Skip to content

சமஸ்கிருத மொழியில் திருக்குறள்

Category:
திருக்குறள் நூல் அறிவோம்
சமஸ்கிருத மொழியில் திருக்குறள்
(முதற் பதிப்பு ஜனவரி 2021)
இந்த நூலாசிரியர் திரு வே. இந்திரசித்து  திருவாரூர் அருகே கூடூர்( மாங்குடி ) என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது தாய்மொழி தமிழ்.
இவர் இந்தியன் வங்கி நெல்லிக்குப்பம் கிளையில் 1974 ஆம் ஆண்டு முதல் 1985 ஆண்டு வரை பணியாற்றியபோது பல மாணவர்களுக்கும், EID பாரி நிறுவனத்தில் பணியாற்றிய பலருக்கும் இந்தி, சமஸ்கிருதம் ஆங்கிலம், ஆகிய மொழிகளை தன்னார்வத்தோடு கற்பித்துத் தொண்டாற்றினார்.
சமஸ்கிருத மொழியில் அதிகம் பயிற்சி பெறாத ஆனால் ஓரளவு தெரிந்த பலரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஓசை நயத்தோடு, கருத்து மாறுபடாமலும் திருக்குறளை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
இவர் வடுவூர் திரு வாசுதேவன் அவர்களிடம் இந்தி மொழி கற்றார். திருமலை நல்லான் சக்கரவர்த்தி, வடுவூர் அரங்கநாதச்சாரியார் ஆகியோரிடம் சமஸ்கிருதம் பயின்றார். மேலும் திரு அரங்கநாதன், திருமதி லலிதா பாட்டி நெல்லிக்குப்பம், திருமதி மாலதி சுப்பிரமணியம் சென்னை ஆகியோரிடமும் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டார்.
லிஃப்கோ வெளியீடுகளான பஜகோவிந்தம், முகுந்தமாலா, ரகுவம்சம் போன்ற சமஸ்கிருதம் தமிழ் உரையுடன் கூடிய நூல்களும், ஆர்ஷா வித்யாலய வெளியீடான வால்மீகி இராமாயணமும் இவருக்கு மேலும் சமஸ்கிருத மொழியை கற்க உதவின
சமஸ்கிருத மொழி பயிற்சிக்காக சில குறட்பாக்களின் கருத்துக்களை சமஸ்கிருதத்தில் ஆரம்பத்தில் எழுதிப் பழகினார், பிறகு 1330 குறட்பாக்களையும் சமஸ்கிருத யாப்பு வகைகளில் ஒன்றான அனுஷ்டுப் என்ற யாப்பில் ஸ்லோகங்களாக எழுதினார். வால்மீகி ஊராமாயணம், பகவத் கீதை, விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம் ஆகியவை அனுஷ்டுப் என்ற யாப்பு வகையில்தான் எழுதப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது
திருக்குறளின் அறம், மேன்மை, நலம், இனிமை ஆகியவற்றை இவருடைய மொழிபெயர்ப்பில் கொண்டுவர இந்த ஆசிரியர் முயன்று அதில் பெரும் வெற்றியும் பெற்றுள்ளார். எடுத்துக்காட்டாக இரண்டு குறள்கள் பார்ப்போம்.
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை
(வாழ்க்கைத்துணை நலம்
 குறள் எண்:53)
யஸ்ய பத்ரவதி பார்யா பவதி தஸ்ய நாஸ்தி கிம் I
யஸ்ய பத்ரவதி பார்யா நாஸ்தி பவதி தஸ்ய  கிம் II
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந்து அற்று
(பண்புடைமை குறள் எண்:1000)
அபாத்ரேஷு ஸ்திதம் துக்தம், பவதி நிஷ்ப்ரயோஜனம் I
 அபாத்ரேஷு ஸ்திதம் வித்தம், பவதி நிஷ்ப்ரயோஜனம் II
இந்த இரண்டு குறள் மொழி பெயர்ப்பு மூலம் சொல்லழகு, பொருளாழம், இலக்கண கட்டமைப்பு மூன்றும் புலப்படும்.
இந்த நூலுக்கு சென்னை சமஸ்கிருத கல்லூரி மயிலாப்பூர் முதல்வர் டாக்டர் இராதாகிருஷ்ணன், பேராசிரியர் டாக்டர் சுரேஷ் விஸ்வநாத சிவம் அவர்களும் வாழ்த்துரை  அளித்துள்ளனர்.
அணிந்துரை திரு ச. அ, பாலச்சந்திரனும் , பாராட்டுரை முனைவர் இ. இராவணனும் நல்கியுள்ளனர்
பக்கங்கள் 268
விலை ரூபாய் 225
ஆதிரை பதிப்பகம்
1/244 பெரிய மில் தெரு
கூடூர், மாங்குடி (அஞ்சல்)
திருவாரூர் மாவட்டம்
610103
தொடர்பு எண் 98404 97074
தொகுப்பு
சி. இராஜேந்திரன்
வள்ளுவர் குரல் குடும்பம்
14/07/2021