Skip to content

தென்காசி திருவள்ளுவர் கழகச் செயலர் திரு ஆ. சிவராமகிருஷ்ணன் ஐயாவுக்கு தமிழ்ச் செம்மல் விருது

ஒரு திருக்குறள் அன்பரின் பதிவு…

பதினைந்து வயதிருக்கும். கோடை விடுமுறை. அப்பா திருவள்ளுவர் கழகத்திற்கு சென்று ஆண்டு விழாவிற்கு வேலை செய் என்று விரட்டி விட்டார்கள்.

விளையாட்டுப் பருவம். வேலை ஏன்றால் வேப்பங்காய். வேறு வழியே இல்வை. கழகத்திற்கு சென்றுதான் ஆகவேண்டும்.
காலை ஏழு மணி செயலாளர் திரு. ஆ.சி அவர்கள் பரபரப்பாக வருகிறார்கள்

திரு. பிரம்மசங்கரன். இராதாகிருஷ்ணன் என மேலும் சில பெரியவர்கள் விழா நிதி திரட்டும் பணிக்கு தயார் ஆகிறார்கள்.

யார் , எங்கே செல்ல வேண்டும் என்பது குறித்து பேசுகிறார்கள்.
ஐயா கணபதியப்பன் , புலவர் முத்துராமன் மேலும் சான்றோர்களால் சிறப்பாக அமைக்கப்பட்ட விழா நிகழ்ச்சி அழைப்பிதழ்களுடன் புறப்பட்டாயிற்று.

செயலாளருடன் நான். இ.குமார் அண்ணனும் இலஞ்சிக்குப் பயணம். இலஞ்சி நிலபிரபுக்களின் ஊர். பெரிய பெரிய அரண்மனை போன்ற வீடுகள். செயலர் அவர்களை இன்முகத்துடன் வரவேற்று விழா தொடர்பாக பேசி நன்கொடையும் அளிக்கிறார்கள்.

மதியம் ஆயிற்று. மூன்று மணி அரசு அலுவலகங்கள். ஆறு மணிக்கு மேல் தென்காசி பசார். என தேனியாக சுழல்கிறார் செயலர்.

மறுநாள் காலை தென்காசி நன்கொடையாளர்களின் வீடுகளுக்குச் சென்று சந்திப்பது என பணி தொடர்கிறது.

அன்றாடம் கணக்கு நேர்த்தியாகப் பதிவு செய்யப்படுகிறது.

விழா நெருங்குகிறது.. கொட்டகை அமைத்தல்,ஒலி பெருக்கிகள், விளக்குகள் , மேடை, உரைஞர்களுக்குத் தங்குமிடம், வசதிகள்,உணவு என சுழல்கிறார்.
பேச்சாளர்கள் வர இயலாத நிலையில் தக்கவர்களைக் கொண்டு மாற்று ஏற்பாடு செய்தல்.

இன்றும் பிரமிப்பாக உள்ளது.

சாலமன்பாப்பையா
பட்டிமன்ற அணிப் பேச்சாளர் நம்பமுடியவில்லை.

சுரதா,கவிக்கோ, அ. ச.ஞா. திரு. வி.க,சீனிவாசராகவன்,திருக்குறளார்,மா.பொ.சி,கி.ஆ.பே,கண்ணதாசன்,வைகோ,நெடுமாறன்,மு.மு. இஸ்மாயில், ஜஸ்டிஸ் சோமசுந்தரம், பாஸ்கரதொண்டைமான்,
வாரியார் சுவாமிகள், மதுரை சோமு,சீர்காழி கோவிந்தராஜன் நினைவுகள். ஆனந்தம். ஆனந்தம்.

ஆண்டு அறுபத்து எட்டு. எனக்கு. நான் தளர்கிறேன்

அன்று நான் செயலரிடம் கண்ட அதே ஊக்கமும் உழைப்பும் இன்றும். வியப்புதான்.

பதினான்கு வயதில் கழகத்திற்கு வந்த செயலருடன் பயணம் செய்தவர்கள் பலரும் நினைவில் வாழ்கிறார்கள். அவர்களும் துணை நிற்கிறார்கள்.

1927ல் தொடங்கிய கழகம் இன்றும் சிறப்பாக செயல்பட செயலர் அவர்கள் ஆற்றிவரும் பணி அளப்பரியது.
அவரால் விருது பெருமை பெறுகிறது.

அவர் வழியில் கழகம் நூற்றாண்டை நோக்கி பெருமையுடன் நடைபோடுகிறது.

கணபதிராமன் அவர்களால் பொலிவு மிக்க அரங்கம் அமைந்தது. திரு. கனகசபாபதி அவர்களால் சொந்த கட்டடம் அமையட்டும். எல்லாரும் செயலருடன் இணைந்து அவரது வழிகாட்டுதலின்படி செயல்பட்டு கழகத்திற்கு மேலும் சிறப்பு செய்வோம்.

இன்று தமிழ்ச்செம்மல் விருது பெறும் அன்னாருக்கு வணக்கத்துடன் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

ஆ.பு.நாறும்பூநாதன்
அம்பாசமுத்திரம்