அவரை நன்றியோடு நினைவு கூர்வோம்
அவரது குறள் விரிவுரை முதல் 100 குறட்பாக்களுக்கு மட்டுமே உள்ளது. அவரின் விரிவுரை குறள் 34 …..
மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. (34)
பொருள்
மனத்துக்கண் -மனத்தினிடத்திலே.
மாசு இலன் ஆதல் – அழுக்கு இல்லாதவனாதல், அனைத்து அறம் – அவ்வளவே அறமாவது,
பிற – மற்றவையெல்லாம்.
ஆகுல நீர – ஆரவாரத் தன்மையுடையன.
கருத்து
அறமாவது மன மாசற்ற நிலை.
விருத்தி
மேற்பாட்டிரண்டிலும் அறத்தின் விழுப்பம் சொல்லப் பட்டது. அறம் விழுப்பம் உடையதா என்பதற்கு அதன் இயல் தெரிதல்வேண்டும். அறத்தின் இயல் இப்பாட்டிலும் வரும் பாட்டிலுஞ் சொல்லப்படுகிறது.
இப்பாட்டுக்குப் பலவகையில் பொருள் விரிக்கப் படுகிறது. அப்பொருளெல்லாம் ஏறக்குறைய ஒரே கருத்துடையன. ‘மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறம்’ என்பதற்கு, ‘ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமில னாதலே எல்லா அறமுமாம்’ என்று மணக்குடவர் பொருள் கண்டுள்ளனர்; ‘அறஞ்செய்வான் தன் மனத்தின்கண் குற்ற முடையன் அல்லனாக; அவ்வளவே அறமாவது’ என்று பரிமேலழகர் பொருள் விரித்துள்ளனர்; ‘மனத்துக்கண் மாசிலனாதலாகிய அதுவே அறம்’ என்று கூறலுமொன்று.
அறமாவது மனத்தினிடத்திலே அழுக்கில்லாத வனாதல்; ‘அவ்வளவே’ என்று கோடலும், ‘அறன்’ என்னுஞ் சொல்லை உள்ளத்தினிடத்தில் வைத்து, மனத்தினிடத்தில் அழுக்கில்லாதவனாதல் அவ்வளவே அறமாவது’ என்று கோடலும் ஒன்றே. ‘அனைத்து’ என்பதற்கு அதுவே எனினுமாம்.
மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்
மனம் – அந்தக்கரணங்களிலொன்று.
மாசு அழுக்கு, குற்றம்;’மனத்தகத் தழுக்கு. என்றார் சிவ வாக்கியர்.
ஆதல் – தொழிற் பெயர்; பரிமேலழகர் கொண்ட பொருள் வியங்கோளின் மேலது; (ஆதல் -ஆக).
அனைத்து அளவு; அதுவுமாம். ‘குறும்பூழ்ப்போர் கண்டேம் அனைத்தல்லது யாதும் – அறிந்ததோ இல்லை’ கலித்தொகை : 95:6-7; ‘ஆங்கு அனைத்திற்கு’ – குறுந்தொகை : 217:4 யான் கூறிய
மனத்துக்கண்
மனத்தைப் பற்றிய ஆராய்ச்சி இன்னும் முற்றுப்பெற வில்லை. உலகம் உள்ளவரை அவ்வாராய்ச்சி நிகழ்ந்து கொண்டே யிருக்கும். மனம் நினைப்பது என்று மட்டும் எவருங் கூறுவர்.
மனம் பருமையா? நுண்மையா? மனம் பருமைய தாயின் ஆராய்ச்சி ஒரு வழியில் முற்றுப்பெற்றிருக்கும். அது நுண்மையதா யிருத்தலான். அதைப் பற்றிய ஆராய்ச்சி வளர்ந்துகொண்டே போகிறது.
மனம் நுண்மையதாயினும் அது தனித்து நின்று வினையாற்றுவதில்லை. அது பருமையைச் சார்ந்தே வினையாற்றும். அதன் நிகழ்ச்சிக் கேற்றபடியே பருமையும் அமையும்.
கலைகளும், கலைகளின் காரியப்பாடுகளும் கருக்கொள்ளும் இடம் மனமே யாகும். அவை முதலில் மனத்திற் கருக்கொண்ட பின்னரே அறிஞர்வழிப் பருமையில் உருக்கொள்ளும். பருமைக்கு மூலமாயிருப்பது மனம்.
