Skip to content

தேம்பாவணியில் திருக்குறள்-1

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு (2024)நல்வாழ்த்துகள்

திருக்குறளை முதன்முதலில் மொழி பெயர்த்தவர் வீரமாமுனிவர் (1680- 1747).இவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் . 1711 ஆம் ஆண்டில் மதுரையை இவர் வந்தடைகிறார்.முதல் முதலில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்ட மொழி இத்தாலி மொழி என்ற நாம் அறிகிறோம் .

வீரமாமுனிவர் தமிழ்நாட்டில் தங்கியிருந்து தமிழ் மொழியில் , தமிழ் எழுத்தில் பல சீர்திருத்தங்களை செய்து ,தமிழ் மொழிக்கு பெரும் பங்காற்றி தமிழகத்திலேயே மறைந்தார் .

அவர் எழுதிய ஒரு தலைசிறந்த நூல் தேம்பாவணி . திருக்குறளில் தோய்ந்த கம்பர் இராமாயணத்தில் பல இடங்களில் திருக்குறள் சொற்றொடர்களையும் திருக்குறள் கருத்துக்களையும் ஆங்காங்கே பொதித்துள்ளார் .கிட்டத்தட்ட 600 – 700 இடங்களில் குறள் கருத்துகள் இருப்பதாக அறிஞர் பெருமக்கள் கூறுகின்றனர்.

அதேபோல திருக்குறளில் தோய்ந்த வீரமாமுனிவர் தனது தேம்பாவணி காப்பியத்தில் எவ்வாறெல்லாம் திருக்குறள் கருத்துகளை கூறியுள்ளார் என்பதை சற்றே பார்க்கலாம் என்று எண்ணம் தோன்றியது

கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்னால் என்னுடைய அலுவலக நண்பர் திரு ஞானதாஸ் மதுரை,இந்த நூலின் மூன்று தொகுதிகளை என்னிடம் கொடுத்தார் இந்த நூல் தமிழ் இலக்கியக் கழகம் தூத்துக்குடி 1961 இல் வெளியிட்டது.

இந்த நூலில் வித்வான் ஆரோக்கியம் பிள்ளை எழுதிய விளக்கக் குறிப்புகள் உள்ளன.

விருத்தாசலத்துக்கு அருகில் 6 கி மீ தொலைவில் உள்ள கோனாங்குப்பம் எனும் சிற்றூரில் ஒரு கோவில், அடிகளார் கட்டி மரியாளின் திருவுருவை தமிழ்நாட்டுப் பெண் உருவில் அமைத்து “பெரியநாயகி” எனப் போற்றினர் . அந்த அன்னையின் அருளை பெற்று முனிவர் பாடிய நூலே தேம்பாவணி என்னும் பெரும் காப்பியமாகும் .இது 1726 இல் இயற்றப்பட்டது

தேம்பாவணியில் மொத்தம் 3615 பாக்கள் உள்ளன. இது 36 படலங்களை உடையதாய் விளங்குகின்றது .36 படங்களும் மூன்று காண்டங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன .ஒவ்வொரு காண்டமும் 12 படங்களை உடையது .காப்பிய இலக்கணப்படி நாட்டுப்படலம், நகரப் படலம் கூறிய பின் காப்பிய தலைவனாகிய வளன் (Joseph)வரலாறு கூறப்படுகிறது.

முதல் காண்டம் 1961 ஆம் ஆண்டும்,மூன்றாவது காண்டம் திசம்பர் 1964 லிலும் வெளிவந்துள்ளது.

தமிழ் மரபுப்படி அறம், பொருள், இன்பம், வீடு என்ற உறுதிப் பொருள் நான்கு பற்றி உரைக்கவே தேம்பாவணி எழுந்ததாகக் கூறுகிறார் வீரமாமுனிவர்.

இதோ பாயிரம் முதல் பாடல்..,

சீரிய வுலக மூன்றுஞ் செய்தளித் தழிப்ப வல்லாய்
நேரிய வெதிரொப் பின்றி நீத்தவோர் கடவு டூய
வேரிய கமல பாதம் வினையறப் பணிந்து போற்றி
யாரிய வளன்றன் காதை யறமுதல் விளங்கச் சொல்வாம்.(1)

சீரிய உலகம் மூன்றும் செய்து அளித்து அழிப்ப வல்லாய்,
நேரிய எதிர்ஒப்பு இன்றி நீத்தஓர் கடவுள் தூய,
வேரிய கமல பாதம் வினைஅறப் பணிந்து போற்றி,
ஆரிய வளன்தன் காதை அறம்முதல் விளங்கச் சொல்வாம்.(1)

சிறந்த மூன்று உலகங்களையும் படைத்துக் காத்து அழிக்கவும்வல்லவனாய், தனக்கு நேராக வேறு உயர்வும் ஒப்பும் இன்றி யாவற்றையும் கடந்து நின்ற ஒரே கடவுளின் தூய்மையும் நறுமணமும் கொண்ட தாமரை மலர் போன்ற பாதத்தை நம் பாவ வினை அறுமாறு மெய்யால் வணங்கியும் வாயால் வாழ்த்தியும், அறங்களால் உயர்ந்தோனாகிய வளனின் கதையை அறம் முதலிய நாற்பொருளும் எளிதாக விளங்குமாறு சொல்வோம்.

தொடர்ந்து பயணிப்போம்

வளரும் அன்புடன்
சி இராஜேந்திரன்
www.voiceofvalluvar.org