திரு. தயாபரன், புள்ளம்பாடி, திருச்சி(மா)
ஒரே வீட்டில் தந்தையும் தனயனுமாக இருவர் திருக்குறள் திருத்தொண்டர்களாக தயாபரனும் திருமூலநாதனும் விளங்குகிறார்கள் என்பது இத்தொகை நூலுக்கே சிறப்பாக அமையும் என்று கருதுகிறேன். தயாபரன் துறையூரில் ஆசிரியராகப் பணியாற்றிய போது 3 வயது குழந்தை தாயார் குளிக்கச் செல்லும்போது ஒலிக்கச் செய்திருந்த பக்திப்பாடல்களை அவர் வெளியே வந்தபோது தானும் பாடியிருக்கிறான். அதைக் கேட்டு வியந்த அம்மையார் மீண்டும் மீண்டும் பாடச் சொல்ல அப்படியே இசைமாறாமல் துல்லியமாக உச்சரித்துப்பாடியிருக்கின்றான். அதைக் கேட்ட தாயும் தந்தையும் அவனை உச்சி முகர்ந்து வாழ்த்தியிருக்கிறார்கள்.
அன்றிலிருந்து திருமூலநாதனின் நினைவாற்றலையும், அறிவாற்றலையும் வளர்த்தெடுப்பதையே முழு நேரப் பணியாகச் செய்துள்ளார்கள். பல குடும்பங்களில் குழந்தைகள் இப்படி ஆற்றலை வெளிப்படுத்தும் இயல்பு இயற்கையின் வரத்தால் அமையுமென்றாலும் தயாபரன் குடும்பத்தைப் போல இப்படி கிடைத்த செல்வத்தைப் பேணிக்காத்து உயர்த்தி மகிழும் பக்குவம் எல்லோருக்கும் வருவதில்லை.
அதனால், திருமூலநாதனை உலகம் ஏற்றுப் பாராட்டும் அத்தனை நிகழ்வுகளிலும் தயாபரன் இருந்துள்ளார் என்பதைவிட அவரே சிறந்த பரப்புரையாளராகவும் விளங்குகிறார். மேலும் அவர் தன் பங்களிப்பாக திருக்குறள் மனனம் செய்து 1330 யும் ஒப்பிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 1 இலட்சம் ரூபாய்க்கு மேலாக பரிசளித்து பாராட்டும் நிகழ்ச்சிகளை இருபத்தி ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருவது தமிழகத்தில் யாரும் செய்ய முடியாத அளப்பரிய தொண்டாகும்.
அவர் மட்டுமல்ல அவர் மனைவி, மகள், மருமகன், திருமூலநாதன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து திட்டமிட்டு உழைப்பாளர்கள் தினமான மே முதல் நாள் திருச்சியை மையமாக வைத்து நடத்தி வருகிறார்கள்.
திருக்குறள் இப்படி எல்லாக் குடும்பத்தையும் தமிழ்நாட்டில் ஈர்த்து செயல்பட வைக்கும் பொன்னாள் ஒன்று வரும் என்ற நம்பிக்கையில் தான் நானும் அலைகிறேன், திரிகிறேன், எல்லோரையும் ஓரணியில் திரட்ட முயல்கிறேன்.
எனவே,தனயன் தந்தை தாய் என மூவரையும் முதன்படுத்தி இத்தொகை நூலுக்கு சிறப்பு செய்கிறேன்.