Skip to content

திரு. தன்மானன்,திருப்பூர்

திரு. தன்மானன், திருப்பூர் தொண்டர் வரிசையில் தன்மானன் தனித்துவமானவர் என்று குறிப்பிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். காரணம் தமிழுக்காகவும், சமுதாய மறுமலர்ச்சிக்காகவும் செயல்படுபவர். தனித்தமிழில் உரையாடுவதை கடுமையாகக் கடைப்பிடிப்பவர்.

தாய்த் தமிழ் மழலைப்பள்ளி ஒன்றை நடத்தி தோல்விக்கண்டவர். ஆனாலும், ஒவ்வியல் (ஓமியே) மருத்துவமனை (நிறைநலம்) ஒன்றை நடத்தி மருந்துவப்பணியாற்றி வருகிறார். பொதுப்பணிகளிலேயே திருமணம் செய்வதைத் தள்ளிவைத்து தள்ளிவைத்து இனி இதுவே வாழ்க்கை என்று வாழ்பவர். கேரள ஆதிபகவான் திருவள்ளுவர் ஞானமடத்தின் நிறுவனர் சிவானந்தருக்கு தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்த எல்லா வகையிலும் வழிகாட்டி வந்தார்.

அவரின் தொடர்பு அவரது சொந்த ஊரான செஞ்சியில் 2005 இல் நடைபெற்ற மிகப்பெரிய திருக்குறள் மாநாட்டில் பங்கு கொண்டதன் வாயிலாகக் கிடைத்தது. அன்றிலிருந்து இன்று வரை எனது திருவள்ளுவர் ஞானமன்ற நிகழ்வுகளை அறிந்துக்கொள்பவராகவும் ஆலோசனைகள் சொல்பவராகவும் பங்குக்கொள்பவராகவும் விளங்குகிறார். அவர் வாயிலாகத்தான்  சிவானந்தரை 15 கூட்டங்களுக்கு அழைத்து வந்துள்ளேன். கேரளாவில் உள்ள ஞானமடத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் தொடர்ந்து வழிகாட்டுதல் செய்து வருகிறார். இடையில் பத்தாண்டுகள் கோவைத்திருக்குறள் தொண்டர் பல்லடம் முத்துக்குமாரனோடு இணைந்து பணியாற்றி உள்ளார்.

இடதுசாரி சிந்தனை உடையவராக இருந்தாலும் தமிழை முதன்மைப்படுத்தாத  எந்த இயக்கத்தையும் ஆதரிக்கமாட்டார். தற்போது சென்னை வடபழனியில் தங்கி மருத்துவம் பார்த்துவந்தாலும் தமிழும் திருக்குறளும் மேன்மையடைய எந்தப் போராட்டங்களையும் இயக்கமாக முன்னெடுப்பவர் .  பழகுவதற்கு எளிமையான தன்மானனைக் காத்துபராமரிக்க வேண்டியது தமிழ்ச்சமூகத்தின் கடமை என்று நான் நினைக்கிறன்.

தன்னார்வமாக அனைத்து தரப்பட்ட மக்களையும் புரிந்து கொண்டு பழகக்கூடிய தன்மானன் ,திருக்குறள் தொண்டர் வரிசையில் இடம்பெறுவது  வியப்பன்று.

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்