Skip to content

திருக்குறள் மாணவர் மாநாடு- 2.0

தமிழ்த் திறனறித் தேர்வில் வெற்றிபெற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களைக் கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட மாநில அளவிலான திருக்குறள் மாணவர் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இது இரண்டாம் மாநாடு. கடந்தாண்டும் இந்தமாநாடு விருதுநகர் மாவட்டத்தில் நடத்தப்பட்டது. ஜனவரி மாதத்தில் குமரிவள்ளுவர் சிலை 25 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த திருக்குறள் மாணவர் மாநாடு இனி ஆண்டுதோறும் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். இது மாணவர்களுக்கான ஒரு நல் வாய்ப்பு இது குறித்து விரிவாக இந்த பதிவில் விளக்குவோம்.

தமிழ்நாடு அரசு தமிழ்த் திறனறித் தேர்வு என்ற ஒன்றினை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது. பதினோறாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்தத் திறனறித் தேர்வை எழுத வேண்டும். தமிழ் பாடத்தில் அவர்களது புலமையை சோதிக்கின்ற மாதிரி அமைகின்ற இந்தத் தேர்வின் வெற்றி யாளர்கள் 1500 பேருக்கு 11,12 வகுப்பு படிக்கின்றவரை மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும். அறிவியல் , சமூக அறிவியல் , கணிதம் போன்ற பாடங்களில் மாணவர்கள் ஆர்வம் கொண்டிருப்பது போல் தாய்மொழிப்பாடமாகிய தமிழ் மொழி பாடத்திலும் அவர்கள் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இத்திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். அந்த மாணவர்களுக்கு மேலும் இலக்கிய ஆர்வம் ஊட்டவும், கல்வி ஆர்வம் ஊட்டவும், உயர்கல்வி வழிகாட்டுதலை மேற்கொள்ளவும் ஒருநல் வாய்ப்பாக இந்ததிருக்குறள் மாணவர் மாநாடு கடந்து இரண்டு அண்டுகளாக நடத்தப்பெறுகிறது. தமிழர்களின் தனித்த அடையாளம் வள்ளுவம். வள்ளுவர் எப்பொழுதும் நமக்கொரு ஆசானாக, நன்பராக இருந்து அறிவுரை சொல்லக் கூடியவர். இதை மாணவர்களுக்கு உணர்த்தும் விதத்தில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. சிறுகதை போட்டி, கவிதை போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி என்ற பல்வேறு குறள் சார்ந்த போட்டிகள், இலக்கியம் சார்ந்தபோட்டிகள், உயர் கல்வி வழிகாட்டல் என்று மாணவர்களை மகிழ்விப்பதற்கான இசை அரங்குகள் சிவகாசி குட்டி ஜப்பானாக இருப்பதால் அங்கிருந்து உற்பத்தியாகும் பட்டாசுகளைக் கொண்டு அருமையான வாண வேடிக்கை நிகழ்ச்சி, மாணவச் செல்வங்களை மகிழ்விக்கும் மேஜிக்க்ஷோ என்று ஒரு முழுமையான அறிவுக் கொண்டாட்ட நிகழ்ச்சியாக, இந்த நிகழ்ச்சியை மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

மாபெரும் தமிழ் ஆளுமைகள் பலர் இங்கு பங்கேற்றார்கள் பேச்சாளர்கள், நெல்லை ஜெயந்தா, பர்வீன் சுல்தானா, பாரதி கிருஷ்ணகுமார் அவர்களுடைய ஆழமான தமிழ் உரைகளை கேட்டுமாணவர்கள் ரசித்தார்கள். கல்வியாளர் விஜயாலயன், கல்வியாளர் நெடுஞ்செழியன் போன்றோர் மட்டும்மின்றி நாற்பதிற்கும் மேற்பட்ட அரசுபள்ளி ஆசிரியர்கள் , தனியார் பள்ளிஆசிரியர்கள் மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை நடத்தினார்கள்.
இசைக் கலைஞர் ஜேம்ஸ் வசந்தன் நடத்திய தமிழோசை இசை நிகழ்ச்சி, புகழ்பெற்ற மேஜிக் நிபுணர் நடத்திய மேஜிக் நிகழ்ச்சி இந்த விழாவிற்கு கூடுதல் சிறப்பு சோ்த்தன.

கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் இந்த நிகழ்ச்சியில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து, வினாடி வினா நடத்துவதற்கு ஒரு வாய்ப்பினை மாவட்ட நிர்வாகம் எனக்கு வழங்கியது. அதற்கு எனது மாண்புமிகு மாணவரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான முனைவர் .வீ.பா.ஜெயசீலன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சி மிக சிறப்பாக நடை பெறுவதற்கு முன்நின்று உதவியவர்கள் மாவட்ட ஆட்சியரின் பாராட்டுரையின்படி இரண்டு முக்கியமானவர்கள். அதில் ஒருவர் விருதுநகர் மாவட்ட ஊரகவளர்ச்சிதுறையின் திட்ட இயக்குநராக இருக்க கூடியவரும், கால்நடை மருத்துவ கல்லூரியில் என்னுடன் படித்தவருமான நண்பர் இரா.தண்டபாணி, மற்றொருவர் எனது மாண்புமிகு மாணவிகளில் ஒருவராகவும், இங்கேதுணை ஆட்சியராகவும் இருக்க கூடிய திருமதி. அனிதாதர்மராஜ் அவர்கள்.

வினாடி வினா நிகழ்ச்சி காலிறுதி, அரையிறுதி, நிறைவுசுற்று என்று சிறப்பாக நடைபெற்றது. நிறைவுசுற்றை அரங்கத்தில் 90 நிமிடம் மேடையில் 1000 மாணவர்களுக்கு முன்னால் நடத்தினோம். திருக்குறளில் ஆழமான கேள்விகளுக்கு அசராமல் பதில் சொன்னார்கள் தமிழ்நாட்டு தம்பி, தங்கைகள். அறிவுக்கொண்டாட்டமான இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். அடி தழீஇ நில் என்றபெயரில் குறளின் இரண்டாம் அடியைக் கொடுத்து முதல் அடியை கேட்கும் ஒரு சுற்று, குறட்சொற்கள் என்ற தலைப்பில் புகழ்பெற்ற சிலகு றளில் இடம் பெற்ற சொற்களை அடிப்படையாக வைத்து,அந்த சொல் இடம் பெறக் கூடியகுறள்களை கண்டுபிடித்தல், என்ற அடிப்படையில், பெருமை, நாடு, புகழ், இனிது போன்ற சொற்கள் இடம் பெறும் திருக்குறள் பாக்களை சொல்லசொல்லி, மாணவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அனைவராலும் மிகவும் ரசிக்கப்பட்டஒருசுற்று, காணொலிச்சுற்று. புகழ்பெற்ற திரைப்படக் காட்சிகளையும், பாடல்களையும், துண்டுகளாக ஒலிப்பரப்பி அவற்றோடு தொடர்புடைய திருக்குறள் பற்றிகேள்வி கேட்கப்பட்டு, விளக்கப்பட்டது. அதிலும் மாணவர்கள் சிறப்பாக பங்களிப்பு செய்தார்கள். பேரறிவுச் சிலை கொண்டாடத்தை ஒட்டிகொண்டு வரப்பட்ட வெள்ளிவிழா மலரியிலிருந்து பல்வேறு எழுத்தாளர்கள், தங்களுக்கு பிடித்த குறள் பற்றி தொிவித்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, வினாக்கள் கேட்கப்பட்டது. அதில், தூத்துக்குடி அணியை சேர்ந்த மாணவர் விஷ்ணு மிகச் சிறப்பாக பதில் தந்தார். வள்ளுவத்தில் தொடங்கி வைரமுத்து வரைக்கும் அவர்களுக்கு இருந்த இலக்கிய பரிட்சயத்தை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துவதாக அமைந்தது. இதனால் தமிழ்நாட்டு பாடநூல் கல்வியியல் கழகம் வெளியீட்டு இருக்கக் கூடிய தமிழ்பாட நூல்கள், தமிழ் இலக்கியத்தை மிக ஆழமாக இன்றைய பள்ளியில் தமிழ் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றன. அதில் அவர்களுக்கு தொியாத தமிழ் எழுத்தாளர்களே இருக்க முடியாது என்கிற அளவுக்கு, பழமைக்கு பழமையும், புதுமைக்கு புதுமையும் கொண்ட அனைத்து எழுத்தாளர்களையும் இதில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். கவிஞர் பிரமிள் பற்றியும், கு.அழகிரிசாமி பற்றியும், கவிஞர் மு.மேத்தா பற்றியும், அவர்கள் அற்புதமாக விடை சொன்னார்கள்.

