பேராசிரியர் முனைவர் பா. வளன் அரசு (1940)
திருமதி. மாரியம்மாள் திரு. பூபாலராயன் இணையரின் மகனாக 15.05.1940 ஆம் நாளன்று பிறந்தார். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி, காரைக்குடி அழகப்பா கல்லூரி, மதுரை காமராசர் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முறையே தமிழ் இளங்கலை, முதுகலை, கல்வியியல், முனைவர் பட்டம் முதலானவற்றைப் பெற்றவர். மதுரைப்பல்கலைக்கழகத்தில் காந்தியச்சிந்தனை முதுகலைப் பட்டம் பெற்றவர். தூயவளனார் கல்லூரி, தூய சவேரியார் கல்லூரி, தூய யோவான் கல்லூரி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதலான கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். உலகத் திருக்குறள் தகவல் மையத் தலைவராக தொடர்ந்து தொண்டாற்றி வருபவர். உலகத் திருக்குறள் மையத்தின் ஞானபீட விருது, தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, தில்லி நட்புறவு பேரவையின் இந்தியாவின் பெருமிதம் விருது முதலான 132 விருதுகளைப் பெற்றுள்ளார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதலான பத்து நாடுகளுக்குப் பயணித்து, தேமதுரத் தமிழைப் பரவச் செய்தவர். 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழுக்குத் துறைதோறும் பல்வேறு பணிகளைச் செய்துவருகிறார். மக்கட் பேறாக எழுவரை உடையவர். நாள்தோறும் தமிழ்த் தொண்டாற்றும் தமிழ்த்தொண்டர்.