திரு. முருகானந்தம், திருக்கடையூர், நாகை
எனது அறுபது அகவை நிறைவு விழாவை (அறுபது திருமணம் என்பார்கள்) மிகச் சிறப்பாக நடத்த உதவியவர் முருகானந்தம். திருக்கடையூரில் திருமணம் என்றதுமே அனைவரும் அபிராமி அன்னையே நினைவுக்கொண்டு வந்தார்கள் . ஆனால் நான் அய்யன் திருவள்ளுவர் திருக்கோயிலே துணைவியாருக்குத் தாலிக்கட்டி விருந்து வைத்து திருக்குறள் சொற்பொழிவாற்றி முன் மாதிரியாகச் செய்தேன். கேரளா சிவானந்தரையும் சிறப்பு விருந்தினராக அழைத்து வந்திருந்தேன். இந்த எல்லா ஏற்பாட்டிலும் முன்னின்று செய்து மறைந்திருந்தவர் முருகானந்தம்.
திருக்கடையூரில் திருவள்ளுவர் சிலை நிறுவவும், மண்டபம் கட்டவும் கலைமகள் பள்ளி நெடுஞ்செழியன் அனுமதி கொடுத்திருந்தாலும் முருகானந்தம்தான் அந்த ஊரில் நன்கு அறிமுகமான பெரியவர் என்பதால் ,அத்தனை சீரோடும் சிறப்புமாகச் செய்தார். அதேபோல் அச்சிலையை நிறுவும் போதும் தேரோட்டத்தோடு மயிலாடுதுறை ஆசிரியர் முருகானந்தம், குணசேகரன், குமார், ஆகியோர் முன் கையெடுக்க சிறப்பாகச் செய்து சிலை நிறுவினார் முருகானந்தம். அதுமட்டுமின்றி வள்ளுவர் மண்டபத்திற்கு வாரம் ஒருமுறை சென்று திருவள்ளுவருக்கு ஆடை அணிவித்து மலர் மாலை சாத்தி வருவார்.
திருவடைக்கழி என்ற சிற்றூரைச் சேர்ந்த முருகானந்தம் மக்கள் மனதில் நன்கு பதிந்தவர். அதனால் தான் எங்கள் கல்வித்துறைக்கே அறிவிக்காமல் அழகான ஒரு திருவள்ளுவர் சிலையை ,தான் பணியாற்றும் பள்ளியில் நிறுவி விட்டு எங்களுக்குத் தகவல் கொடுத்தார். திருக்குறள் போட்டிகள் நடத்தி பக்கத்து பள்ளி மாணவர்களை எல்லாம் வரவழைத்து பரிசளிப்பு விழா நடத்துவார். எல்லா வகை திருவள்ளுவர் ஞானமன்றத்திற்கும் அதன் பரப்புரைக்கும் தான் மட்டுமல்லாமல் குணசேகரன் போன்ற ஆசிரியர்களையும் இணைத்துக் கொண்டு துணை நின்றவர் முருகானந்தம்.
அவரை திருக்குறள் திருத்தொண்டர் வரிசையில் சேர்த்துப் புகழ்வதை என் கடமை எனக் கருதுகிறேன்.