Skip to content

“பாமரருக்கும் பரிமேலழகர்”

துக்ளக் இதழில் “பாமரருக்கும் பரிமேலழகர்”
பற்றி ஒரு குறிப்பு வந்திருந்தது .
“திருக்குறளை வக்கிரப்படுத்திய திராவிடம்” என்ற தலைப்பு அட்டைப் படத்தில்.
உள்ளே “நினைத்துப் பார்க்கிறேன்” பகுதியில் “திருக்குறள், புருஷார்த்தம், சனாதன தர்மம் – பரிமேலழகர் உரை” என்ற கட்டுரையில் அந்தக் குறிப்பு இடம் பெற்றுள்ளது.
இதை ஏற்கனவே நண்பர் மருத்துவர் திருப்பதி பகிர்ந்து கொண்டிருந்தார் .அதன் முழுமையான பகுதியை தகடூர்சம்பத் தற்போது பகிர்ந்து கொண்டார்.
எனது கருத்து*சிற்பி பாலசுப்ரமணியன்* , “பாமரருக்கும் பரிமேலழகர்” என்ற நூலுக்கு அளித்த தனது அணிந்துரையில் கூறிய கருத்துதான்…
“வடநூல் சார்பானதும், வர்ண முறையிலானதும், தன்கால வழக்குகளுக்கு இடம் தந்தமையால் ஒரு பக்கம் சாய்ந்த இடங்கள் பரிமேலழகர் உரையில் உண்டென்றாலும், நுட்பம், ஒட்பம் பன்னூல் புலமை, தர்க்க நெறி, துல்லிய தெளிவு, ஆற்றொழுக்கான தமிழ்நடை என மாண்புகளால் ஓங்கி ஒரு கொடிமரம் போல் உயர்ந்து நிற்பது பரிமேலழகருரை”
இனி என் கருத்து……
திருக்குறளின் அறம், பொருள், காமம் என்ற முப்பாலும், முறையே பொருள் பொதிந்த, பொருள் நிறைந்த, இன்ப வாழ்க்கைக்கு ஒரு கையேடு;திருக்குறளின் நோக்கம் முதலில் மனிதன் “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” முடிவாக மெய்யுணர்தலே; பல்வேறு காரணங்களால் பிளவுபட்டுக் கிடக்கும் மனித இனத்தை ஒன்று சேர்க்கும் பணியில் , திருக்குறளுக்கென்று ஒரு தனியிடம் உண்டு என்பது என் கருத்து.
பாமரருக்கும் பரிமேலழகர் என்ற 1890 பக்கங்கள் கொண்ட நூல் பத்தாண்டு கால உழைப்பில் விளைந்தது. இது “பரிமேலழகரைப் பற்றிய புரிதல்களைப் பரவலாக்கும் ; வள்ளுவப்பெருந்தகை பாடிய அறம் மக்கள் உள்ளத்தில் ஆழமாக வேரூன்ற உதவும்;மேலும், பரிமேலழகரைப் பற்றிய அறிவார்ந்த விமர்சனங்களையும், விவாதங்களையும் அடுத்த தளத்திற்கு இட்டுச் செல்லும்” என்பது என் உறுதியான நம்பிக்கை.
திருக்குறள், மக்கள் இயக்கமாக மாறிட திராவிட இயக்கங்கள் ஆற்றிய பணிகளை வரலாறு உரக்கச் சொல்லும்.
1949 இல் தந்தை பெரியார் நடத்திய மாபெரும் திருக்குறள் மாநாடு. தமிழ்த் தென்றல் திரு வி க உட்பட பல்வேறு அறிஞர்கள் கலந்து கொண்டனர். http://periyarparvai.blogspot.com/…/blog-post_16.html…
அன்றைய பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு வள்ளுவர் ஓவியத்தை அங்கீகரித்தது . ஒன்றியத்தில் இருந்த காங்கிரஸ் அரசு தபால் தலை வெளியிட்டது.
1961 ல் அன்றைய தபால் துறை அமைச்சர் டாக்டர் சுப்பராயன் அவர்களின் முயற்சியால் திருவள்ளுவர் திருவுருவம் ஒன்றிய அரசின் தபால் தலையில் வெளியானது.
1964 ல் சட்டசபையில் திருவள்ளுவர் திருவுருவம் திறந்து வைக்கப்பட்டது. அப்போது இங்கே முதலமைச்சராக இருந்தவர் பெரியவர் பக்தவச்சலம் அவர்கள்.
அதன் பிறகு அரசு அலுவலகங்களில் வள்ளுவர் ஓவியம் (பேரறிஞர் அண்ணா), அரசுப் பேருந்துகளில் திருக்குறள் ,திருவள்ளுவர் பெயரில் போக்குவரத்து கழகம் ,சென்னையில் வள்ளுவர் கோட்டம் ,குமரி முனையில் வானுயர வள்ளுவர் சிலை , மெரினாவில் வள்ளுவர் சிலை, முற்றோதல் செய்யும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை, முற்றோதல்செய்யும் மாணவர்கள் எண்ணிக்கையின் உச்ச வரம்பை முற்றிலுமாகத் தளர்த்தியது ,பரிசுத்தொகையை உயர்த்தியது, பள்ளிக் கல்வித் திட்டத்தில் திருக்குறள், போட்டித் தேர்வுகளில் திருக்குறள்,என்று பற்பல நற்பணிகள் திராவிட கட்சிகள்தான் முன்னெடுத்துச் செல்கின்றன.
நமது நாட்டிலும் மற்றும் உலகெங்கும் உள்ள பல்வேறு இனத்தவர்களும் இதன் மேன்மையை அறிந்து போற்றி, ஓர் அறம் சார்ந்த சமுதாயம் உருவாகும் நாள் தொலைவிலில்லை என்பது என் திண்ணமான எண்ணம்.
அன்புடன்
சி இரா
வள்ளுவர் குரல் குடும்பம்

https://www.facebook.com/share/p/9zTmbCLHQAWUeR4o/?mibextid=WC7FNe