கு முதன்மை இல்லை, இறைமைக்கே முதன்மை.

திருவள்ளுவர் காலத்தில் சமயங்கள் தோறும் கடவுள் பண்புகள் எட்டு எனப் பெரிதும் முன் வைக்கப்பட்டுள்ளன. அந்த எட்டு என்பதை தமக்குரிய இறைமைக் கோட்பாட்டின் பண்பாக்கங்களுக்குரிய எண்ணாகக் கொள்கின்றார்.

தாம் படைக்கும் இறைமைப் பண்புகளை விண்ணிலிருந்து படைக்காமல் மண்ணில் மனிதம் மலர்வதற்குரிய பண்புகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றை எட்டினுள் அடக்கி,  ஆதி பகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன் என எட்டாக வகைத்தொகை செய்து அந்த எட்டினையும் உள்ளடக்கிய பெயராக  எண்குணத்தான் என்பதை வழங்குகின்றார். இதுதான் திருவள்ளுவர் செய்த இறைமைப் புரட்சி.

இந்த இறமை ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் பொதுவான- நடுவான- இறைமை ஆகும் .

அந்த வகையில் திருவள்ளுவர் படைத்த இறைமைச் சிந்தனை எல்லோருக்கும் பொதுவாகித் திருக்குறள் உலக நூல் என்பதற்கு ஒரு படியாக அமைகின்றது ..

இது, சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளனாக நான்  பணியில் சேர்ந்த 1973 முதல் கடந்த 50 ஆண்டுகளில் திருக்குறளையே ஆய்வாகவும் வாழ்வாகவும் கொண்டு தெளிந்த தெளிவு.

இதனைச் சமயங்கள் தோறும் கூறப்படும் கடவுளர் சிந்தனைகளோடு ஒப்பிட்டு காணலாம். ஆனால் திருவள்ளுவரின் இறைமைக் கோட்பாடுகள் ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு உரியன என்பது அறியாமை மட்டுமின்றி திருவள்ளுவரின் தத்துவத்தை சிதைக்கும் செயலும் ஆகும்.