நூலைப் பற்றி நூலாசிரியர் தனது முகநூல் பக்கத்தில்…
சான்லக்ஸ் பதிப்பகத்தின் 25 வது வெளியீடு.
நூல்: திருக்குறளில் தமிழர் மருத்துவம்
ஆசிரியர்: சித்த மருத்துவர் ஜெ.ஜெயவெங்கடேஷ்
#வலிந்து பொருள் கொள்ளல்
திருக்குறள் ஒரு பெருங்கடல் போன்றது. அந்த கடலில் மூழ்குபவர்கள் முத்து எடுக்கலாம். உப்பு எடுக்கலாம். மீன் பிடிக்கலாம். கடலின் ஆழத்தை ரசிக்கலாம். மேலும் மேலும் கிடைக்கும் கடல் படு திரவியங்களை கண்டு மகிழ்ச்சியடையலாம். அது அவரவர் எண்ண ஓட்டத்தை பொருத்தது. தமிழ் மருத்துவனாக திருக்குறளின் ஆழ்ந்த பொருளை விரும்பி வரும் பொழுது அதன் மெய்ப்பொருள் மேலும், மேலும் என்னை வியக்கச் செய்கிறது. மருத்துவம் மட்டுமல்ல. பொறியியல், வேளாண்மையியல், பொருளாதாரயியல், அரசியல், ஆட்சியியல், குடும்பவியல், காதலியல், இயற்பியல், வேதியியல், உடற்செயலியல், அங்கவியல் என திருக்குறளை ஆதி முதல் அந்தம் வரை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் பொருள் கொள்ள முடியும் என்பது வேறு எந்த நூலுக்கும் இல்லாத தனிச்சிறப்பை திருக்குறளுக்கு தருகிறது.
திருக்குறளை ஆய்ந்து ஆய்பவர்களால் தங்கள் எண்ண ஓட்டத்திற்கு எற்ப பொருள் கொள்ள முடியும் என்பதை நினைத்து இயங்கும் பொழுது அய்யன் திருவள்ளுவன் முற்றும் அறிந்த மெய்ஞானியாக கண் முன்னே புலர்வது உடல் சிலிர்த்து, தமிழ் பெருமையை நினைத்து உவகை கொள்ள முடிகிறது. இதில் மருத்துவத்தோடு தொடர்பு கொண்டு பொருள் கொண்டது என்னவோ சில குறள்கள் தான். ஆனாலும் இந்த கட்டுரையை முடிக்கும் தருவாயில் பொருள் கொள்ளாத, இதுவரை பொருள் கொள்ள இயலாத மருத்துவம் சாராத குறள் என நினைத்த பல குறள்களை ஆராயும் பொழுது உடல்நலவியல், மனநலவியல் மற்றும் தமிழர்கள் கடைப்பிடித்த ஆரோக்கியமான வாழ்வியல் இன்னும் ஒளிந்துகொண்டிருப்பதை என்னால் உணர முடிகிறது. இன்னும் திருக்குறளை ஆழ்ந்து படித்து பொருள் கொண்டிருக்கலாமோ என்ற குற்ற உணர்வு எனக்கு மீண்டும் மீண்டும் தோன்றுகிறது. இது எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதோ அல்லது திருக்குறளை வாழ்ந்து படிக்கும் அனைத்து துறையினருக்கும் தோன்றுகிறதோ என்ற எண்ண ஓட்டமே திருவள்ளுவரின் அனைத்து அதிகாரங்களையும் மீண்டும் மீண்டும் அசைபோட தோன்றுகிறது.
திருக்குறளின் ஈரடிகளும் ஏழு வார்த்தைகளும், இன்னும் பதம் பிரிக்க புதுப்புதுப் பொருளை கொண்டு வருவது எவ்வளவு பெரிய காலத்தால் அழியாத தமிழ் மறையை அய்யன் திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்றிருக்கின்றார் என்பதை உணரும் பொழுது தமிழ் குலத்தில் பிறந்த பெருமையை நினைத்து மனம் சிலிர்த்து போகிறது.
மெய் உணர்த்தும் திருக்குறளை இன்னும் ஆழ்ந்து நோக்கின் திருக்குறளின் 1330 குறள்களுக்கும் அவற்றின் 2660 அடிகளுக்கும் 9310 வார்த்தைகளுக்கும் லட்சத்துக்கும் மேற்பட்ட பொருள் கொள்ளலாம் என நினைக்கும் பொழுது இப்பெரும் காப்பியத்தை உலக பொது மறையில் தமிழ் மருத்துவத்துடன் தொடர்பு கொள்ள வள்ளுவனே என்னை பணித்திருக்கிறானோ என எண்ணி பெருமை கொள்ளத் தோன்றுகிறது. திருக்குறளை வலிந்து பொருள் கொண்டு இதனை தமிழ் மருத்துவத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் திருவள்ளுவர் காலத்திற்கு முன்பே தமிழ் மருத்துவம் எப்படி கலப்புறாமல் இருந்திருக்கின்றது என எண்ணி மீண்டும் மீண்டும் பெருமை கொள்கிறேன்
#வள்ளுவன் வழியில் தமிழ் மருத்துவம்
பொருள் பற்று, புதல்வர் பற்று, உலகப்பற்று ஆகியவற்றை தமிழ் மருத்துவனாய் சித்த மருத்துவம் படிக்கும் காலத்திலேயே அரைகுறையாய் புரிந்திருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல பல்வேறு சித்தர் பாடல்களை ஆழ்ந்து கவனித்ததில் பொருள் உணர்ந்து தமிழ் மருத்துவம் எப்படி அகவியல் மற்றும் புறவியலுடன் இணைந்துள்ளது என்பதை உணர்ந்து பெருமையுற்ற பொழுது அதையும் தாண்டி வெறும் 2660 அடிகளில் இவ்வுலகின் அறிவிலையும், ஆன்மீகத்தையும், உலகத்தோற்றத்தையும், உயிர் தோற்றத்தையும் மிகச் சிறப்பாக சொல்கிற வள்ளுவனே முதல் சித்தன் என எண்ணத் தோன்றுகிறது.
