Skip to content

திரு. செந்தமிழன்,பெரம்பலூர்

திரு. செந்தமிழன், பெரம்பலூர்

“எல்லாம் தமிழால் முடியும்” என்று சரக்கு வாகனத்திலும் மகிழுந்திலும் எழுதத் துணிந்தவர் யார் இருக்கிறார். பெரம்பலூரில் அப்படி இரண்டு வண்டிகளைத் தொடர்ந்து பார்த்து துரத்திச் சென்று விசாரித்தால் அவர்தான் செந்தமிழன் என்று அறிந்து மகிழ்ந்தேன். அவர் இயற்பெயர் முரளிதரன். ஏற்கனவே அவரைப் பெரம்பலூர் கூட்டங்களில் பார்த்திருக்கிறேன். ஒரு அச்சகம் வைத்திருக்கிறார் என்று தெரியும். ஆனால் இந்த துணிச்சல் இவருக்கு எப்படி வந்தது. எல்லாம் தமிழின் மேல் உள்ள காதல் தான்.

அதற்குப் பிறகு தான் திருக்குறளை தமிழ் நாட்டில் ஓடும் அனைத்து வாகனங்களிலும் துண்டு துண்டாக ஒட்டலாமே என்ற எண்ணம் வந்து அதையே பரப்புரையாக செய்து வருகிறேன். ஆனால், பலர் ஒப்புக்கொள்வார்கள், செய்யமாட்டார்கள். எப்படியும் ஓர் ஆயிரம் வண்டியிலாவது எழுத வைத்துவிட வேண்டும் என உறுதி எடுத்துள்ளேன். அதற்கெல்லாம் காரணம் செந்தமிழன் தான்.

அவர் வணிக அளவிலான முயற்சி செய்தலும் ஒரு பந்தல் ஒப்பந்தக்காரராக இருந்தாலும் அதிலும் திருக்குறள் பரப்புரையையும் சேர்த்தே செய்கிறார். நெகிழிப்பையைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக குறைந்த விலையில் துணிப்பை அணியமாக்கிக் கொடுக்கும் அவர் அப் பைகளிலும் திருக்குறள் விளக்கமும் திருவள்ளுவர் படமும் அச்சடித்து தான் விற்கின்றார். இதை அவர் தனி ஒருவராகச் செய்யவில்லை. ஓரியக்கமாகவே குறளடியான் போன்ற திருக்குறள் ஆர்வலர்களையும் இணைத்துக் கொண்டும் தன் துணைவியாரின் துணையோடும் செய்கிறார்.

நல்ல தமிழ்ப் பெயர்களை புத்தகமாக அச்சடித்துத் தருவது, ஞானமன்றக் கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் தொடர்ச்சியாக வருவது, தூயத் தமிழில் மட்டுமே பேசுவது இப்படி எத்தனை பேர் செய்வார்கள்? மயிலாடுதுறையில் ஒரு மீனாட்சி சுந்தரம் புவனகிரியில் ஒரு ஆறுமும் என விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே வணிகர்களாகவும் திருக்குறள் நெறியாளர்களாகவும் இருக்கிறார்கள்.

நண்பர் செந்தமிழன் திருக்குறள் தொண்டராகப் போற்றப்படுவது காலத்தின் கட்டாயம். வளர்க அவரது தொண்டு!

 

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்