Skip to content

வள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை நூலிலிருந்து

தெய்வ வள்ளுவர் வான்மறை செய்தார்

இன்று தமிழகச் சட்டசபையில் வள்ளுவரது உருவப் படம் தொங்கவிடப்பட்டிருக்கிறது. வள்ளுவர் சிலைகள் பல எழுந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையிலே திருக்குறளைப் பொறிக்க வேண்டுமென்ற குரலும் கேட்கிறது. ஆனால், எத்தனையோ பெருமைகளுக்கு உரியவராகிவிட்ட திருவள்ளு வருக்கு ஒரு பெரிய குறை உண்டு. தமிழ்நாடும் அதன் மக்களும் அவரது கருத்துக்களாற் பெறவேண்டிய, பெறக் கூடிய பயனைப் பெறாமையே அக்குறையாகும்; உறுபசியும் ஓவாப்பிணியும்’ நீங்கவில்லை. ‘இன்மையெனவொரு பாவி” வளர்கிறான். கல்லாமை, களவு, இன்னாசெய்தல், அழுக்காறு புறங்கூறல் முதலியவை ஒழிந்தபாடில்லை. இந்நிலைமைக்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டும். இந்நிலை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நீடிக்கும்போது, திருக்குறளாற் பயன டைய வாருங்கள் என்று பிறரைக் கூவியழைப்பதில் என்ன சிறப்பிருக்கிறது?

திருவள்ளுவருக்குப் பெருமைதேடுகிறோமென்ற நினைப் போடு அவரது புகழைச் சத்தம் போட்டுக் கூறுவதிலோ அல்லது திருவள்ளுவருக்குக் கைமாறு செய்கிறோமென்ற நினைப்போடு இறந்துபோனவர்களுக்குத் திவசம் கொடுப்பது போல, ஆண்டுதோறும் அவருக்கு விழாவெடுப்பதிலோ என்ன பெருமையிருக்கிறது?

திருவள்ளுவரின் பெயரைச் சொல்லித் தமிழ்மக்கள் பெருமைப்பட்டது போதும். திருவள்ளுவராலே தமிழ் மக்கள் பயன் பெற்றுச் சிறப்படைவார்களேயானால், அது திருவள்ளுவருக்குப் பெருமை சேர்ப்பதாகும். திருவள்ளுவர் காட்டிய வழியிலே தமிழர் வாழ்வு அமையுமேயானால், அதுவே திருக்குறளின் உண்மையான பயனையும் பெருமை யையும் உலகுக்கெல்லாம் எடுத்துக் காட்டுவதாகும். எந்தத் தமிழ் மக்களுக்குத் திருக்குறள் வான்புகழீட்டிக் கொடுத்ததோ அந்தத் தமிழ் மக்கள் திருக்குறளாற் பயனெய்தத் தவறிவிட்டனர் என்று உலகம் பழியாதோ?

சி தில்லை நாதன்
விரிவுரையாளர்
இலங்கைப் பல்கலைக்கழகம்
(1967)
(வள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை நூலிலிருந்து….)