ஒழுக்கம் உள்வழிப்படும் குணமும்
ஒழுக்கம் இல்வழிப்படும் குற்றமும்
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி. குறள் 137
இரண்டு நாட்களாக இந்தக் குறள் மனத்தில் ஓடிக்கொண்டிருந்தது
“ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை ”
“இழுக்கத்தின் எய்துவர் பழி ”
என்று எளிதாகக் கூறிவிட்டால் போதுமே
அதென்ன “எய்தாப்” பழி என்ற ஒரு சொல்லைப் போட்டு இருக்கிறார் பொய்யாமொழியார்..
மணக்குடவர் பொருள் கூறும்போது “எய்தா”என்ற சொல்லை முதல் அடியிலும் போட்டுக் கொள்கிறார் இரண்டாம் அடியிலும் போட்டுக் கொள்கிறார். அதற்கேற்ப பொருள் கூறுகிறார்.
ஒழுக்கத்தின் எய்துவர் எய்தா மேன்மை
இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி
சரி எய்தா என்ற சொல்லுக்கு என்ன பொருள்…?
சற்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்று
பரிமேலழகர் இங்கே துணைசெய்கிறார்
எய்தா= தாம் எய்துவதற்கு உரித்தல்லாத, (செய்யாத குற்றத்திற்கு பழி சுமத்தப்படுவது, செய்யாத வேலைக்குப் புகழ் வந்து சேர்வது.. பின்னது மிகவும் அரிதாகவே நடக்கும்)
செய்த குற்றத்திற்கு பழி வந்து சேரும் அது உண்மை .ஆனால் ஒழுக்கம் தவறினால் செய்யாத குற்றத்திற்கும் பழி வந்து சேரும் என்கிறார் வள்ளுவர் ….அதைத்தான் தனக்கு உரித்தல்லாத பழியும் தன் மீது சுமத்தப்படும் என்கிறார் பரிமேலழகர்.
எடுத்துக்காட்டாக,ஒரு பகுதியில் தொடர்ந்து திருட்டு நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம் . ஒன்றுக்கும் மேற்பட்ட திருட்டுக் கும்பல் அந்த பகுதியில் தனது கைவரிசையைக்காட்டி வரலாம்.
விசாரணை நடக்கும் போது ஒரு திருட்டுக் கும்பல்மாட்டிக் கொள்கிறது. காவல்துறை மற்ற இடங்களிலும் இதே கும்பல்தான் ,தன் கைவரிசையைக் காட்டி இருக்கும் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்வார்கள். பல சமயங்களில் செய்யாத குற்றத்திற்கும் பழி ஏற்க நேரிடும். பெரும்பாலான நேரங்களில் உலகமும் அதை உண்மை என ஏற்கும்.
அதேபோல் ஒருவர் மீது ஒரு குற்றத்திற்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி இருப்பார்கள் .அது தொடர்பாக விசாரிக்கும்போது அதுவரை கவனத்திற்கு வராத வேறு பல குற்றச்செயல்களும் கவனத்திற்கு வரும் .புதிதாக வழக்குகள் பதியப்படும்.
எனவே ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வது நலம் தரும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை
பரிமேலழகர் உரை:
ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் –
எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்;
இழுக்கத்தின் எய்தாப்பழி எய்துவர் –
அதனின்றும் இழுக்குதலானே தாம் எய்துவதற்கு
உரித்தல்லாத பழியை எய்துவர்.
(பகை பற்றி அடாப்பழி கூறியவழி, அதனையும் இழுக்கம் பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், எய்தாப் பழி எய்துவர் என்றார்.
இவை ஐந்து பாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படும் குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன.).
மணக்குடவர் உரை:
ஒழுக்கத்தாலே தமக்கு எய்தாத மேம்பாட்டை எய்துவர்; அஃதின்மையாலே தமக்கு அடாதபழியை எய்துவர்.
மு.வரததாசனார் உரை:
ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.
From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace.
சி. இரா
www.voiceofvalluvar.org
19/07/23