ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். ( 69)
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
— மு. வரதராசன்
A woman rejoices at the birth of a son,
But even more when he is praised.
கேட்ட :
“பெண் இயல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாய்” எனக் கூறினார் என்பது பரிமேலழகர் கூறும் காரணம். இது கற்கும் உரிமை மகளிர்க்கு மறுக்கப்பட்ட காலத்துக் கொள்கை விளக்கம். அது இப்போது எடு படாது. தன் மகன் சான்றோன் என்பதைத் அறிவாள். ஆயினும், “என் மகன் சான்றோன் எனக் தாய் கூறிப் பெருமைப்பட்டுக்கொள்ள எந்தத் தாயும் விரும்ப மாட்டாள். இது பண்புடைமையும் ஆகாது. தன் மகன் சான்றோன் என்பதைப் பிறர் எல்லாம் ஏன், தன் பகை வர்களும்கூட – கூறக்கேட்ட வழி மகிழ்வதே பண் புடைமையாகும், “மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள் பேசுவதிலோர் மகிமை இல்லை திறமான புலமை எனில், பிற நாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்” என்றார் பாரதியார். பாரதியார் புகட்டிய அவ்வறிவுரையை ஏற்றவள் அத்தாய். ஆகவே தான், பிறர் புகழக் கேட்டு மகிழ்ந்தாள்.
“கேட்டதாய்” என்பதற்குப் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒருமுறை அளித்தவிளக்கம் போற்றுதற்குரியது; அவர் விளக்கம் வருமாறு: ஒரு தாய்; ஆண்டு முதுமையின் எல்லைக்கே சென்று விட்டவள். நடமாட இயலாது. மகன் தன்னுடைய சான்றாண்மையைக் காட்டும் மேடைக்குச் செல்ல இயலாது. கண், பார்வை இழந்து
விட்டது. அக்காட்சியை காண முடியாது. காதும் சரியாகக் கேட்கவில்லை. ஆக வீட்டோடு, படுத்தப் படுக்கையாக வீழ்ந்து கிடக்கிறாள். இந்நிலையில் சிலர் வந்து அவள் மகனின் சாண்றான்மையின் பெருமையை அவள்காது கேட்க உரத்த குரலில் கூறினார்கள்; அது கேட்ட அந்நிலையில் அவள் உடலில் புதுத்தெம்பு பிறந்து விட்டது. மகனைப் பெற்ற இளமைத் துடிப்பு உண்டாகி விட்டது. மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விட்டாள் அத்தாய். இது அண்ணா அவர்கள் அளித்த விளக்கம்.
தாய் :
மகனைச் சான்றோன் எனப் பிறர் புகழக் கேட்ட ந்தைக்கு மகிழ்ச்சி வராதா? தாய்க்கு மட்டும்தான் கிழ்ச்சி வருமா? தந்தைக்கும் வரும், ஆனால் அவன் மகிழ்வதில், அத்தந்தைக்குப் பெருமை இல்லை. காரணம் மகனைச் சான்றோன் ஆக்கியதே அவன்தான். ஆக, தன் கடமை கண்டு தானே மகிழ்வது பண்பாகாது. ஆகவேதான் தந்தை மகிழவிடவில்லை வள்ளுவர்; அம் மகிழ்ச்சியைத் தாய்க்கே உரிமையாக்கி உயர்ந்துவிட்டார் வள்ளுவர்.
வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி(1991)
புலவர் கா கோவிந்தனார்
தொகுப்பு
சி இராஜேந்திரன்
www.voiceofvalluvar.org
05/08/2023