Skip to content
Sale!

திருக்குறள் அறிஞர்கள் அறிவோம்!

Category:
திருக்குறள் அறிஞர்கள் அறிவோம்!
முதுமுனைவர் இரா . இளங்குமரனார்
(சனவரி 30, 1930 – சூலை 25, 2021)
இளங்குமரானார் திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் என்னும் சிற்றூரில் 1927 சனவரி 30 அன்று பிறந்தார். அவரின் தந்தையார் படிக்கராமர், தாய் வாழவந்தம்மையார் ஆவார். 1946 ஏப்ரல் 8-இல் முதல் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர்த் தனியே தமிழ் கற்று சென்னைப்பல்கலைக்கழகத்தின் வழியாக 1951-ஆம் ஆண்டில் புலவர் தேர்வில் முதல் வகுப்பில் வெற்றி பெற்றார்.
செந்தமிழ் அந்தணர் இரா . இளங்குமரனார் படைத்துள்ள ” திருக்குறள் வாழ்வியல் விளக்கவுரை ” என்னும் இந்நூல் எழுபத்தைந்து ஆண்டுகளாகத் திருக்குறளையும், தொல்காப்பியத்தையும், சங்க இலக்கிய நூல்களையும் கற்றுத் தேர்ந்த பட்டறிவின் ஒளிக் கீற்றுகளால் வரையப்பட்ட ஒரு சீர்மிகு ஓவியம் என்றால் மிகை இல்லை .
நூலைப் படைத்தளித்துள்ள இலக்கணச் செம்மல் இரா . இளங்குமரனார் அவர்கள் தனித் தமிழ் இயக்க முன்னோடிகளில் ஒருவர் .
பேராசிரியர்களின் ஐயம் தீர்க்கவல்ல பெரும் பேராசிரியர் . முத்தமிழிலும் பன்னூறு நூல்களை யாத்துள்ள பெரு நூலாசிரியர் .
தமிழில் பாராட்டுதற்குரிய எச்சொல்லையும் பயன்படுத்தத் தகுதியான தமிழறிஞர் .
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரால் பாராட்டப் பெற்ற இலக்கண ஆய்வர் . புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் பாராட்டப் பெற்ற புலமையாளர் . வள்ளுவர் வழியில் வள்ளலார் எளிமையில் பாவேந்தர் வீறுடன் தமிழ்ப் பணியாற்றும் தகைசால் அறிஞர் , செந்தமிழ் அகராதிகள் பலவற்றைப் படைத்தளித்த தெள்ளிய அறிவாளர் . பொருள் பொதிந்த உரை நிகழ்த்தும் புகழ்மிகு பேச்சாளர் . உலகத் தமிழர்களின் உள்ளங் கவர்ந்த முத்தமிழ் வித்தகர் .
பல்கலைக்கழகங்கள் , அரசின் மொழி வளர்ச்சித்துறை ஆகியன செய்ய வேண்டிய ஆய்வுப் பணிகளைத் தனி ஒருவராக மேற்கொண்டு ஆய்வுத் தொகுப்புகளை நூல்களாக்கிய நடமாடும் பல்கலைக்கழகம் இரா . இளங்குமரனார் .
பண்பாட்டுக்குக் காந்தியம், பொருளியலுக்கு மார்ச்சியம், குமுகாயச் செம்மைக்குப் பெரியாரியம் எனக் கண்டறிந்த வாழ்வியல் நெறித் தோன்றல் . உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம் எனக் கண்டறிந்த உண்மைப் பேருளத்தர் .
பார்க்கும்  இடமெலாம் பல்கலைக்கழகம் எனப் பார்க்கும் பரந்த நோக்கர் . கல்லூரி சென்று கல்வி பயில வாய்ப்பில்லா நிலையிலும் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பெருமைக்குரியவர் .
தொகுப்பு
சி.இராஜேந்திரன்
வள்ளுவர் குரல் குடும்பம்
29/07/2021
நன்றி
முனைவர் அ. ஆறுமுகம்
பதிப்பாசியர்
பாவேந்தர் பதிப்பகம்
திருமழபாடி
திருக்குறள் நூல் அறிவோம்!!
முதுமுனைவர் இரா . இளங்குமரனார்
(சனவரி 30, 1930 – சூலை 25, 2021)
திருக்குறள்
வாழ்வியல் விளக்கவுரை (2018)
ஆறு தொகுதிகள் 2944 பக்கங்கள் ரூ2400 /-
சலுகை விலையில் ரூ 1600 /-
பாவேந்தர் பதிப்பகம்
திருமழபாடி
04329-243245
9884265973
ஏறத்தாழ மூவாயிரம் பக்கங்களில் ஆறு தொகுதிகளில்  ” திருக்குறள் வாழ்வியல் விளக்கவுரை ” தவ முனைவர் இரா . இளங்குமரனார் அவர்களது பேருழைப்பில் விளைந்த குறள் மணித்திரள்களின் தொகுப்பு . திருக்குறளுக்கு விளக்க உரையாக அமைந்த முழுமையான நூலாகவும் முதல் நூலாகவும் திகழும் பெருமையுடையது .
முறையாக வாழும் வள்ளுவ நெறி வாழ்வின் பதிவே இத் திருக்குறள் வாழ்வியல் விளக்கவுரை .தமிழிலக்கியப் பெருந்துறையில் ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே திருக்குறள் கட்டுரைகள் என்னும் பத்துத் தோணிகளை மேனாள் இந்தியத் தலைமை அமைச்சர் சவகர்லால் நேரு கரங்களால் செலுத்தித் தமிழ்த் தொண்டர்களை இலக்கிய உலா வரச் செய்த பெருந் தொண்டர்.
குறளாயங் கண்ட வேலா அவர்களின் ” குறளியம் ” திங்களிதழில் தொடர்ந்த திருக்குறள் வாழ்வியலுரையின் விளக்கமாக விரித்த அளவில் வெளிவரும் இத்திருக்குறள் வாழ்வியல் விளக்கவுரை தமிழர் பெற்ற தனிப்பெருங் சுருவூலமாகும் .
 கடின உழைப்பில் உருவான ” திருக்குறள் வாழ்வியல் விளக்கவுரை ” சங்க இலக்கியக் கடலின் எல்லா முகங்களையும் கண்டு வந்து தொல்காப்பியக் கருத்துகள் வள்ளுவத்தில் ஆளப்பட்டுள்ளதையும் சங்க இலக்கியங்களில் மட்டுமல்லாது திருமந்திரத்திலும் அருட்பாக்களிலும் வள்ளுவக் கருத்துகள் சொல்லாட்சிகள் ஆளப்படுவதையும் காட்டும் பெருங்கலமாகத் திகழ்கிறது .
திருவள்ளுவரைச் சமயச் சார்புடையவராகக் காட்ட முற்படுவோரின் கருத்துகளை மறுத்துத் தெளிவுறுத்தும் நூல் இது .
திருக்குறளுக்கு உரை திருக்குறளே என்னும் ஆய்ந்து தெளிந்த முடி பினரான இரா . இளங்குமரனார் குறளைக் கொண்டே குறளை விளக்கிக் காட்டும் குணநலத் தோன்றல் .
 குறளுக்கான முன் குறிப்பு , அதிகார விளக்கம் , குறளின் பொருள் பிரிப்பு முறை , சீர் விளக்கம் , அதிகார அடைவு , பின் குறிப்பு இவற்றுடன் ஒப்பு நோக்க இலக்கிய இலக்கண நூல்களில் இருந்து உரிய எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி அவ்வவ்விடங்களில் நாளிதழ் செய்திகள் , கதைகள் , வரலாற்று உண்மை நிகழ்வுகள் , பட்டறிவுப் பதிவுகள் எனக் காட்டுவதுடன் வள்ளுவம் கொண்டே வள்ளுவம் உணர்த்தும் உயரிய வழிகாட்டியாகவும் இந்நூல் விளங்குகிறது . சுருங்கக் கூறின் இந்நூல் வள்ளுவம் ஒரு வாழ்வியல் வழிகாட்டி என்பதை நிலை நிறுத்துவதுடன் கற்பார் தம் வாழ்வைச் சீர்மிகு வாழ்வாக்கும் பெற்றியுடையது .
இலக்கிய ஆர்வலர்களின் பெருந்துணையாக இலங்கும் இந்நூல் ஆள் வினைக்கும் வாழ் வினைக்குமான ஒரு பெருங் கையேடு எனின் மிகையன்று .
தொகுப்பு
சி.இராஜேந்திரன்
வள்ளுவர் குரல் குடும்பம்
29/07/2021
நன்றி
முனைவர் அ. ஆறுமுகம்
பதிப்பாசியர்
பாவேந்தர் பதிப்பகம்
திருமழபாடி