Skip to content

செல்வி.பராசக்தி,பவானி

செல்வி. பராசக்தி பவானி, ஈரோடு மாவட்டம்

செய்தித்தாள்களில் படித்தும், நண்பர்கள் சொல்லிக் கேட்டுமே பலருடன் நான் தொடர்புக் கொண்டு அவர்களை என்னுடைய இயக்கத்தில் இணைத்துக் கொண்டுள்ளேன். அதுபோல ‘தினத்தந்தி’ செய்தித் தாளில் படித்துத் தொடர்புக் கொள்ளப்பட்டவர் அம்மையார் பராசக்தி. ஆதரவற்றவராகவே மற்றவர்களால் வளர்க்கப்பட்டு ஆசிரியர் பணியாற்றி (ஈரோடு அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி) ஓய்வுப் பெற்றவர்.

தான் 35 ஆண்டுகள் பணியாற்றிய பள்ளிக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்று கருதி திருவள்ளுவர் சிலையும், மணிமண்டபமும் 2 இலட்ச ரூபாய் செலவில் கட்டிக் கொடுத்துள்ளார். இந்தச் செய்தியை படித்த நான் 10 நண்பர்களைக்கொண்டு பாராட்டுக் கடிதம் எழுத வைத்தேன். ஓரிரு ஆண்டுகளில் கோவையில் எனது மருமகள் வீட்டுக்குச் சென்றபோது முதல் வேலையாக பவானி சென்று பராசக்தி அம்மையாரைச் சந்தித்தேன்.

அப்போது அவருக்கும் எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. திருவள்ளுவரை இறையாக நான் கருதவில்லை. அவரை வணங்க வேண்டியதில்லை என்று கூறினார். அவரது வீட்டு பூசை அறையில் 20 கடவுள் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. நான் சொன்னேன், “இத்தனைப் படங்களையும் சிவகாசியில் தான் அச்சடித்துள்ளார்கள். நானும் சிவகாசியில் திருவள்ளுவர் திருவுருவப்  படத்தை அச்சடித்துள்ளேன். உருவத்தை நேர்முகமாக சிறிது மாற்றி திருவாட்சி அமைத்து வைத்துள்ளேன். இதையும் வணங்கலாமே! நம் முன்னோர்களில் ஒருவர் விருப்புவெறுப்பற்ற சமநிலை தான் கடவுள் என்று சொன்னவர்.  இவரை விடவா இன்னொருவர் சொல்ல முடியும்,” என்ற போது இயல்பாக அதை ஏற்றுக்கொண்டார்.

கூடுதலாக இந்த கருத்தையும் உருவத்தையும் மக்களியக்கமாக மாற்றும் எனது முயற்சிக்கு உதவி செய்து ஐந்து திருக்குறள் ஒட்டிகள் (10,000 ரூபாய்) அச்சடிக்கக் கொடுத்தார். தன்னை வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தை வேதாம்பாள் சிவானந்த பெரியார் அறக்கட்டளை  நிறுவி நற்பணிகள் பலவும் செய்து நன்றி பெருக்கால் மனம் நிறைவுடன் வாழ்கிறார்.  இதுதான் வள்ளுவர் காட்டிய வழி

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுன்றாம் உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகற்கு

என்று அவர் கூறுவதும் இதைத்தான்.

கடவுளுக்கு நன்றி சொல்வதே அறி வுடைமை.

 

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்