திரு. கு. இராசாராமன், சீர்காழி
சீர்காழி திருக்குறள் பண்பாட்டுப் பேரவை என்று பெயரிலேயே சிறந்த நோக்கத்தை கொண்டு வந்தவர் இவ்வமைப்பினை நிறுவியவர் அமரர். அவர் உயிரோடு இருந்தபோது என்னை அழைத்துப் பேச வைத்துள்ளார். அப்போதே நான் அவரிடம் ஒரு கோரிக்கை வைத்தேன். திருவள்ளுவருக்கு சீர்காழியில் ஒரு சிலை நிறுவினால் இந்தப் பண்பாட்டுப் பேரவைக்கு சிறந்த அடையாளமாக இருக்குமே என்றேன்.
அவர், பொது இடத்தில் இடம் கிடைக்கவில்லை . அரசு நிர்வாகத்திலும் நகராட்சி நிர்வாகத்திலும் பல காரணங்களைச் சொல்லி மறுக்கிறார்கள் என்றார் . 80 வயதைத் தாண்டிய முதியவர் என்றும் பாராமல் அவரையும், பேரவையின் உறுப்பினர்களையும் கடிந்துக் கொண்டேன். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எல்லாம் சேர்ந்து எத்தனை நகர்களை உருவாக்கி மனை போட்டு வீடு கட்டி அதில் ஏதோ ஒரு தெய்வத்திற்கு சொந்தமாக இடம் ஒதுக்கி கோவில் கட்டி வழிப்படுகின்றார்களே? அதுபோல அய்யன் வள்ளுவருக்கும் சிலை வைத்து அரங்கம் கட்டி திருக்குறள் பரப்புரையை சொந்த இடத்தில் செய்யக் கூடாதா என்று வினவினேன்.
ஆனால் அவராலும் மற்றவர்களைப் போல் ,ஏன் இப்போதும் கூட தமிழ் நாட்டிலுள்ள எல்லா அமைப்புகளாலும் என் வினாவிற்கு விடையளிக்க முடியவில்லை. நண்பர் இராசாராமன், பேரவைக்கு செயலராகப் பொறுப்பேற்ற பிறகு ஒருவகையில் இதற்கு தீர்வு கண்டு அடக்கமான நகர் பூங்கா ஒன்றில் சிறிய சிலையை நிறுவி வழிபட்டு வருகிறார் என்பது எனக்கு மனநிறைவைத் தருகிறது. அதுமட்டுமல்ல தனது கடும் உழைப்பால் பண்பாட்டுப் பேரவையைக் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி 25 வது ஆண்டுவிழாவை இரண்டு நாள் மாநாடாகவே நடத்திவிட்டார்.
நமது திருவள்ளுவர் வெண்கலச்சிலையை எடுத்துச் சென்று அருமையான தேரோட்டமும், பற்பல பள்ளி மாணவர்களுக்குப் பரிசளிப்பும் பாராட்டும் நடத்தி சிறப்பு செய்துள்ளார். நேரடியாக நமது மாநாடுகளில் பங்கு கொள்வதும், தமிழகம் முழுவதும் பயணம் செய்வதுமாக அவரது பணி நடந்து வருகிறது. சீர்காழி வள்ளல் இராமர் வாயிலாக நமது மாநாட்டிற்கு ரூ.30,000/- செலவில் நினைவுப் பரிசுகள் பெற்றுத் தந்துள்ளார்.
இத்தகைய நண்பர் இராசாராமன் திருக்குறள் திருத்தொண்டர் எனப் போற்றப்படுவதுதானே சரி?