திரு. சுந்தரமகாலிங்கம், கரூர்
எடுத்த எடுப்பிலேயே ஒருவருடைய செயல் வியப்பில் ஆழ்த்துகிறதே என்றால் அவரை நேசிப்பதற்கும் அவருக்கு உதவி செய்வதற்கும் மனம் விரும்புவது இயல்பு. அதுவும் திருக்குறளைப் பரப்புவதற்கு சுந்தரமகாலிங்கம் எடுத்துக்கொண்ட நாட்டிய முறை என்னை மட்டுமல்ல எல்லோரையும் பாராட்ட சொல்லும். காதால் கேட்பதை விடக் கண்ணால் காண்பது பல மடங்கு மனதில் பதியும் என்பதை கருத்தில் கொண்டு தொடக்கப்பள்ளி தமிழாசிரியராயிருந்த இவர் தன் பணிக் காலத்திலேயே தன்னை நடனப் பெண்மணியாக அணி செய்து கொண்டு திருக்குறள் மாணவர்கள் மனதில் பதிய வைக்கும் முறையைக் கையாண்டுள்ளார்.
தற்போது பணி ஓய்வு பெற்று 15 ஆண்டுகளாகப் பயணங்கள் மேற்கொண்டு ஆங்காங்கே உள்ள பள்ளிகளுக்கு அழைத்தாலும் அழைக்காமலும் சென்று திருக்குறள் பரப்புரையை மேற்கொள்கிறார். 2000 பள்ளிகளுக்கு மேல் சென்று எந்த வித நன்கொடைகள் பெறாமலும் சொந்த செலவிலேயே இந்த கலை நிகழ்ச்சியை நடத்தி மாணவர்களுக்கு திருக்குறளை மனதில் பதிய வைத்து வருகிறார். சில இடங்களில் நம் ஆசிரியர்கள் தேநீர்கூட வாங்கிக் கொடுக்காமல் அனுப்பி விடுவதுண்டு .
சொந்த ஊர் மதுரை என்றாலும் கரூர் அருகே தங்கி இப்பணியை மேற்கொள்ளும் சுந்தரமகாலிங்கம் நமது கரூர் திருக்குறள் மாநாட்டில் தான் என்னோடு அறிமுகமானார். பிறகு அவருடைய பயணங்களில் நானும் சிலவற்றில் கலந்து கொண்டு பரப்புரை செய்ய வாய்ப்பு நேர்ந்த போது அவரது அங்க அசைவுகள் (Body Language) எப்படி திருக்குறள் கருத்தை மனதில் பதிய வைக்கிறது என்பதை அறிந்து மகிழ்ந்தேன். ஒரு நிகழ்ச்சியின் வாயிலாக புதியதாக ஐந்து குறள் கருத்துக்களையாவது புரிய வைத்து மாணவர்களை சொல்லச் செய்து விடுகிறார்.
இதற்காகத் தனியாக சிறப்பு உடைகளையும் அணியமாக்கி பெட்டியில் சுமந்து செல்லும் சுந்தரமகாலிங்கம் திருக்குறளையே சுமந்து செல்லும் தொண்டர் என்று தானே சொல்லவேண்டும்.