திரு. ந. வை. சிவம், மணற்பாறை, திருச்சி
நாடறிந்த நல்ல புலவர் ந. வை. சிவம். இவரை இப்படி அழைப்பதை ஏற்கமாட்டார். திருக்குறள் ந. வை. சிவம் என்றால் தான் மிக்க மகிழ்ச்சியோடு ஏற்பார். அந்த அளவிற்கு திருக்குறளோடு ஒன்றி வாழ்பவர். தமிழ்நாட்டில் வாழ்ந்த வாழ்கின்ற அனைத்து தமிழறிஞர்களோடும் தொடர்பு உடையவர். தமிழ்நாட்டில் வெளிவரும் அனைத்து சிற்றிதழ்களிலும் இவர் கவிதைகளைப் பார்க்கலாம். மறைந்த குன்றக்குடி அடிகளாரோடும், தற்போது பொன்னம்பல அடிகளாரோடும் நெருக்கம் உடையவர். உலகத் திருக்குறள் பேரவையின் செயற்குழு உறுப்பினர்.
நாற்பது (40 )ஆண்டுகளாக மணற்பாறையில் திருக்குறள் பயிற்சியகம் நடத்தி திருக்குறள் பயிற்சி அளித்து வருகிறார். தமிழாசிரியராகவும், தொடக்கக்கல்வி அலுவலராகவும் பணி செய்து ஓய்வு பெற்ற இவர் திருக்குறள் பணிக்கும், தமிழ்ப்பணிக்கும் ஓய்வு கொடுப்பதே இல்லை. தமிழர் கால அடையாளமான பெரிய மீசை, மஞ்சள் துண்டு ஆகியவற்றுடன் மேடைச் சொற்பொழிவில் அவரைக் காணும்போதும் அவர் பேசும்போதும் சிங்கத்தைப் போலவே காட்சி அளிப்பார். இவரது மனைவி தமிழாசிரியர் என்பதால் குடும்பமே இணைந்து தமிழ்ப் பயிர் வளர்க்கிறார்கள்.
திருவள்ளுவர் ஞான மன்றத்தின் கிழக்கு மண்டல மாநாட்டில் கலந்து கொண்டு திருக்குறள் ஒருங்கிணைப்பு முயற்சியில் அரிய பல ஆலோசனைகளை வழங்கினார். ஒவ்வோர் ஆண்டும் திருவள்ளுவர் திருநாளில் மணற்பாறைக்குத் திருக்குறள் அறிஞர்களை வரவழைத்து தெருவெங்கும் திருக்குறள் முழக்கமும், பாராட்டும், பரிசளிப்பும் செய்வதை தொடர்ச்சியாக செய்து வருகிறார்.
பல அமைப்புகளின் பட்டங்களையும் பாராட்டுகளையும் பெற்றவராயினும், “ஏதோ என்னால் முடிந்ததை செய்கிறேன்” என்று இவர் சொல்வது எனக்கு உடன்பாடில்லை. இவர் காலத்திலேயே இன்னும் பல திருக்குறள் தொண்டர்களை இவர் உருவாக்க முடியும் என்று நம்புகிறேன்.
வாழ்க திருக்குறள் தொண்டர் ந. வை. சிவம்!