திரு. தனபால், இராணிப்பேட்டை, வேலூர் (மாவட்டம்).
தமிழ்நாடு திருக்குறள் இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் என்று எனக்கு நானே பொறுப்பை எடுத்துக் கொண்டு தமிழ்நாடு முழுவதுமுள்ள திருக்குறள் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு மண்டல மாநாடுகளை நடத்திக் கொண்டிருந்தபோது. வடக்கு மண்டல மாநாட்டிற்கு (எட்டு மாவட்டங்களை உள்ளடக்கியது) பல நகரங்களை ஆய்வு செய்த பிறகு ‘ஆர்க்காடு’ மிகப் பொருத்தமாக அமைந்தது.
அவ்வூரில், மிகப்பெரிய திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றி எங்கள் இயக்குநர் கருணாகரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதனால் இரத்தினகிரி பாலமுருகன் சுவாமியின் ஆசியுடன் ஆர்க்காட்டில் நடத்தத் திட்டமிட்டிருந்தேன். ஆனாலும், பல நாட்கள் தங்கவும், உணவு உண்ணவும் ஏற்ற இடம் வேண்டுமே! அதனால் உடன் பிறந்த தம்பி அம்பலவாணனைப் பார்க்க இராணிப்பேட்டை சென்றேன்.
எதிர்பாராதவிதமாக பாலாற்றின் வடகரையில் உள்ள அவ்வூரிலும் மிகப்பெரிய அளவில் தங்க நிறத்தில் ஒரு திருவள்ளுவர் சிலையைக் கண்டேன். வியப்பின் உச்சிக்கே சென்று உடனே பேருந்தில் இருந்து இறங்கி வழக்கம்போல சிலையைக் கழுவி மாலை அணிவித்து விட்டு அருகில் உள்ளவர்களை விசாரித்தேன். அப்போது தான் அருகிலுள்ள சந்தைக் கடையில் தினகரன் என்ற வழக்கறிஞர் அறிமுகம் கிடைத்தது.
அவரின் தந்தையார்தான் புலவர் தனபால் என்றும் அவருக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக தொழில் நுட்பம் பயின்று பணியிலிருந்தவர், தனியாகப் படித்து புலவர் பட்டம் பெற்றதோடு இராணிப்பேட்டை தமிழ்ச் சங்கம் என்ற ஓரமைப்பை உருவாக்கி திருக்குறள் பரப்புரை செய்து வருகிறார் என்றும் அவர்தான் இச்சிலையை நிறுவியவர் என்றும் தெரிந்தது.
அன்றிலிருந்து தனபாலும், தினகரனும் வடக்கு மண்டல மாநாடு முடியும் வரை உறுதுணையாக இருந்ததோடு தங்கள் குடும்ப நண்பராக என்னை ஏற்றுக் கொண்டனர். தந்தையும், தனயனும், போட்டி போட்டுக் கொண்டு தமிழ்ப் பணியும் திருக்குறள் பணியும் ஆற்றுவதைக் கண்டு உள்ளம் பூரிப்படைந்தேன். தினகரன், தான் நடத்தும் “தமிழர் எழுச்சி” என்ற வாரஇதழில் மாநாட்டைப் பற்றியும், எனது கொள்கை குறிக்கோள்களை விரிவாக வெளியிட்டும் சிறப்புச் செய்தார்.
அத்தகைய குடும்பத்தின் தலைவர் தனபால் இத்தொகையில் இடம் பெறுவது எனக்கே பெரிய தகுதியை உண்டாக்கும் என்று நம்புகிறேன்.அவரை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் .
நன்றி
தொகுப்பு