Skip to content

திருவள்ளுவரும், அரும்பாவூர் – தழுதாழை மரச் சிற்பங்களும்

உலகத்திற்கு ஈடு இணை இல்லா வாழ்வியல் இலக்கியத்தை படைத்த வள்ளுவரை தம் இல்ல வாயிலின் முகப்பாக படைத்து, உவப்பாக, வாழ்ந்து வருபவர் திரு பூங்குன்றன் அவர்கள்.

அறம் பொருள் இன்பத்தை வாழ்வியல் நெறியாகக் கொண்டு விளங்குகிறார் திரு பூங்குன்றன் அவர்கள். இவர் ஒரு தூய தமிழ் பற்றாளர், திருக்குறள் அன்பர். நற்செயல்களுக்கு நற்றுணை நிற்பவர் .தமது வாழ்வியலில் இவற்றையெல்லாம் எவ்வாறு பின்பற்றி வருகிறார் என்பதற்கு மேலும் ஒரு சிறந்த உதாரணம் அவருடைய வணிக நிறுவனத்திற்கு அவர் சூட்டியிருக்கும் பெயர்களைக் குறிப்பிடலாம்.

மிகவும் பரபரப்பான வணிகப் பகுதியில் ரெடிமேட்ஸ் ,பார்மசி ,ஷூ மார்ட், கிப்ட் ஷாப் என ஆங்கிலத்தில் தெறிக்கவிடும் தெருவில், தமது “கடிகார கடைக்கு” “பவானி மணிப்பொறி அங்காடி “என்ற அழகுப்பெயரில் மிளிரச்செய்வார். மேலும்,ஒரு கடைக்கு “பவானி துணிக்கடை’ என்றும் பெயர் சூட்டி இருப்பார்.

தமது இயற்பெயரான ஜெயராமன் என்பதையும் பூங்குன்றன் என்று தமிழ்ப்படுத்தி அழகூட்டுவார். நீண்ட காலமாக தூய தமிழ்ப்பணியிலும், திருக்குறள் பரப்புதலிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். பெரம்பலூரில் நீண்ட காலமாக தம் வாழ்நாள் எல்லாம் தமிழ் தொண்டாற்றி, திருக்குறள் பரப்பி வாழ்ந்து மறைந்த “பாவலர் ஆடல்” அவர்களுடன் இணைந்து பணி செய்த சிறப்புக்குரியவர்.

இவ்வேளையில் தமது புதிய இல்லத்திற்கு உலக புகழ்பெற்ற அரும்பாவூர்- தழுதாழை மரச்சிற்ப கலைஞர்களைக் கொண்டு திருவள்ளுவர் சிற்பத்தினை தனது வாயிலில் நிறுவ வேண்டும் என்பதை பெருத்த அவாவாக கொண்டு நிறைவேற்றியுள்ளார்.

திருவள்ளுவரை முகப்பில் வைப்பதற்கு பலரும் தயங்கி இருக்கின்றனர். அறம், பொருள், இன்பம் படைத்த வள்ளுவரை வாயிலில் படைத்து அனைவரும் அறம் பொருள் இன்பத்தை அடைய வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில், அதற்கு உள்ளூர் சிறப்பையும் உணர்த்தும் வகையில் அரும்பாவூர் தழுதாழை சிற்பிகளைக் கொண்டு இதனை நிறைவேற்றியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தின் வேப்பந்தட்டை வட்டத்தில் அமைந்துள்ள அரும்பாவூர்-தழுதாழை எனும் ஊர் பழமையான மர வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றது. சிற்ப கோட்பாடுகளின்படி , தேர்கள்,சிலைகள் போன்ற தலைசிறந்த படைப்புகளை உருவாக்கி வருகின்றனர். இன்று தமிழ்நாட்டில் பல தேர்கள் அமைப்பதற்கும் ,அதற்கு ஏற்ப சிற்பங்கள் வடிப்பதற்கு பல மாவட்டங்களுக்குச் சென்று அமைத்து வருகின்றார்கள்.அனைத்தும் கைவினைஞர்களைக் கொண்டு கைகளால் செய்யப்படுபவை.

மேலும் பல சிற்பங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிவருகின்றன. பலருக்கும் பரிசுப் பொருட்களாகவும் அழகுப் பொருட்களாகவும் நினைவுப் பொருட்களாகவும் செய்து கொடுத்து வருகின்றனர்.தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய கலைஞர்களைக் கொண்டு திருவள்ளுவர் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

இல்லம்தோறும் வள்ளுவம்,
வாயில் தோறும் வள்ளுவர்,
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று என்றும் எண்ணி மகிழ்ந்திடவும், உள்ளூர் கலைகள் யாவும் உலகம் அறிந்திடச் செய்யவும் துணை நிற்கும் திரு பூங்குன்றன் அவர்களின் பணி வணங்கத்தக்கது.
என்றும்
தமிழோடும்,வள்ளுவத்தோடும் வாழ்க பல்லாண்டு!

திரு.பூங்குன்றன்,
பெரம்பலூர்.
9842365416