Skip to content

வாழ்க நீ எம்மான்

மகாத்மா காந்தி பஞ்சகம்

வாழ்க நீ எம்மான்
மகாகவி பாரதியார்

வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க!

அடிமை வாழ்வ கன்றிந் நாட்டார் விடுதலை யார்ந்து, செல்வம்
குடிமையி லுயர்வு, கல்வி ஞானமும் கூடி யோங்கிப்
படிமிசைத் தலைமை யெய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்!
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய, புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!

வேறு

கொடியவெந் நாக பாசத்தை மாற்ற
மூலிகை கொணர்ந்தவன் என்கோ?
இடிமின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ?
என்சொலிப் புகழ்வதிங் குனையே?
விடிவிலாத் துன்பஞ் செயும் பராதீன
வெம்பிணி யகற்றிடும் வண்ணம்
படிமிசைப் புதிதாச் சாலவும் எளிதாம்
படிக்கொரு சூழ்ச்சி நீ படைத்தாய்!

தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும்
பிறனுயிர் தன்னையும் கணித்தல்
மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம்
கடவுளின் மக்களென் றுணர்தல்
இன்னமெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்கு
இழிபடு போர், கொலை, தண்டம்
பின்னியே கிடக்கும் அரசிய லதனில்
பிணைத்திடத் துணிந்தனை பெருமான்,

பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
அதனி லுந் திறன்பெரி துடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
அறவழி யென்று நீ அறிந்தாய்
நெருங்கிய பயன்சேர் ஒத்துழை யாமை!
நெறியினால் இந்தியா விற்கு
வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து
வையகம் வாழ்கநல் லறத்தே!

பாரதியார் புராணத்தை எதற்காகப் பயன்படுத்துகிறார் ,
எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதை சற்றே ஊன்றிக் கவனியுங்கள்

அனுமனும் கிருஷ்ணனும் இதில் வருகிறார்கள்

மகாகவி பாரதியார் புராணங்கள் பொய் என்று முழக்கம் இட்டவர் …

“நன்று புராணங்கள் செய்தார்அதில் நல்ல கவிதை பலப்பல தந்தார்.
கவிதை மிகநல்ல தேனும்அக் கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்
புவிதனில் வாழ்நெறி காட்டிநன்மை போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.”

ஆனால் புராணங்கள் உரைக்கும் உண்மைகள் ,அறக் கருத்துக்கள் ,நல்ல கருத்துக்கள் எப்போது எடுத்துக் கொண்டாடப்பட வேண்டியவை…

இதைப் போலத்தான் வள்ளுவரும் தன்னுடைய குறள் கருத்துகளில் ஆங்காங்கே நாடறிந்த புராணக் கதைகளைப் பயன்படுத்தினார்…
புராணங்கள் உண்மை எனக் கூறவில்லை என்பது உளம் கொள்ளத்தக்கது.

சி இராஜேந்திரன்
www.voiceofvalluvar.org
02/10/2023