இதுவரை பொதுவரங்கில் பரவலாகப் பகிரப்படாத பல்வேறு அரிய குறள்களை மாணவச் செல்வங்கள் கூறியதைக் கேட்டு, அரங்கம் அதிர்ந்து அதிர்ந்து கரவோலி எழுப்பித் தன் மகிழ்ச்சியைக் வெளி வெளிப்படுத்தியது. அது ,வான் புகழ் வள்ளுவனில் காதுக்கும் எட்டியிருக்கக்கூடும்.

விழாவில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று, மாவட்டஆட்சியர் ஆற்றிய நிறையுரை, வாண வேடிக்கை எல்லாம் நிகழ்த்தி, வான்புகழ் வள்ளுவரின் சிறப்பை, வள்ளுவத்தை மாணவர்களிடம் கொண்டு சோ்த்த மாவட்ட ஆட்சியர், சிவகாசி பட்டாசு நிறுவனம் ஒன்றில் இருந்து கண்ணைக் கவரும் வானவேடிக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்திருந்தார். இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு குறிப்பு. வானத்தில் பட்டாசு வெடிப்பதை நிறைய பேர் அது வானத்தில் நடக்கும் வேடிக்கை நிகழ்ச்சி என்று எண்ணி வானவேடிக்கை என்று இரண்டு சுழி ‘ன’ போட்டு எழுதுகிறார்கள். அது தவறு ,’வாணவேடிக்கை என்று மூன்று சுழி ன போட்டு எழுத வேண்டும். கவிக்கோ அப்துல் ரகுமான் மின்னலை, “வானம் நடத்தும் வாண வேடிக்கை” என்று தன் கவிதையில் படிமப் படுத்துவதை நினைவில் கொள்க. காவியக் கவிஞர் வாலியும் ஒரு பாடலில் ‘வைக்கிற வாணம் வானையே தைக்கணும் தம்பி விடு நேராக’ என்று எழுதினார்.

வாணவேடிக்கை பலரையும் கவர்ந்ததை என்னிடம் குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியர், தனது நிறையுரையில் வேடிக்கை மனிதனைப் போல் நாம் வீழ்ந்து விடக் கூடாது என்று பாரதியின் கவிதையினையும் குறிப்பிட்டு, மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டினார். குறள் கூறி அறிவுரை தந்தார்.

இலர் பலராகிய காரணம் நோற்பார்
சிலர் பலர் நோலாதவர்-என்ற கு றளையும்

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார்பலர்.
என்ற குறளையும் இணைத்துக்காட்டி வெற்றியாளரர்கள் சிலராகவும் இடையில் விட்டுச் செல்பவர்கள் பலராகவும் இருப்பதைச் சுட்டிக்காட்டி நீங்கள் எப்பொழுதும் இறுதி வரை சென்று வெல்வோராக இருக்க வேண்டும் என்ற உற்சாகத்தை ஒவ்வொரு மாணவர்கள் உள்ளத்திலும் விதைத்தார்.

நாம் விதைத்து கொண்டே இருப்போம்; முளைத்தால் மரம்! முளைக்காவிட்டால் மண்ணிற்கு உரம் என்னும் வாசகத்திற்கு கட்டியம் கூறுவதாக அமைந்தது கா்மவீரர் காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கினங்க நடைபெற்ற திருக்குறள் மாணவர் மாநாடு.

வைகறை வாசகன்
04.02.25