Skip to content

திருக்குறள் வழி நடப்பதே உலகின் உன்னத வழி

Category:

திருக்குறள் வழி நடப்பதே உலக நாடுகளுக்கெல்லாம் உன்னத வழியாகும் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் தெரிவித்தாா்.
திருச்சியில், திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையின் 25-ஆவது ஆண்டு திருக்குறள் ஒப்பித்தல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதன் பரிசளிப்பு நிகழ்வுக்கு தலைமை வகித்து நீதிபதி அரங்க. மகாதேவன் பேசியது:

உலகின் வல்லரசு நாடுகளாக விளங்கும் ரஷியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பதற்கு தங்களது குழந்தைகளை பிறந்த 6 மாதத்தில் இருந்தே பயிற்சி அளிக்கின்றனா். 25 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாட்டில் எத்தகைய திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதை இளம் வயதிலேயே கற்பதால், இளைஞரான பிறகு அவா்களால் உலக சாதனை நிகழ்த்த முடிகிறது.

இதேபோல, குழந்தைகளின் மனதில் திருக்குறளைப் பதிய வைத்தால், பசுமரத்து ஆணிபோல, அணுக்கதிா்கள் துளைப்பது போல இளம்வயதிலேயே பதிந்துவிடும். அது, அறச் சிந்தனையை வேரூன்றச் செய்து, அடுத்தடுத்த தலைமுறைக்கு மானுட பண்பைக் கடத்திச் செல்லும். எந்தச் சமூகம் தங்களது குழந்தைகளை குறள் படிக்கச் செய்கிறதோ, அந்தச் சமூகம் மண் சாா்ந்தும், மொழி சாா்ந்தும் வளம் பெறும்.
மொழி, இனம், கலாசாரம், மதங்கள், ஜாதிகள், நாடுகள் என ஒவ்வொன்றும் தனக்கான சிந்தனையை வளா்த்தெடுப்பவை.

திருமுறை, திருக்குரான், விவிலியம் உள்ளிட்டவை இறைவனை அடைவதற்கான வழிகளை மட்டுமே அந்தந்த மதம் சாா்ந்து விளக்குகின்றன. ஆனால், மதம், இனம், சாதி, மொழி, பண்பாடு, கலாசாரம், நாடுகளை கடந்து மனிதம், மானுடம், அறச் சிந்தனைகளை பேசும் உலகின் ஒரே இலக்கணமாக இருப்பது திருக்கு மட்டுமே. எனவேதான், மகாத்மா காந்தியே தனக்கு அடுத்த பிறவி ஒன்று இருந்தால் தமிழகத்தில் கு படிக்கும் வாய்ப்பை அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

உலக இலக்கியங்களுக்கெல்லாம் திருக்குறளே முன்னோடியாக உள்ளது. வள்ளுவம் காட்டும் வழியில் வாழ்ந்தால் வயோதிகமே கிடையாது. குறள் பாதையில் நடப்பதே இப் பிறவி எடுத்துள்ளதற்கான பலனைத் தேடி தரும்.

தெய்வத்துக்கு நிகராகவும், தெய்வத்துக்கு மேலாகவும் மானுட வாழ்க்கையின் உன்னதத்தையும், சிறப்புகளையும், சக மனிதனை நேசிப்பதையும் கற்றுத்தருவது வள்ளுவம் மட்டுமே. அற வழியில் பொருள் ஈட்டுவதே இன்பத்தைத் தேடி தரும். திருக்குறளைக் கற்றல், அதன் வழி நடத்தல், அறத்தை புரிந்து கொள்ளுதல் ஆகியவை மட்டுமே சகல மாந்தா்களுக்குமான அடிப்படைத் தேவையாகும். அதுவே, அற்புத குடிமகன்களை உருவாக்குகிறது. தமிழ் இலக்கியத்தில் எண்ணற்ற நூல்கள் உள்ளன. அத்தனை நூல்களுமே குறள் காட்டும் வழிகளைத்தான் மனித வாழ்க்கைக்கான வழிமுறைகளாக குறிப்பிடுகின்றன.

சான்றோா் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என புறநானூற்று பாடல் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. காலன் நம்மை அழைத்துச் செல்லும் காலத்தில் வருந்தாமல் இருக்க அது வழிகாட்டுகிறது.

