நாம் வாழும் காலம் சிக்கலான காலம். இக்காலத்தில் அன்புடைய பெற்றோர்களும் மக்களோடு நெருங்கிப் பழகி அன்பாக வளர்ப்பதற்கு வாயப்புக் குறைவு. பெற்றோர்களுக்கு வெவ்வேறு கடமைகள் மிகுந்துவிட்டன: வீட்டில் இருந்து வாழும் நேரம் குறைந்துவிட்டது. ஆகவே பெற்ற மக்களின் உள்ளத்தோடு இயைந்து வாழ்ந்து அவர்களைப் பண்படுத்த முடியவில்லை.
கல்விக் கூடங்களில் உள்ள ஆசிரியர்களும் மாணவர்களோடு உள்ளம் இயைந்து பழக முடியாத காலம் இது. மாணவர்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது: பாடங்கள் கூடி வருகின்றன: மணிக்கணக்குப் பார்த்து வகுப்புகள் யந்திரம் போல் நடத்தி முடிக்க வேண்டியுள்ளது.
பரிட்சைப் பாடங்களுக்காக மாணவர்களையும், சம்பளத்திற்காக ஆசிரியர்களையும் கல்விக் கூடங்கள் ஒன்று சேர்க்கின்றன: பிரித்து விடுகின்றன. ஆகவே மனங்களைப் பண்படுத்தும் ஆற்றல் ஆசிரியர்களுக்கும் முன்போல் இல்லை.
பொதுவாக, இக்காலம் தீமைக்கு வேகம் ஊட்டுகிறது. நன்மைக்கு உரம் தருவதில்லை. இயல்பாகவே நல்லது ஒட்டிக்கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டியதாக உள்ளது; தீமை தானாகவே ஒட்டிக் கொள்கிறது. இக்காலச் சூழ்நிலையோ,தீமை பெருகுவதற்கு வழி வகுத்துள்ளது. நன்மை வளர் வதற்குத் துணை புரிவதில்லை.
இந்நிலையில் நல்வாழ்வு வாழ வேண்டும் என்று விரும்புவோர் தாமாக விடாமுயற்சி மேற்கொண்டால்தான் வெற்றி பெற முடியும்.
ஆனால் ஒன்று; நல்வாழ்வு மனத்துக்கு அமைதியும் இன்பமும் தரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டால் பிறகு எவ்வளவு இடர்ப்பாடுகள் வந்தாலும் அவற்றைக் கடந்து முன்னேற முடியும். பொல்லாத சூழ்நிலையில் சிக்குண்டிருந்தாலும் ஒரு சில நல்ல நூல்களின் துணை கொண்டு பண்பட்டு விளங்க முடியும்.
((பொய்யா மொழியார் அருளிய திருக்குறள் அத்தகைய நூல் என்பதில் ஐயமில்லை.. மு வ நூல்கள் மனங்களை பண்படுத்த வல்லன.))
மு வ
நல்வாழ்வு நூலிலிருந்து
www.voiceofvalluvar.org