Skip to content

“திருக்குறளும் காந்தியடிகளும்”-2

திருக்குறளும் காந்தியடிகளும் -2
சி இராஜேந்திரன்

மோகன் , நட்பு உறவு பழகிய மனிதர்கள் என்ற ஒரு வட்டத்தை விட்டு ,தான் இதுவரை பார்த்திராத இடத்திற்கு பெரும் கனவுகளைச் சுமந்து கொண்டு கப்பல் மூலம் பயணிக்கிறார் .கப்பலில் பயணிக்கும் போது இளம் வயதுக்கே உரிய எதையும் கூர்ந்து ஆராயும் கண்கொண்டு பார்க்கிறார் .பயணக் குறிப்பு ஏட்டில் எல்லா விவரங்களையும் தெளிவாகக் குறிப்பிடுகிறார் .

பின்னாளில் பல லட்சக்கணக்கான மக்களிடையே உரையாற்றி வழிநடத்திய காந்தியடிகள் ,கப்பலில் பயணிக்கும் போது எல்லோரும் சென்று உணவு உண்ணும் இடத்திற்கு சென்று உணவு உட்கொள்ள தயங்குகிறார், கஊச்சப்படுகிறார் .அறையிலேயே தான் கொண்டு வந்த உணவு பொருள்களை தொடக்கத்தில் உண்கிறார் .ஆங்கிலத்தில் உரையாடுவதற்கும் தயக்கம் . மெல்ல மெல்ல இவற்றை எவ்வாறு அவர் வெற்றி கொண்டார் என்பது அவர் வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும் பாடம்.

மோகனுடன் பயணித்த அப்துல் மஜீத் மஜும்தார் என்ற இரண்டு பயணிகளுடன் சற்றே நெருங்கிப் பழகுகிறார். தனிமையை வென்று விடுகிறார்.அவர்களின் துணையோடு எப்படியோ கப்பலில் சைவ உணவு உண்ண ஏற்பாடு செய்து விடுகிறார். பலரும் எதிர்கொள்ளும் முதல் ‘கடல் பயண ஒவ்வாமை’ ( sea sickness)அவருக்கு ஏற்படவில்லை.

மோகன் பயணம் செய்த கப்பல் பல துறைமுகங்களில் நின்று செல்கிறது துறைமுக நகரங்களில் துறைமுகத்தை ஒட்டிய பகுதிகளில் ஆடல், பாடல் கேளிக்கைகள் இருக்கும் .திருடர்கள் பயமும் இருக்கும் .பணம் மற்றும் உடைமைகளை பாதுகாத்துக் கொள்வதோடு பணத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் .

அவர் செய்து கொடுத்த சத்தியங்கள் மூன்றும் இங்கிலாந்து செல்லும் பயணத்தின்போதும்
இங்கிலாந்தில் வசிக்கும்போதும் பலமுறை சோதனைகளுக்கு ஆட்படுத்தப்பட்டன .

ஆனால் மிகுந்த மனத்தின்மையோடு இருந்ததால் தவறு செய்வதிலிருந்து மோகன் தப்பித்து விடுகின்றார். மோகன் தன்அம்மாவுக்கு செய்து கொடுத்த மூன்று சத்தியங்கள் ,பார்வதி அம்மன் கையில் உள்ள சூலாயுதம் போன்று அவரைக் காத்து நிற்கின்றன.

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது. (குறள் 24)

திண்மை (மனவலிமை) என்னும் தோட்டியால் (அங்குசத்தால்) பொறிகளாகிய யானை ஐந்தினையும் தத்தம் புலன்கள் மேல் செல்லாமல் காக்கக்கூடியவன், எல்லா நிலத்திலும் மேலானது என்று சொல்லப்படும், வீட்டு நிலத்திற்கு ஓர் வித்தாகும் என்பது இதன் பொருளாகும்.

பொறிகள் யானைகள்; புலன்கள் அவை சென்று மேயும் இடமாகிய புலங்கள்; அதனால் அழிவது உயிரைப் பற்றிய அறிவு ,அந்த அறிவு அழியாமல் வலிமையுறுதலே உரன் என்னுந் தோட்டி. இத்தோட்டியால் பொறிகளை அடக்கி ஆள்பவன் வீடுபேறு என்ற நிலத்திற்கு ஒப்பற்ற விதையாவான்.

மேலும் அறிவின் பயனே எது நல்லது எது தீயது என்று பகுத்து உணர்வதுதான் மனம் போன போக்கில் பொறிகளும் புலன்களும் செல்லக்கூடாது . ஒருவன் தன் அறிவு கொண்டு, நன்மை தீமைகளை பகுத்தாராய்ந்து தனக்கும் பிறருக்கும் பயனுள்ள ,நன்மை தரக்கூடிய செயல்களைச் செய்வதே அறிவுடைமையாகும் .

அந்த வகையில் 19 வயது நிரம்பிய மோகன்தாசஸுக்கு மனம் தடுமாறும் போதெல்லாம் அவரை காத்து நின்றது அவர் சிறுவயதில் இருந்து கடைபிடித்த வாய்மை இன்னா செய்யாமை, இறை நம்பிக்கை போன்ற உயரிய விழுமியயங்களும் அவரது அன்னைக்கு அவர் செய்து கொடுத்த சத்தியமும் தான்.

செப்டம்பர் -2024
கிராம ராஜ்ஜியம்(2)
சி இராஜேந்திரன்
வள்ளுவர் குரல் குடும்பம்
www.voiceofvalluvar.org

கிராம ராஜ்யம் சந்தா விவரம்
தனி இதழ் ரூபாய் 30/-
ஆண்டுச் சந்தா ரூபாய் 360/-

வங்கி : ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
வங்கிக்கிளை : வேலம்பாளையம்
கணக்கு எண்: 10235159389
IFSC Code: SBIN0012787