திரு. வீ. சேகர், கோடம்பாக்கம், சென்னை.
“திருவள்ளுவர் கலைக்கூடம்” என்ற திரை நிறுவனத்தையும், “மக்கள்மேடை” என்ற திங்கள் இதழையும் நடத்திக்கொண்டு 15 திரைப்படங்களை இயக்கி வெற்றிக்கண்ட மக்கள் இயக்குனரை நாம் சந்திக்க முடியுமா என ஏங்கிய காலமுண்டு. ஏனென்றால், திருக்குறளை மக்கள் மயமாக்க வேண்டும் என்ற என் சிந்தனைக்கு ஏற்றதாகவும் வலிமையானதாகவும் உள்ள ஒரு தகவல் தொடர்பு சாதனம் இல்லையே என்ற தாகத்திற்கும் வீ. சேகர் வழிகாட்டுவார், உதவி செய்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவர் அதிகப்பொருள் செலவில் ஒரு படம் எடுத்து தோல்விக் கண்டுள்ளார். அதிலிருந்து மீண்டு வர மக்கள் மனதில் பதியும் வண்ணம் மற்றொரு படத்தை தான் மகன் கார்ல்மார்க்சையே நடிக்க வைத்து எடுத்துவரும்போதுதான் எனக்கு அறிமுகமானார்.
நான்2012 இல் நடத்திய கிழக்குமண்டல திருக்குறள் ஒருங்கிணைப்பு மாநாட்டிற்கு வந்ததிலிருந்து இன்று வரை அவரோடு நல்ல தொடர்பிலேயே உள்ளார். தமிழ்ச் சமூகத்திற்கு தமிழினப் போராளிகளும் திராவிடச் சிந்தனையாளர்களும் இணைந்து போராடவேண்டுமென்று நக்கீரன் இதழில் , அவரது கட்டுரை வந்தபோது உண்மையிலேயே மகிழ்ச்சியடைந்தேன்.
ஒரு தமிழ்த் தேசியவாதி கிடைக்கின்ற எல்லா வாய்ப்புக்களைப் பயன்படுத்தி தன் மொழி, இனம் காக்கப் போராடவேண்டும் என்ற எனது கருத்தோட்டத்திற்கு இணையாக இருந்தது. அவரது சரவணப்பொய்கைப் படத்திற்கான பரப்புரையாக எனது வீட்டிற்கு வந்து திருவள்ளுவரை வணங்கி ஞானமன்றத்திற்கும் நன்கொடை வழங்கிச் சென்றது மறக்கமுடியாது.
அவரது நட்பால் மேலும் ஒரு சிறந்த சமூகச் சிந்தனையும், திருக்குறள் அமைப்பும் வைத்துள்ள செவ்வியன் (நீலாங்கரை) தொடர்பு கிடைத்தது. “இனி எல்லாம் நலமே” என்பது போல தமிழும் திருக்குறளும் மேம்பட ஓர் இயக்கத்தை உருவாக்குவோம் என எனக்கு அழைப்பு விடுத்ததைப் பெருமையாகவே கருதுகிறேன். “வள்ளுவர் கோட்டத்தை திருக்குறள் இயக்கங்களின் தலைமையிடமாக மாற்றும்போது அதில் பணியாற்றிப் பங்காற்றவும் தமிழகம் அறிந்த ஒரு தொண்டர் வேண்டுமே என்று நான் நினைத்தபோது அதற்கு ஏற்றவராக இயக்குனர் வீ. சேகர் விளங்குகிறார். திருக்குறள் தொண்டர் வரிசையில் இவருக்கு ஒருசிறப்பான இடம் உண்டு.
தற்போது உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் தலைவராக செயலாற்றி வருகிறார் .
அவரது செயல்பாடுகள் வாழ்க வளர்க என வாழ்த்துவோம்