மூவகை உடல்
மூவகை உடலில் மனமும் ஒன்று என்று சொல்லப்படுகிறது. நுண்ணுடல் மனம் என்று சொல்வது ஒரு வகைச் சித்தாந்தம். நுண்ணுடல் (சூக்கும சரீரம்). பருவுடலுக்கும் (தூல சரீரத்துக்கும்) முதலுடலுக்கும் (காரண சரீரத்துக்கும்) இடையிலிருப்பது.
பருவுடல் அமைவு, மனத்தின் நிலையைப் பொறுத்து நிற்பது. எண்ணத்துக்கு ஏற்றவண்ணம் பருவுடல் அமைவதென்பது ஒருசாரார் கொள்கை. எண்ணத்தில் தடிப்பே பருவுடல் என்பது அவர்தம் ஆராய்ச்சியிற் போந்த உண்மை.
மனத்துக்கும் பரு உடலுக்கும் உள்ள தொடர்பை நிறுவிக்காட்டுதற்குப் பல சான்றுகள் தேவையில்லை. ஒன்றே சாலும். மனத்தின் உண்மை (இருப்பு) எதைக் கொண்டு நிறுவப்படுகிறது? பரு உடல் இல்லையேல் அதன்கண் அரும்பியுள்ள பொறி புலன்கள் இல்லையேல் மனத்தின் உண்மையை நிறுவிக்காட்டல் இயலாது. நுண்ணிய மனஉண்மை, பருவுடல் கொண்டே நிறுவப்படுகிறது. இதனால் இரண்டுக்கும் உள்ள தொடர்பு நனி விளங்கும். இத்தொடர்பால் மாசு படிதற்கும் நீங்குதற்கும் நிலைக்களனாக மனம் நிற்க நேர்தலால் ‘மனத்துக்கண்’ என்றார்.
மாசிலனாதல்
மனத்துக்கு இருகூறு உண்டு. அவை புறம் உள் என்பன. மனத்தின் புறமும் உள்ளும், வீட்டின் புறக்கதவு உட்கதவு போன்றன.
புறமனம் பொறிகளின் வழிப் புறஉலகில் ஈடுபடுகிறது. அவ்வீடுபாட்டால் அதன்கண் பெரிதும் மாசு படிகிறது. புற மனத்தில் மாசு படிந்துகொண்டிருக்கும் வரை உள்மனம் சூம்பியே கிடக்கும். மாசு படியாத முறையில் புறமனம் பொறிகளின்வழிப் புறஉலகில் ஈடுபடுதல் வேண்டும். புறமன மாசு அற அற, உள் மனக்கட்டு அவிழ்ந்து அவிழ்ந்து மலர்ந்துகொண்டே போகும்.
புறமனத் தூய்மை பருவுடலுக்கு ஆக்கஞ் செய்யும். உள்மனத் தூய்மை முதலுடலுக்கு ஆக்கஞ் செய்யும். எதற்கும் மனத்தூய்மை வேண்டும்.
மனம் பெரிதும் மாசுபடியும் இயல்பினதாதலால், மாசின் மீது கருத்திருத்தி, அதை இலதாகச் செய்தல் வேண்டும் என்பதை வலியுறுத்த, ‘மாசில னாதல்’ என்றார்.
அனைத்தறம்
புறமனத் தூய்மையால் உள்மனம் மலரும். இம் மலர்ச்சியில் விளங்குவது அறம். மனமாசற்ற இடத்தில் அறம் விளங்கும் என்பது. அதுபற்றியே, ‘மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறம்’ என்றார் ஆசிரியர்.
மனம் மாசற்றதாயின், முதலுடலும், பருவுடலும், பொறிகளும் மாசற்றனவாகும்; வாழ்வும் மாசற்றதாகும். மாசற்ற மனத்துக்கு உலகமும் மாசற்றதாகவே இலங்கும்.
