திரு. நாராயணசாமி, உ டையார் கோவில், தஞ்சை
ஊர்ப்புறக் கலைகளான கோலாட்டம், கும்மி போன்றவற்றில் திருக்குறள் கருத்துக்களை மக்களிடையே கொண்டு செல்லும் அற்புதமான தொண்டர் நாராயணசாமி. நான் தஞ்சை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலராக இருந்தபோது அனைத்து பள்ளிகளுக்கும் பார்வையிட்டு நிர்வாகப் பணிகளை ஆங்காங்கே இருக்கும் ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி திருக்குறள் பக்கம் திருப்புவதை விருப்பமாக செய்து வந்தேன். அப்போது பெற்றோர் என்ற முறையில் தான் நாராயணசாமியைச் சந்தித்தேன். ஆனால் அவரோ இன்று நாடறிந்த திருக்குறள் கலைஞராக, திருக்குறள் இயக்க அமைப்பாளராக தஞ்சை மாவட்டம் முழுவதும் அறியப்பட்டிருக்கிறார்.
அவர் கூறுவார், ஐயா தங்கள் தூண்டுதலினால் தான் நங்கள் துலங்கலானோம் . அந்தத் துலங்கல்கள் திருவள்ளுவர் ஞானமன்ற மாநாடுகளுக்கு பயன்படுகிறது. செயங்கொண்டசோழபுரம், கரூர், பெண்ணாடம் ஆகிய மாநாடுகளில் தங்கள் மாணவக்குழுவினரோடு நகர் தெருக்களில் நடனமாடி கோலாட்டமாடி திருக்குறள் பரப்புரை செய்தது மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.
அதுமட்டுமல்லாமல் தங்களூர் பள்ளியைச் சுற்றியுள்ள பள்ளி மாணவர்களுக்கும் திருக்குறள் போட்டிகளை நடத்தி சிறப்பான நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார். என்னையும் அழைத்து அவர் சிறப்பு செய்ய நினைத்தாலும் பல சமயங்களில் அது நிகழாமல் போய் விடுகிறது.
நாராயணசாமி உழவுத் தொழிலை செய்பவராயினும் தேர்ந்த திருக்குறள் பரப்புரையாளராக தன்னை ஆக்கிக் கொண்ட இந்த வரலாறு தமிழகம் முழுவதும் அறியப்படவும், பின்பற்றப்படவும் வேண்டியதாகும். அதனால் தான் நாராயண சாமியை திருக்குறள் திருத்தொண்டர் வரிசை வைத்து ஆவணப்படுத்துவதை மகிழ்ச்சியோடு செய்கிறேன்.
வாழ்க அவர் தொண்டு! வளர்க அவர் கலைகள்!.