திருக்குறள் நூல் அறிவோம்
திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் – மு.வரதராசன்;
காதலும் பொருளும் வாழ்க்கைப் படிகள் என்பதாலும், அறமே வாழ்க்கையின் உயர்நிலை என்ற நோக்கத்தாலும் இந்நூலை காமத்துப்பால், பொருட்பால், அறத்துப்பால் என்கிற முறையில் அமைத்திருக்கிறார். இந்நூலில் இக்காலத்திற்குத் தேவையான, சிறப்பான குறள்கள் மட்டுமே சிறப்பிடம் பெற்றுள்ளன.
காமத்துப்பாலில் ஒருதலைக் காமத்தையோ, பொருந்தாக் காமத்தையோ திருவள்ளுவர் கூறவில்லை என்றும், “அன்பின் ஐந்திணை’ என்று சான்றோர் புகழ்ந்த ஒத்த அன்புடைய காத
லரின் வாழ்க்கையையே கூறுகின்றார் என்றும் கூறும் மு.வ., காதலையும் தொண்டையும் ஒப்புமைப்படுத்திக் கூறுமிடம் அருமை.
மருதத்திணையில் திருவள்ளுவர் செய்திருக்கும் சீர்திருத்தத்தை விளக்குமிடத்து, “” திருவள்ளுவர் கூறும் மருதத்தில் பரத்தை என ஒருத்தி இல்லை; தலைவன் பரத்தையை நாடிச் செல்வதும் இல்லை. பொருள் காரணமாக மகளிர் சிலர் ஒழுக்கத்தை விற்பதும் கூடாது. ஒழுக்கமற்ற அந்த மகளிரை ஆடவர் நாடுவதும் கூடாது என்று பொருட்பாலில் வன்மையாகக் கடிந்த திருவள்ளுவர், மருதத்திணைக்கு முன்னோர் வகுத்தோதிய இலக்கணத்தையும் புறக்கணித்துப் பரத்தையர்க்குக் காமத்துப்பாலில் இடம் இல்லாமல் செய்தார்” என்கிறார்.
அறத்துப்பாலில், “”மனம் பண்படும் இடம் காதல் வாழ்க்கை; மனம் பயன்படும் இடம் பொதுவாழ்க்கை; மனம் வாழும் இடமே தனி வாழ்க்கை. திருவள்ளுவர் காமத்துப்பாலில் காதல் வாழ்க்கையை விளக்கி, காதல் கொண்டவரிடம் கலந்தும்- கரைந்தும் மனம் பண்படும் வகையைக் கூறியுள்ளார்; பொருட்பாலில் பொது வாழ்க்கையை விளக்கி, அறிவின் வழி இயங்கிப் பொதுக் கடமையைச் செய்து மனம் பயன்படும் வகையைக் கூறியுள்ளார்; அறத்துப்பாலில் தனி வாழ்க்கையை விளக்கி அன்பை வளர்த்து அறத்தைப் போற்றி மனத்தூய்மை பெற்று வாழும் வகையைக் கூறியுள்ளார்”
என்கிற மு.வ.வின் அற்புதமான இந்த வைர வரிகள்தாம் திருக்குறளின் சாரம்
என்பது தெளிவாகிறது.
திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் – மு.வரதராசன்; பக்426; ரூ200; பாரி நிலையம், சென்னை-108; 044-2527 0795.
தொகுப்பு
சி இராஜேந்திரன்
www.voiceofvalluvar.org
02/02/2023