திருவள்ளுவர் அறம்
அறத்தைப்பற்றி உலகிடை எழுந்த மொழிகள் பலப்பல. அவை மலையென உயர்ந்து கிடக்கின்றன; கடலெனப் பரந்து கிடக்கின்றன. அத்துணை மொழிகளைப் பயின்றாலும் அறத்தின் நுட்பம் தெள்ளிதில் விளங்குவ தில்லை. அவற்றில் நிலைத்த உறுதியும் ஏற்படுவதில்லை. நந்தமிழ்ப் பெருமான் மிகச் சுருங்கிய மொழியில் சில சொற்களால் அறம் இன்னதென்று திறம்பட விளங்கச் செய்துள்ளனர். சொல் சுருங்கிப் பொருள் பொதிய வைப்பதில் திருவள்ளுவருக்கு ஒப்பானவரும் மிக்கானவரும் இலர் என்று அறுதியிட்டுக் கூறலாம். அறமாவதென்ன? திருவள்ளுவர் எப்படிக் கூறுகிறார்? ‘மனத்துக்கண் மாசில னாதல்’ என்கிறார். எவ்வளவு சுருக்கம்! அறம் இன்னதென நன்கு புலனாதல் காண்க.
‘அறமா! அது மலை போன்ற தாயிற்றே; கடல் போன்ற தாயிற்றே’ என்று மலைதல் வேண்டா, மருளுதல் வேண்டா என்று ஆசிரியர்,’மனத்துக்கண் மாசில னாதல்; அனைத்தறம் என்று அருள்கிறார். ‘அனைத்தறம்’ என்படு லுள்ள எளிமையை எண்ணுக. ‘அறமாவது, மன மான்றல். அவ்வளவே’ என்கிறார். எவ்வளவு சுருங்கிய மொழி! மொழி சுருங்கியது ஆழியினும் ஆழமுடையது. பொருளோ ஆழமுடையது:
அறத்தைப்பற்றிப் பலதிறக் கருத்துக்கள் உலகில் உலவுகின்றன. ஈகையை அறமென்போரும் உளர். ஈகை அறத்தின் ஒரு கூறு. அறம் முதல் ஈகை ஒரு சினை. ஈகை முழு அறமாகாது. முழு அறமாவது மனமாசற்ற நிலை என்று ஆசிரியர் வழிகாட்டுகிறார். அவ்வழியைக் கண்ணுள்ளோர் காண்பாராக.
பிற ஆகுல நீர
பிற மற்றவை; மனமாசினின்றும் பிறப்பவை; அறமல்லாதன; வெளி வேடம் முதலியன; அஃதொழிந்த சொல்லும் வேடமும் அறமெனப்படா ‘ என்றனர் பரிமேலழகர்.
ஆகுலம் – ஆரவாரம், ஆடம்பரம், இடம்பம். நீர – தன்மையன; நீர்மையி னடியாகப் பிறந்த பலவின்பால் முற்று.
பிற ஆகுல நீர
மனத்துக்கண் மாசின்றிச் சொல்லப்படுவனவும் செய்யப்படுவனவும் அறத்தின்பாற்படுவன. மனமாசுடன் சொல்வனவும் செய்வனவும் அறத்தின்
பாற்பட்டனவாகா. இவை ஆடம்பரத்தின் பாற்பட்டன. இன்னோரன்ன கருத்துக்கள் பொதுள, ‘பிற ஆகுல நீர’ என்றார்.
மனத்தின் மாசினைப் போக்க முயலாது வெளிக்கு அறவோர்போல நடிப்போரது செயல் போலியே யாகும். அது கபட நாடகம்; வெளிவேடம்; “பிறர் அறிதல் வேண்டிச் செய்கின்றனவாகலின், ‘ஆகுல நீர’ என்றார். என்பது பரிமேலழகர் குறிப்பு.
மனத்தில் மாசுள்ளமட்டும் தன்னலமிருக்கும்; மாசற்றால் தன்னலம் அறும். தன்னலமற்றவர் செயலே அறவினையாகும். பிற அறவினையாகா. அவை ஆடம்பரங் கருதிச் செய்யப்படுவன.
“pure at heart”
A serene, glowing heart floating gently in a soft, ethereal environment. The heart radiates a warm, golden light, symbolizing kindness and innocence. Surrounding the heart are soft, translucent wings that suggest purity and a gentle nature. The background is a gradient of calming pastel colors, with rays of light subtly breaking through, symbolizing goodness and integrity. Delicate white doves, symbols of peace and purity, might be flying around the heart, further enhancing the sense of purity and goodness. The overall atmosphere is one of tranquility, love, and sincerity.