Skip to content

திரு. நீலகண்டன்,மயிலாடுதுறை

திரு. நீலகண்டன், மயிலாடுதுறை

செல்வாக்கும், சொல்வாக்கும் உள்ளவர்கள் திருக்குறள் பரப்புரையைக் கையிலெடுக்கும் போது அது அசுர வளர்ச்சியடையும் என்பதற்கு நீலகண்டனே சான்று. செல்வமும் அரசியல் பின்னணியும் கொண்ட அவர் நண்பர் மாணிக்கமும், நா. கலியபெருமாளும், நானும் அமர்ந்து பேசிய பின்பு தான் மயிலாடுதுறையில் திருக்குறள் பேரவை அமைக்கும் திட்டம் உருவானது.

நீலகண்டனாரின் வழிகாட்டுதலுடன் ந. க. அவர்கள் விரைந்து செயல்பட்டு திருக்குறள் பேரவையைத் தொடங்கி தற்போது 60 வது மாதவிழா (நடத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது. ஏறத்தாழ ஒவ்வொரு மாதமும் 100 பேர் கூடுகிறார்கள். இதற்கெல்லாம் வித்திட்ட நீலகண்டன் தனது அரசியல் பின்னணியிலேயே அகால மரணம் அடைய நேரிட்டது வருந்தத்தக்கது. அவரது படத்திறப்பை என் கையாலேயே செய்ய வேண்டுமென்று நண்பர்கள் கேட்டுக்கொண்ட போது உண்மையிலேயே ஆறாத்துயரத்துடன் தான் அந்தப் பணியை செய்தேன்.

என்னைப் போலவே பள்ளித் தலைமையாசிரியராகவும், வட்டார வளமையின் மேற்பார்வையாளராகவும் பணியாற்றியதாலும் ஆசிரியர்களின் போராட்ட இயக்கங்களிலும் என்னைப் போலவே முன்னின்றவர் என்பதாலும் மயிலாடுதுறை ஆசிரியர் இயக்கங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் அவரது இறுதி அஞ்சலிக்கும், நினைவேந்தல் நிகழ்ச்சிக்கும் வந்திருந்தது அவரின் திருக்குறள் தொண்டை நினைவுக்கூர்வதாகவே இருந்தது. அவரது மனைவியரும் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். நீலகண்டனின் திருக்குறள் பணிக்கு என்றும் துணையாக இருந்தவர். ஞானமன்ற மாநாடுகளிலும் ஆண்டுவிழாக்களிலும், மதுரை போன்ற வெளியூர் கூட்டங்களிலும் என் அழைப்பை ஏற்று பல நண்பர்களுடன் மகிழுந்தில் வந்து பெருமைப்படுத்தியவர்.

அவரை திருக்குறள் திருத்தொண்டராக வரிசைப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

 

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்