திரு. பூவை சாரதி, தஞ்சை
தஞ்சைத் தரணி எனப்படும் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளோடும், தமிழ் ஆர்வலர்களோடும் நேரடித் தொடர்பில் இருப்பவர் பூவை சாரதி. மேலும், தமிழகத் தமிழ்க் கவிஞர்கள் மன்றம் என்ற அமைப்பிலும் தமிழகத் தமிழ் ஆசிரியர்கள் கழகங்கள் பொறுப்பிலும் இருந்து கொண்டு தமிழ்நாடு முழுவதும் பயணங்கள் செய்து தமிழும் திருக்குறளும் பரப்பி வரும் கவிஞர் இவர். நல்ல பேச்சாளர், ஒருங்ணைப்பாளர், சமூக அக்கறையுள்ளவர். மற்றவர்களை பாராட்டுவதிலேயே தன் அன்பான இனிமையான சொற்களால் கவர்ந்து விடுபவர்.
இவருடைய தங்கையார் சீதாவையும், தமிழ்ச் செல்வியையும் தமிழுக்காகவே வாழ வழி செய்தவர். இப்போது அவர்கள் (எங்களூர்காரர்கள்) திருவள்ளுவர் ஞான மன்றத்தின் அவைகளில் புலவர்களாகவே விளங்குகின்றனர். எல்லா வகையிலும் ஒரு தமிழாசிரியர் தமிழ்ப்பற்றோடு செயல்படுவதை இவரையன்றி நான் யாரையும் பார்த்ததில்லை. ஞான மன்ற மாநாடுகளிலும், தலைமையிடமான செயங்கொண்ட சோழபுரத்தில் நடக்கும் கூட்டங்களிலும் கலந்து கொள்வது மட்டுமின்றி நிதியுதவிகளும் செய்து வருபவர். குறிப்பாக நான் சொன்ன உடனே உங்களுக்குச் செய்யாமல் நான் யாருக்குச் செய்யப் போகிறேன் என்று செய்து கொடுப்பவர்.
கேரளா திருக்குறள் மடத்தில் தலைவருக்கு உடனடியாக ஓராயிரம் பணம் அனுப்புங்கள் என்றேன் . கேள்வி இல்லாமல் அனுப்பி வைத்தவர். சிறந்த நூலாசிரியாரான இவர் அப்துல்கலாம் பற்றி எழுதிய நூல் பல பதிப்புகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
நாகை குத்தாலத்தில் பிறந்து வளர்ந்து திருவாரூர் வடுவூரில் பணியாற்றிக் கொண்டு தஞ்சையில் வாழ்பவர். அதனால் எல்லா நிகழ்வுகளிலும் இவரைக் காணலாம்.
திருக்குறள் சொல்லும் அனைத்து அறநெறிகளையும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுத்தும் கவிஞர் பூவை சாரதியை திருக்குறள் திருத்தொண்டர் என அழைப்பதில் அவரும் பெருமைப்படுவார். நானும் பெருமைப் படுகிறேன்.