திரு. பா. சீனிவாசன்,சென்னை
தமிழ் அறிஞர்களுக்கும், திருக்குறள் அமைப்புகளுக்கும், தமிழ் வழிப்பாட்டுக் குழுக்களுக்கும் பாலமாக செயல்பட்டு ‘தெய்வ முரசு’ என்ற ஆன்மீக இதழின் வெளியீட்டாளராகப் பணியாற்றியவர் பா. சீனிவாசன். தனது தந்தையார் வழக்கறிஞர் பாலசுந்தரத்தின் வழியில் கிருபாநந்தவாரியாரின் உறவுப் பெண்ணான அம்மையாருடன் இணைந்து இறைப்பணியும், தமிழ்ப்பணியும் ஆற்றியவர். முதுமுனைவர் மு. பெ. சத்தியவேல் முருகனார்தான் இவரது குரு. அவரோடு இணைந்து தெய்வத்தமிழ் அறக்கட்டளை வாயிலாக தமிழ் ஆகமங்களை கற்பிக்கும் பேராசிரியராகவும் விளங்கினார்.
அரியலூர் சொல்லாய்வு அறிஞர் ம.சொ .விக்டர் அவர்களின் தமிழ்ப் பணியை கணினி மூலம் உலகறியச் செய்து ஈக்காட்டுத்தாங்கல் கலைமகள் நகரில் வசித்து வந்த இவர் அண்மையில் (டிசம்பர் 2015) சென்னையை அழித்த பெரு வெள்ளத்தில் தன் மனைவியோடு அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். அவருக்கும் அவர் மனைவிக்கும் நமது மன்றத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தி படம் திறந்ததைத் தவிர அவரது இழப்பை ஈடு செய்ய முடியவில்லை. இவரது மறைவு குறித்து திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் எழுதிய கட்டுரையிலிருந்து தான் எனக்கே இவருடைய பன்முக ஆற்றலும் தமிழை மேன்மைப்படுத்த இவர் உலகளவில் நண்பர் வட்டத்தை உருவாக்கி வைத்திருந்ததும் தெரிந்தது.
பூர்வீகமாக அரியலூர் மாவட்டம் கொடுங்கூரைச் சேர்ந்தவர் என்பதால் செயங்கொண்டம் வரும்போதெல்லாம் திருவள்ளுவர் ஞானமன்றத்திற்கு வருவதும் வழிபடுவதும் இவருக்குப் பிடிக்கும். செங்குந்தபுரம் தாய்த் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சீருடை வழங்கி வந்தார். தற்போது அவரது தம்பி கந்தசாமி சீனிவாசனின் கடமைகளை பணிகளைத் தொடர்வது ஆறுதலாக இருக்கிறது.அவர் வள்ளுவர் குரல் குடும்பத்தின் இணையதளத்தை நிர்வகித்து வருகின்றார் .
ஓங்குக சீனிவாசனின் புகழ்!