Skip to content

திரு. முருகனடிமை,வேதாரண்யம்

திரு. முருகனடிமை, வேதாரண்யம்

‘கனிமொழி’ என்ற சிற்றிதழ் ஆசிரியர். சிறந்த தமிழறிஞர். திருக்குறள் அடிமை என்றே தன்னை அழைத்துக்கொள்பவர் வேதாரண்யம் பகுதியின் உழவர்களுக்கான உரிமைகளை போராட்டத்தின் பெற்றுத்தந்தவர். அரசியலிலும் கால் பதிக்க எண்ணிய இவரின் நேர்மையைப் பார்த்துப்  பயந்த அரசியல்வாதிகள் இவரை பழிவாங்கிவிட்டனர். ஆனால் எதற்கும் அஞ்சாது திருக்குறள் பணியும், தமிழ்ப் பணியும் ஆற்றும் அவர் வாழ்ந்த எ ஊருக்கு அண்மையில் உள்ள எல்லா பள்ளிகளிலும் திருவள்ளுவர் சிலை நிறுவி, விழாக் கொண்டாடியவர். திருவள்ளுவர் திருநாளில் தேரோட்டம் நடத்தி மக்களை எல்லாம் வழிப்படச் செய்தவர்.

நான் நாகை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலராக இருந்தபோது முருகனடிமையைச் சந்தித்து ஆசிப் பெற்றேன். அப்போது அவர் உங்களைப் போல திருக்குறள் பற்றாளர் அலுவலராக வந்திருக்கும் போது நான் உடல் நலக் குறைவால் படுத்துவிட்டேனே என்று கண்ணீர் மல்கக் கூறினார். நான் அவருக்கு ஆறுதலாக உங்கள் மகன் அருணனோடு சேர்ந்து உங்கள் பணியை தொடர்ந்து செய்வேன் என்று உறுதி அளித்தேன். அதே போலவே நான் வேறு வேறு மாவட்டங்களுக்கு பணிமாறுதலில் சென்ற போதும் ‘கனிமொழி’ இதழை வளர்த்தெடுப்பதற்கு அருணனோடு பல முயற்சிகளை எடுத்தேன். முருகனடிமை மறைந்த பிறகு ஒவ்வொரு நினைவு நாளிலும் தமிழ் விழாவாகவே நடத்தும் அவர் மைந்தர்களின் நன்றியுணர்வை எண்ணி வியந்து போனேன்.

திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் முருகனடிமை நிறுவியுள்ள வெள்ளை நிறத் திருவள்ளுவர் சிலைக்கு  நான் அங்கு போகும் போதெல்லாம் தனி ஆளாக நின்று மாலை அணிவிப்பேன். திருக்குறள் போற்றி பாடுவேன். மக்கள் கூடி நின்று அய்யன் திருவள்ளுவரை வாழ்த்தும் போது மகிழ்ச்சியடைவேன்.

முருகனடிமையை மூத்த திருத்தொண்டர் என்ற அடைமொழியோடு அழைப்போம்.

 

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்