Skip to content

சங்கத் தமிழும் வள்ளுவமும் கைகோர்க்கும் இடம்

கணியன் கிருஷ்ணன் சங்கத்தமிழ் பற்றியபதிவு என்னுடைய குறள் சார்ந்த பின்னூட்டம்

உரன் அவித்தன்றே
………………………………
சங்கப் பாடல்கள் பல எளிதில் விளங்குவதன்று.அதனால்
தான் உரையாசிரியர்கள்
தேவையாகிறது.சில நுட்பச்
செய்திகளை அவர்களால்
தான் தர முடியும்.நீண்ட அடிகள்
கொண்ட பாடல்களை படிக்கா
விட்டாலும் இந்நூல் போன்ற
குறைவான அடிகளைக்
கொண்ட நூல்களையாவது
படிப்பது நலமே.

======================
மால்வரை இழிதருந்
தூவெள் அருவி

கல்முகைத் ததும்பும்
பன்மலர்ச் சாரல்

சிறுகுடிக் குறவன்
பெருந்தோட் குறுமகள்

நீரோ ரன்ன சாயல்

தீயோ ரன்னவென்
உரனவித் தன்றே. 5
– கபிலர்
==========================

தோழி! பெரிய மலையினி
டத்து வீழும் அருவி
பாறைகளின் வெடிப்புக்களில் ஒலிக்கும் பலமலரையுடைய சாரலில் உள்ள சிற்றூரிலுள்ள குறவனுடைய பெரிய தோளையுடைய சிறிய
மகளினது நீரைப் போன்ற மென்மை தீயை ஒத்த என் வலியைக் கெடச் செய்தது.

கருத்து: நான் ஒரு மலை
வாணர் மகளைக் காமுற்றேன்.
………………………………………………………

95 குறிஞ்சி::::அடி நேர் உரை

பெரிய மலையிலிருந்து விழுகின்ற
தூய வெள்ளிய அருவிநீர்

மலை முழைஞ்சுகளில்
ஒலிக்கும் பல மலர்களை
யுடைய மலைச் சரிவின்

சிறுகுடியில் இருக்கும்
குறவனின் பெரிய தோள்களையுடைய
இளையவளின்

நீரின் தன்மை போன்ற
மெல்லிய தன்மை

தீயைப் போன்ற என்
வலிமையை அழித்தது.
………………………………………………………
இதில் வரும் உரன் என்ற
சொல் வலிமையைக்
குறிக்கும்.

உரன் என்னும் தோட்டியான்
ஓர் ஐந்தும் காப்பான்
வான் என்னும் வைப்பிற்கு
ஓர் வித்து – குறள் 3:4

உரன் நசைஇ உள்ளம்
துணை ஆக சென்றார்
வரல் நசைஇ இன்னும்
உளேன் – குறள் 127:3…என்பது

வள்ளுவம்.
வாழ்க!…….வளர்க!
தென்காசி கிருஷ்ணன்

🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
இன்னொரு நயமும் விளங்குகிறது

மலையிலிருந்து விழும் அருவி

அருகில் இருக்கும் பல வகையான மலர்கள்

கல்திண்மைக்கும், மலர் மென்மைக்கும் உதாரணமானது

சிறு குடி பெருந்தோள்

தலைவி நீரைப் போன்ற குளிர்ந்த தன்மையுடையவள்

தலைமகன் தீயை போன்ற பகைவர் நடுங்கும் வெம்மையை உடையவன்…
அது அழிந்து விட்டது

குறளின் குரல்

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு
(அதிகாரம்:தகை அணங்கு உறுத்தல் குறள் எண்:1088)

மு வரதராசன்
போரக்களத்தில் பகைவரும் அஞ்சுதற்குக் காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே!