திருத்தணிகை சரவணப் பெருமாளையர் (1799 – 1840)
திருத்தணியில் வாழ்ந்த கந்தப்பையர் அவர்களின் இளைய மகனாவார். இவரின் உடன் பிறந்தோர் விசாகப் பெருமாளையர். இவர்கள் இருவரும் கந்தப்பையருக்கு இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தவர்கள். ‘உயர்ந்தவர்’ என்ற பொருளில் ஐயர் என்ற பட்டப் பெயர் இவர்களின் பெயரோடு ஒட்டிக் கொண்டது. இவர் கல்லாரகரி வீரசைவ மடத்து அதிபர் வழி வந்தவர். வீர சைவ மரபினர். ஆதலால் முருகன் பெயரைத் தாங்கி விசாகப் பெருமாள், சரவணப் பெருமாள் எனப் பெயர் வைக்கப் பெற்றனர்.
இளமையில் தந்தையாரிடம் கல்வி கற்றார். பின்னர் இலக்கணக் கடல் இராமானுசக் கவிராயரிடம் இலக்கண இலக்கியங்களை முறையாகக் கற்றார். சகோதரர் இருவரும் தமிழில் பெரும்புலமை பெற்றனர். இருவரும் சென்னை, மாநிலக்கல்லூரியில் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றினர்.
முதன்முதலில் 1830 ஆம் ஆண்டில் திருக்குறளைப் பரிமேலழகர் உரையோடு பதிப்பித்த சிறப்புக்குரியவர். இப்பதிப்பில் திருவள்ளுவமாலையையும் உரையெழுதிப் பதிப்பித்தார். திருவள்ளுவமாலைக்கு முதன்முதலில் உரையெழுதிய பெருமகன் இவரே. அருமையான ஆராய்ச்சிப் பதிப்பாக இப்பதிப்பு வெளிவந்தது. 1838 இல் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. அதன் பிறகு பல பதிப்புகளை இந்நூல் கண்டது. இப்பதிப்பில் இவர் எழுதிய திருவள்ளுவர் சரித்திரம் இடம் பெற்றுள்ளது. திருவள்ளுவரைப் பற்றி அச்சில் வெளிவந்த முதல் வரலாறு இது எனக் கொள்ளலாம். இதில் பல புராணப் புனைவுகளும் இடம்பெற்றுள்ளன. திருக்குறளைப் பதிப்பித்த அனைவரும் இந்தத் திருவள்ளுவர் வரலாற்றினைத் தங்கள் பதிப்பில் இணைத்துக் கொண்டனர். சிலர் கூட்டியும் குறைத்தும் நீட்டியும் அவரவர் விருப்பம் போல திருவள்ளுவர் வரலாற்றினைப் பதிப்பித்தனர். எல்லாவற்றிற்கும் அடித்தளமிட்டது 1830 இல் சரவணப் பெருமாளையர் எழுதியதே. இவ்வரலாற்றினைச் சில பாடல்களோடு பேராசிரியர் சு.அனவரத விநாயகம் பிள்ளை (1877 – 1940) அவர்கள் 1908 இல் தனி நூலாக வெளியிட்டார்.
திருக்குறளோடு திருவள்ளுவமாலையை உரையோடு பதிப்பித்த இவர் பல நூல்களையும் பதிப்பித்துள்ளார். நாலடியார், நன்னூல், நைடதம், திருவெங்கைக் கோவை, ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நறுந்தொகை, மூதுரை, நன்னெறி முதலிய நூல்களுக்கு உரையெழுதிப் பதிப்பித்தார். பூகோள தீபிகை, இயற்றமிழ் சுருக்கம், அணியியல் விளக்கம், குளத்தூர்ப் புராணம், பாலபோத இலக்கணம் முதலிய நூல்களை இயற்றினார். பிரபுலிங்க லீலையின் முதல் மூன்று கதிக்கு (மாயை உற்பத்தி வரை) உரை எழுதினார்.
கி.பி. 1830 இல் திருக்குறள் பரிமேலழகர் உரையை அச்சிட்ட வேகத்தில் திருவாசகம், திருவிளையாடற் புராணம், நாலடியார் ஆகியவற்றையும் அச்சிட்டார் எனக் கூறுவர். நல்வழி, வாக்குண்டாம், பழமலையந்தாதி ஆகிய நூல்களையும் பதிப்பித்துள்ளார். குன்றக்குடி மஸ்தான் நான்மணிமாலையைப் பாடியவர். களத்தூர் புராணம் இவர் பாடியது என்பர். மகாவித்வான் என சமகால அறிஞர்களால் போற்றப் பெற்றவர்.