Skip to content

திரு. திருநாவுக்கரசு,முசிறி

திரு. திருநாவுக்கரசு, முசிறி

“அப்பரடிப்பொடி” என்ற பெயருடன் தேவாரம் திருவாசங்களை பயின்றும் பயிற்றுவித்தும் வந்த முசிறி திருநாவுக்கரசர் தான் தமிழ்நாட்டிலேயே முதல் முதலாகத் திருவள்ளுவருக்கு காவிரிக் கரையில் கோவில் கட்டியவர் என்ற பெருமைக்குரியவர். சிலம்பொலி செல்லப்பன் உறவினர்கள் சிலரும் முசிறி தமிழ் அன்பர்களும் சேர்ந்து மிகப்பெரிய திருவள்ளுவர் சிலையை காவிரி ஆற்றின் வடக்கரையில் எழுப்பி அதைக் கோவில் போல வழிப்பட்டு வந்தார்கள். செய்தித் தாளில் இதைப் படித்தபோது 20 ஆண்டுக்கு முன் இதை முழுமையாக ஏற்க முடியாமலும், அதே நேரத்தில் புதிய முயற்சி என்று பாராட்டியும் பேசி வந்தேன். அதை நேரில் பார்க்க எனக்கு 10 ஆண்டுகள் தேவைப்பட்டது.

இப்படித்தானே எல்லா ஊர்களிலும் இருக்கும். தொடர்ச்சியாக அவர்களும் பரப்புரை செய்து விரிவுப்படுத்தவில்லை தமிழறிஞர்களும் அதைப் போற்றி மக்களிடம் கொண்டு செல்லவில்லை. அதே போல் தான் மதுராந்தகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருக்குறள் பீடமும் மக்களால் போற்றப்படாமல் உள்ளது. இதுவே மற்ற மொழி பேசும் மக்களாயிருப்பின் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவர் என்ற எண்ணம் மேலோங்குகிறது.

நம் திருநாவுக்கரசர் யார் சொன்னாலும் சொல்லட்டும் என்று ஐயன் திருவள்ளுவருக்கு தொடர்ந்து விழா எடுத்து வருகிறார். அண்மையில் சென்னை கோ. ப. செல்லம்மாளுக்கு முசிறியில் பாராட்டு விழா நடந்தபோது  நேரில் சென்று இந்தத் தொண்டரின் புகழை அறிந்து வந்தேன்.

திருக்குறளுக்கு அருமையான உரை நூல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியராக இருந்து மாவட்டக் கல்வி அலுவலர் வரை உயர்ந்திருந்தாலும் ஆன்மீகமும் வள்ளுவமும் பரப்பும் தொண்டராகவே இவரை உலகுக்குப் பறைசாற்றுவோம்!

 

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்