Skip to content

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்து கோடாமை சான்றோர்க்கு அணி

மணக்குடவர் : கேடுவருதலும் ஆக்கம் வருதலும் உலகத்தில்லையல்ல: அவ்விரண்டினுள்ளும் யாதானுமொன்று வந்த காலத்துத் தன்னெஞ்சு கோடாம லொழுகல் சான்றோர்க்கு அழகாம்.

இல்லல்ல … என்ன ஒரு சொல்லாட்சி.. 🙏🏼😊

ஆக்கமும் கேடும்

பல நேரங்களில் வள்ளுவர் இரண்டு முற்றிலும் மாறுபட்ட எதிரெதிர் இரு துருவங்கள் எடுத்துக்கொண்டு அவற்றிற்கிடையே உள்ள தூரத்தை அளந்து காட்டுவார்

ஆக்கமும் கேடும் என்ற சொற்கள் இரண்டும் இரண்டு துருவங்கள்… ஒன்று மலை, மற்றொன்று மடு..

ஆக்கம் என்பது மனிதனை ஆக்குவது இது பணம் பதவி புகழ் செல்வம் என்று பலவற்றையும் குறிக்கும்

16 பேறுகள் அனைத்தையும் உட் கொண்டது ஆக்கம் என்று எடுத்துக்கொள்ளலாம்

அபிராமி பட்டர் அருளிய பதிகம் ஒன்றில் இவ்வாறு அவர் அம்மையை வேண்டுவார்

சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராச தனையை!
மா தேவி ! நின்னைச் சத்யமாய், நித்யம் உள்ளத்தில்
துதிக்கும் உத்தமருக்கு இரங்கி, மிகவும்
அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம் அழகுபுகழ் பெருமை இளமை அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள்வெற்றி ஆகுநல் லூழ்நுகர்ச்சி தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ சுகானந்த வாழ்வளிப்பாய் -(அபிராமி அந்தாதி பதிகம்)

1.உடலில் நோயின்மை,

2.நல்ல கல்வி,

3.தீதற்ற செல்வம்,

4.நிறைந்த தானியம்,

5.ஒப்பற்ற அழகு,

6.அழியாப் புகழ்,

7.சிறந்த பெருமை,

8.சீரான இளமை,

9.நுண்ணிய அறிவு,

10.குழந்தைச் செல்வம்,

11.நல்ல வலிமை,

12.மனத்தில் துணிவு,

13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்),

14.எடுத்தக் காரியத்தில் வெற்றி,

15.நல்ல ஊழ்(விதி),

16.இன்ப நுகர்ச்சி

வள்ளுவர் காட்டும் ஆக்கமும் கேடும்

அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கு இல்லை கேடு – குறள் 32

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும் – குறள் 169

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு – குறள் 642

கேடும் பெருக்கமும்

கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்து
கோடாமை சான்றோர்க்கு அணி – குறள் 115

கேடும் உளதாகும் சாக்காடும்

நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது – குறள் 235