Skip to content

திருக்குறள் எழுந்த சூழலை தவத்திரு அழகரடிகள் விளக்கும் பாங்கு மகிழ்ந்து உளம்கொளத் தக்கது; இன்புறத்தக்கது

Category:

மனித முயற்சி மன முயற்சிதான் ; அதற்கு மேற்பட்ட அன்பு தெய்வச் சாயல்;அருள்முயற்சிகளெல்லாம் தெய்வக் கூறுகள்

திருவள்ளுவர் மன முயற்சியினால் மட்டும் திருக்குறள் மறையை வழங்கிவிடவில்லை ; அவர் பண்பாகிய அன்பு , தெய்வகுணமாகிய அருளில் ஒன்ற , அந்த அருளே வீறி நின்று திருவள்ளுவர் வாயிலாகத் திருக்குறளை வெளியிட்டது .தமிழகத்தில் திருக்குறள் மறை வெளிவந்தமை ஒரு தெய்விக அருள் நிகழ்ச்சி ! மதுவுண்ட வண்டுபோலத் திருவள்ளுவரின் உயிரறிவு மன அறிவாகிய இயற்கையறிவு பகுத்தறிவுகள் , அருளில் ஈர்க்கப்பட்டு ஒன்றிவிட்டன ; அதனால் தன் முனைப்பு இன்றியே அவை செயற்பட்டன .திருவள்ளுவர் சிந்தனையின் மறைமட்டுமன்று திருக்குறள் ! அவர் சிந்தனையெல்லாம் இயற்கையுண்மையில் திளைத்தபடி அமைந்து விட்டன ; இயற்கையுண்மைகளே திருவள்ளுவர் சிந்தனைகளாயின !அத்தகைய ஒன்றிய நிலையில் , தன் முனைப்பு அவிந்த பெருமையில் , பற்றற்ற தூய்மையின் அருளாற்றலில் , மன்பதையின் நற்பேறாகத் திருக்குறள் மறை எழுந்தது ! பெருந்தன்மை கூடி , பொருட் சூல் கொண்ட கருமுகிலாகி , ஆற்றல் மின்னலும் அறத்தின் இடி முழக்கும் தமிழ்த் தண்மையுங் கொண்டு , பல்லாயிரம் ஆண்டுக் காலமாக அருள் மழை பொழிந்து கொண்டிருக்கிறது .நீரின்றமையாது உலகெனின், யார் யார்க்கும் இத்திருக்குறள் வானின்றி உலகியல் ஒழுக்கு அமையாதாயிற்று !

திருக்குறள் அறம் (1970)
தவத்திரு அழகரடிகள்