ஓரிடத்திலும் வள்ளுவன் வாதம், பித்தம், கபம் என்ற வடமொழி மருத்துவத்திற்கு சொந்தமான ஆயுர்வேத மருத்துவ அடிநாதத்தை குறிப்பிடவில்லை என்பது வள்ளுவன் காலத்தில் வடமொழி மருத்துவம் தமிழ் மக்களிடம் இல்லை என்ற உறுதியை நிலைப்படுத்துகிறது. மேலும் வேதகாலத்திற்கு முந்தைய மெய் உரையை வள்ளுவன் குறிப்பால் உணர்த்துவதும், ரிக் வேதம் சொல்லும் ருத்திரன் என்ற சிவனை முதற் மருத்துவன் என்ற குறிப்பை தனது முதல் குறளில் ஆதி பகவன் என்றும், மண், ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் ஆகிய பூதங்களின் தோற்றக்கிரமத்தை ஆங்காங்கே உணர்த்தியும், ஐம்பொறிகளும், புலன்களும் எப்படி அறிவைத்தரும் எந்திரங்களாக செயல்படுகின்றன என்ற தமிழ் மருத்துவத்தின் ஞானேந்திரிய தத்துவத்தையும் இங்கே வள்ளுவன் ஆங்காங்கே வெளிக்கொணர்ந்திருப்பது ஒரு காலத்தில் தமிழ் மருத்துவம் எப்படி தூய்மையாக கன்னிப் பெண்ணாக இருந்திருக்கின்றது என்பதை எண்ணி வியப்பு கொள்கிறேன். அவ்வாறு பெருமையுடன் இருந்த தமிழ் மருத்துவத்தின் தன்மையை வள்ளுவன் கூறும் பிறனில் விழையாமை என்ற அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள இந்த குறளில் தற்போது என்னால் பொருத்திப் பார்க்க முடிகிறது.
“பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்”.(141)
அடுத்தவர் பொருளையே பயன்படுத்திக் கொள்ளும் அறியாமை அறிவினால் நேர்மையின் பொருள் அறிந்தவரிடத்தில் இல்லை. மேற்கண்ட குறளின் பொருளே திருக்குறள் தமிழர் மருத்துவத்திற்கு சொந்தமானது என்பதை உறுதி செய்கிறது.
ஆம்! தற்போதைய தமிழ் மருத்துவம் பல்வேறு மொழி கலப்பில் காரணமாக சற்று செழுமைப்பட்டு இருந்தாலும் வள்ளுவன் காலத்தில் தமிழ் மருத்துவம் வடமொழி கலப்பின்றி கன்னிப்பெண்ணாய் நாணம் கொண்டு இருந்திருக்கின்றது என்பதை உணரமுடிகிறது. பிறமொழி கலப்பின்றி தமிழ் மருத்துவமாய் வள்ளுவனின் வாக்குபடி தனித்து உயர்ந்து நின்ற தமிழ் மருத்துவத்தின் தற்போதைய வளர்ச்சி பிரமிக்க வைத்திருக்கிறது என்றாலும் பிறமொழி கலப்பின்றி உன்னதமாய் அகம் புறம் தூய்மையாய் இருந்த பண்டைய தமிழ் மருத்துவத்தை வள்ளுவரின் வழி நின்று அகம் மற்றும் புறம் நலம் தாங்கி அய்யன் வள்ளுவன் வழி நடக்க தமிழ் மருத்துவனாய் உறுதி கொள்வோம். தமிழ் மருத்துவத்தின் உட்கருத்துகளை பிரதிபலிக்கும், தமிழர் மருத்துவ வாழ்வியலோடு இயைந்து காணப்படும் குறள்கள் உய்த்துணரப்பட்டு கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுரையின் தொகுப்பில் விட்டுப்போன மேலும் பல குறள்களை நுண்புலனாய்வு செய்வதன் மூலம் தமிழ் மருத்துவத்தின் ஆழ்ந்த அறிவை வள்ளுவனின் வாயிலாக அனைவராலும் உணர்ந்து கொள்ள முடியும் என தமிழ் மருத்துவனாய் உறுதி கொள்கிறேன். இந்நூல் கட்டுரை ஆய்வு சுருக்கம் சிகாகோ உலகத் தமிழ் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டது.
2023 ஆண்டு இறுதியில் வெளியாகி தற்பொழுது விற்பனைக்கு விரைவில் வரவிருக்கும் “திருக்குறளில் தமிழர் மருத்துவம்” என்ற இந்நூலை அமேசான் தளத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.