Skip to content

திருமதி. புனிதா கணேசன்,தஞ்சை

திருமதி. புனிதா கணேசன், தஞ்சை

சிறந்த கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், நிர்வாகி, மனிதநேயப் பற்றாளர் இப்படி எத்தனை திறமைகள் பண்புகள் இருக்குமோ அத்தனையும் பெற்ற சகலகலாவள்ளி என்னும் அளவிற்கு தஞ்சையில் கோலோச்சும் அம்மையார் புனிதா  கணேசன் மிக மிக எளிய குடும்பத்தில் பட்டுக்கோட்டையில் பிறந்து தற்போது பாரத் கல்வி மற்றும் நிர்வாகவியல் கல்லூரியின் செயலராக விளங்குகிறார்.

இவரின் அத்தனை வளர்ச்சிக்குப் பின்னாலும் ஊக்கமளித்த இவரது கணவர் கணேசன் குறித்த நூல்  “சூரிய விதை” வாயிலாகத் தான் நான் அறிமுகமானேன். அந்நூலை வாசித்த பிறகு எழுதப் படிக்கத் தெரிந்த எவரும் உண்மையான அன்பும் உழைப்பும் நன்றியுணர்வும் உள்ள எவரும், வாழ்நாளில் ஒரு நூல் எழுதி வெளியிடலாம் என்ற முடிவிற்கு வந்தேன். அந்த அளவிற்கு சரளமாக தன் வாழ்வை, போதனைகளை, முன்னேற்றத்தை சொல்லிச் செல்கிறது அந்நூல்.

அதற்குப் பின் எட்டு ஆண்டுகளாக அவரின் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் என்னுடைய திருக்குறள் பணிகளைப் பற்றி  ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு பழக்கமானோம். அவர் தமிழுக்காகவும், திருக்குறளுக்காகவும், சமூகத்திற்காகவும் பாடுபடும் அனைவரோடும் இப்படித்தான் பழகுகிறார்.

முத்தாய்ப்பாக இரண்டு நிகழ்வுகளைக் கூறலாம். ஒன்று பாரதிக்கு தன் கல்லூரி முகப்பில் சிலை நிறுவியது . மற்றொன்று ,இயற்கை வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வார் மறைந்தபோது அவரது உடலை தன் கல்லூரி வளாகத்திலேயே இரண்டு நாட்கள் வைத்திருந்து அஞ்சலி செலுத்த வாய்ப்பளித்தது. திருக்குறள் பணிகளில் நான் என்ன கேட்டாலும் கொடுத்து உதவுபவர். எங்கள் ஊருக்கு அருகில் பொய்யூர் என்ற ஊரில் ஒரு சிலை அமைக்க இளைஞர்கள் முற்பட்டபோது ரூ.25,000/- யும் வழங்கியவர். ஒட்டிகள் அச்சடித்து வழங்க உதவி செய்தவர். ஒரு பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிறுவியவர்.

ஈரோடு தமிழன்பனை தன் வழிக்காட்டியாகக் கொண்டவர்.

திரைப்பட இயக்குநர் களஞ்சியத்தை எனக்கு அறிமுகம் செய்தவர்.

எல்லோருக்கும் எப்போதும் உதவும் பெறுமனம் கொண்ட புனிதா  கணேசனை இத்திருக்குறள் திருத் தொண்டர் வரிசையில் வைப்பதை பூரிப்பாகக் கருதுகிறேன்.

 

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்