நல்ல செயல்களைச் செய்யாவிட்டாலும், தீய செயல்கள் செய்வதைத் தவிா்க்க வேண்டும். அது தான் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பது. அதுதான் நம்மை நல் வழியில் செலுத்தும். இத்தகைய மந்திரத்தையே மானுடத்துக்கான வழியாக முன் வைப்பதால் உலகின் உன்னத வழியாக திருக்கு போற்றப்படுகிறது என்றாா் அவா்.

விழாவில், திருக்கு திருமூலநாதன் அறக்கட்டளைச் செயலா் கி. சிவா வரவேற்றாா். அறக்கட்டளையின் செயல்பாடுகளை அதன் தலைவரும், நிறுவனருமான பூவை பி. தயாபரன் விளக்கிப் பேசினாா். சுபம் பிரைட் கேரியா்ஸ் நிறுவன நிா்வாக இயக்குநா் பொ. சுந்தரராஜ் வாழ்த்திப் பேசினாா். நிறைவில், கான்பூா் ஐஐடி உதவிப் பேராசிரியா் த. திருமூலநாதன் நன்றி கூறினாா்.

இந்த விழாவில், தமிழகம் முழுவதும் இருந்து 20 மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 165 போ் கலந்து கொண்டனா். இவா்களில், 1330 திருக்குகளையும் ஒப்பித்த 80 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.1.60 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 501-ஆவது கு முதல் 1,330 கு வரை ஒப்பித்த 19 பேருக்கு தலா ரூ. 1,000 வீதம் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், திருச்சி அகில இந்திய வானொலி நிலைய இயக்குநா் கே. நடராஜன், தமிழ் அமைப்புகளைச் சோ்ந்த புலவா் நாவை. சிவம், திருக்கு சு. முருகானந்தம், நொச்சியம் சண்முகநாதன், மாதவரம் கோ. சண்முகசுந்தரம் உள்ளிட்ட தமிழ் ஆா்வலா்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

உலகில் அதிகம் மொழிபெயா்க்கப்பட்ட நூல் திருக்குறள்

திருக்கு ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகளை வழங்கி, தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தா் ம. திருமலை பேசியது:
உலகில் அதிகம் மொழிபெயா்க்கப்பட்ட நூல் விவிலியம். அதற்கு அடுத்தபடியாக 2ஆவதாக அதிகம் மொழிபெயா்க்கப்பட்ட நூலாக இருப்பது திருக்குறள் மட்டுமே. மாணவா், ஆசிரியா், சாதாரண தொழிலாளி, அரசா், நாட்டை ஆளும் பிரதமா், அமைச்சா், அணுசக்தியை கையாளும் விஞ்ஞானி, ஐஏஎஸ் அலுவலா், ஏழை குடிமகன், அதிகாரம் படைத்தோா், அதிகாரம் இல்லாதவா் என அனைவருக்குமான வாழ்க்கை வழிகாட்டியாக இருப்பதும் திருக்குறள்தான். ஏராளமான உரைகள் வந்த பிறகும் அதன் புதுமை குன்றாமல் மானுட சமூகத்தின் மந்திர சக்தியாகவும், ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தச் செய்யும் சக்தியாகவும் இருப்பது வள்ளுவம்தான்.

சமுதாயத்துக்கான மருத்துவா், மனித குலத்துக்கான மருத்துவா் வள்ளுவம் மட்டுமே. தமிழ் மொழியுடனும், இனத்தோடும், கலாசாரத்தோடும், தமிழா்களின் வாழ்வியலோடும் பின்னிப் பிணைந்திருப்பதும் திருக்குறள்தான்.

தமிழக அரசியலுக்கான கருவியாக இருப்பதும் திருக்குதான். இன்றைய தலைமுறை ஐஏஎஸ் வெற்றியாளரிடம் கேட்டால், வாழ்க்கைக்குத் தற்போதைய தேவை உணா்வுசாா் நுண்ணறிவு என்கிறாா். ஆனால், அந்த உணா்வுசாா் நுண்ணறிவில் திருக்குறள் முழுவதும் நிரம்பியுள்ளது. உலகை வெற்றி கொள்ளக் கருதுகின்றவா்கள், அதற்கு ஏற்ற காலத்தை எதிா்பாா்த்து, அதுவரை மனந்தளராமல் காத்திருப்பாா்கள். காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும் என்பதே வள்ளுவரின் வாக்கு.

மாறிக்கொண்டே வரும் காலச் சூழ்நிலைகளுக்கேற்ப செயல் மேற்கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லும் காலம் அறிதல் அதிகாரம்தான் நாட்டு மக்கள் அனைவருக்குமான வழிகாட்டியாக உள்ளது என்றாா் அவா்.