Skip to content

திருவள்ளுவ வாடாப்பூ, சென்னை

திரு. வள்ளுவ வாடாப்பூ, சென்னை

 

‘ஆறுமனமே ஆறு,ஆண்டவன் கட்டளை ஆறு’ என்ற கவிஞர் கண்ணதாசனின் திரை இசைப்பாடலை

“ஓது குறளை ஓது நல்ல,வாழ்க்கையைப் பெற்றிட ஓது”

என்று பாடி மக்களிடம் திருக்குறளை பரப்பும் ஒரு தொண்டரை சென்னையில் சந்தித்தேன். நெல்லை மாவட்டம் உடன் குடியைச் சேர்ந்த வாடாப்பூ அம்மன் பெயரால் அழைக்கப்பட்டு தன் பணிக்களத்தை சென்னையில் முடித்து தன்னை வள்ளுவ வாடாப்பூவாக மாற்றிக் கொண்டவர் இவர்.

தொழிலாளியாகப் பணியாற்றினாலும் பேராசிரியராகப் பணியாற்றினாலும் ஒரு சிலர் தான் இப்படி தன் பெயர் உருவம் பழக்கம் என அனைத்தையும் வள்ளுவருக்காக அர்ப்பணித்து வாழ்கிறார்கள். அவர்களில் ஒருவரான வள்ளுவ வாடாப்பூ தான் குடியிருக்கும் சென்னை கவிஞர் கண்ணதாசன் நகரிலேயே திருவள்ளுவர் அறக்கட்டளை ஒன்றை நிறுவி குழந்தைகளுக்கு திருக்குறள் பயிற்றுவித்துப் பாராட்டி பரிசளிக்கின்றார். 21 ஆண்டுகளாக பரப்புரை செய்யும் இவரை நகரில் உள்ள அனைத்து திருக்குறள் அமைப்புகளும் பாராட்டி பட்டங்கள் வழங்கியுள்ளன.

திரை இசைப்பாடல் போலவே கருவிகளோடு குழுவாக சென்று பள்ளிகளிலும் பொது அரங்குகளிலும் இவர் படுவது திருக்குறள் பரப்புரையில் புதிய ஊக்கத்தை மற்றவர்களுக்கும் தருகிறது. இப்பாடல்கள் ஒலித்தட்டுகளாகவும், புத்தகங்களாகவும் வழங்கி வருகிறார். அத்துடன், மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் திருக்கோவிலுக்கு ஆதம்பாக்கம் மோகன்தாசுடன் சேர்ந்து சென்று திருக்குறள் முற்றோதலை ஒவ்வொரு திங்கள் முதல் ஞாயிறு செய்து வருகிறார். பெரியப்  பொருள் வளமோ, கல்வியாளரோ இல்லாமல் கூட திருக்குறளை வாழ்நாள் முழுக்க பரப்புரை செய்யும் இத்தகைய  பண்பாளர்கள் ,வள்ளுவத்தைப் போலவே வாடா மலர்கள் , போற்றப்பட வேண்டியவர்கள் ஆகும்.

வாழ்க வள்ளுவ வாடாப்பூ !

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்