வள்ளலார் நடத்திய திருக்குறள் வகுப்பு
பொதுமக்களுக்காக முதல் முதலில் திருக்குறள் வகுப்பு நடத்தத் தொடங்கியவர் வள்ளலாரே.
வள்ளலார் இளமையில் சென்னையில் வதிந்த காலத்தில் தம் மாணவர் உபயகலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுத முதலியாரைக் கொண்டு திருக்குறள் வகுப்பு நடத்தச் செய்தார். வேலாயுத முதலியாரின் திருக்குறள் வகுப்பைப் பற்றிச் சுவையான வரலாறொன்று அறியப் பெறுகிறது
இளையர் முதியோர் கற்றார் கல்லார் ஆகிய பலதரத்தினரும் வகுப்புக்கு வந்தனர். வேலாயுதனார் தமது இருமொழிப் புலமை, பரந்த நூலாராய்ச்சி கவியாற்றல் ஆகியவற்றிற்கேற்ப வகுப்பை மிகவிரிவாக நடத்தினார். மூன்று மாதங்களாகியும் மூன்று அதிகாரங்களேனும் முடியவில்லை. பொது மக்களுக்குரிய வகுப்பாக அதுஇல்லை. பெரும் புலவர்கள் இளம் புலவர்களுக்குப் பாடஞ்சொல்லுவது போன்ற வகுப்பாக இருந்தது. போதிய அறிவு வலியற்ற பொதுமக்கள் பலருக்கு வேலாயுதனாரின் பாடத்தைப் பின்பற்றுவது கடினமாயிருந்தது. அவர்களிற் சிலர் வள்ளற்பெருமானிடம் சென்று முறையிட்டனர். பெருமான் வேலாயுத முதலியாரை வரவழைக்க எண்ணி “மூடமுண்ட வித்துவானைக் கூப்பிடும்” என்றருளினார். முறையிட்டுக் கொண்டவர்கள், பெருமான் முதலியாரை மூடம் முண்டம் வித்துவான் என்று குறிப்பிட்டதாகக் கருதி ஒருவருக்கொருவர் நகையாடிப் பேசிக் கொண்டே சென்று வேலாயுத முதலியாரைப் பெருமானிடம் அழைத்து வந்தனர். வேலாயுதனார் வந்ததும், அனைவருக்கும் பொருள் விளங்கும்படிப் பொதுமக்களுக்கு எளிதாக நடத்துமாறுமுதலியாரிடம் கூறிவிட்டு, குறைகூறி முறையிட்டவர்களை நோக்கி மூடமுண்ட வித்துவான் என்றால் கேட்பவர்களின் அறியாமையாகிய மூடத்தை உண்ட வித்துவான் என்பது பொருள் எனக்கூறி அனைவரையும் அனுப்பிவைத்தனராம். அதன்பின்னர் வகுப்பு எளிதாக நடந்ததாம்.
வள்ளற்பெருமான் காலத்திலும் அதற்குமுன்பும் திருக்குறள் முதலிய நூல்களைத் தகுதிவாய்ந்த பெரும் புலவர்கள் முறையாகப் பாடஞ் சொல்லுவதும், கேட்கும் தரத்திலுள்ள மாணாக்கர்கள் பாடங்கேட்பதும் வழக்கமாக இருந்ததே தவிர, பலதரத்தவரான பொது மக்களுக்கு வகுப்பு நடத்தும் வழக்கமில்லை. மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லுவது வேறு. பொது மக்களுக்கு வகுப்பு நடத்துவது வேறு. இதிகாச புராணச் சொற்பொழிவுகளே பிரசங்கங்களே பொது மக்களுக்காகச் செய்யப் பெற்றன. திருக்குறள், மாணாக்கர் களுக்குப் பாடஞ் சொல்லும் நிலையிலேயே இருந்தது. அந் நிலையில் பொது மக்களுக்காக முதன் முதலில் திருக்குறள் வகுப்பைத் தொடங்கி நடத்தச் செய்த பெருமை வள்ளற் பெருமானையே சாரும்.
புலமைபெற விரும்பும் மாணாக்கர்கள் மட்டும் திருக் குறளைப் படித்தால் போதாது, சமுதாயத்தில் பொதுமக்கள் அனைவரும் திருக்குறளை அறிய வேண்டும், கற்றறியும் வாய்ப்பு நேராவிட்டாலும் கேட்டாவது அறிய வேண்டும் என்று வள்ளற்பெருமான் எண்ணினார். பொது மக்களுக்காகத் திருக்குறள் வகுப்பை நாட்டிலேயே முதன்முதலாகத் தொடங்கி வைத்தார். பொது மக்களுக்காக முதன் முதலில் திருக்குறள் வகுப்பு நடத்தத் தொடங்கியவர் வள்ளலாரே என்பது இன்றைய இளந்தலைமுறையினர் அறிய வேண்டிய செய்தி.
சன்மார்க்க தேசிகன் ஊரன் அடிகளார்
வள்ளுவரும் வள்ளலாரும்
வர்த்தமானன் பதிப்பகம் ( 2016)