திரு. இராகவன், சிதம்பரம்
உலகின் மையப்புள்ளி என்று கருதப்படும் திருச்சிற்றலம்பத்தில், வரலாற்று புகழ்மிக்க அண்ணாமலை பல்கலைக்கழகம் அமைந்துள்ள சிதம்பரத்தில் திருக்குறள் அமைப்பு எதுவும் இயங்கவில்லையே என்ற என் வருத்தத்தைத் தீர்த்தவர் இராகவன். நான் நாகை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலராக இருந்தபோது சீர்காழியில் உதவித் தொடக்கக்கல்வி அலுவலராகப் பணியாற்றி ஓய்வுப்பெற்றவர். அப்போதே அவரது பன்முகத்திறன்கள் வெளிப்பட்டன.
ஆசிரியர்களை அரவணைத்து நிர்வாகத்தை சிறப்பாக நடத்தியவர். ஆன்மீகப் பயணங்களில் அதிக நாட்டம் உள்ளவர் என்பதால் தற்போதும் அதைத் தொடர்ந்து செய்து வருகிறார். ஆனால் திருக்குறள் பணியை மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றார் என்பது எனக்குத் தெரியவில்லை. பலரிடம் வினவி அறிந்தபோது ஓரியண்டல் பள்ளியில் திங்கள் தோறும் திருக்குறள் முற்றோதல் நடக்கிறது என்பது தெரிந்தது. புவனகிரி ஆறுமுகனாரையும், சீர்காழி இராசா இராமனையும் இது குறித்து தொடர்ச்சியாக கேட்டுத்துளைத்துக் கொண்டிருந்தேன்.
கடந்த பல மாதங்களாக (2018 ) ஒவ்வொரு மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும் திருக்குறள் முற்றோதலும் சொற்பொழிவும் நடத்தி வந்துள்ளார். அண்மையில் இனி எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் செய்யபோகிறேன் என்று என்னிடம் கூறியுள்ளார். காஞ்சி காமகோடி நிர்வாகத்தில் உள்ள ஓரியண்டல் பள்ளியின் தற்போதைய தலைவராகவும் இருப்பதால் இனி நமது ஞானமன்ற செயல்பாடுகளும் இணைந்து செயல்பட ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் அடுத்து குறள் மாவட்ட மாநாட்டை கடலூர் கல்வி மாவட்டம் சார்பாக சிதம்பரத்தில் நடத்திடவும் ஏற்பு வழங்கியுள்ளார்.
அதன் வாயிலாக இன்னும் ஏராளமான தொண்டர்கள் கிடைப்பார்கள் என்று நம்புகிறேன். சைவமும், வைணவமும் மேலோங்கிய நகரில் தமிழும் திருக்குறளும் இன்னும் அதிகமாக மக்கள் இயக்கத்திற்குள் வரவேண்டுமென்று விரும்புகிறோம்.
தில்லை நடராசனின் ஊரில் இப்போதாவது திருக்குறள் தொண்டு செய்ய ஒருவர் கிடைத்தாரே என்பதால் அவரை இவ்வரிசையில் வைத்துப் போற்றுவோம்!