Skip to content

முனைவர். க. பன்னீர்செல்வம்,ஆற்காடு

முனைவர். க. பன்னீர்செல்வம், ஆற்காடு

ஆற்காட்டில் நடைபெற்ற திருக்குறள் வடக்கு மண்டல மாநாட்டில் பாலமுருகனடிமை, தனபாலுவுடன் சரவணன், இலட்சுமணன் எனப் பலரும் போட்டி போட்டுக்கொண்டு உழைத்து மாநாட்டை வெற்றிகரமாக்கினர் என்பது ஒரு வரலாறு. அதில் இப்போதும் தொடர்பிலிருப்பவரும் தமிழ்ப் பணியில் தம் மனைவியோடும் தொடர்ந்து ஈடுபட்டு வருபவரும் எனது முதல்  நூலை நான் (மணிவாசகர் பதிப்பகம்) வெளியிட பெரிதும் துணை நின்றவரும் ஆன  முனைவர் பன்னீர்செல்வத்தை இத்தொகை நூலில் வரிசைப்படுத்துவது இன்றியமையாதது என்று கருகிறேன்.

தொய்வின்றி ஒருவர் வாழ்நாள் முழுவதும் படிப்பதும் எழுதுவதுமாக இருப்பதே திருக்குறள் நெறிதான்.

“யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு”

என்று வள்ளுவர்  கூறுவது புனைத்துரை அல்ல. எல்லா இடத்திலும் நம்மை முதன்மைப்படுத்துவதுமின்றி ,நம்மாலும் பலர் புகழ் அடையவும் காரணமாக இருப்பது கல்வி. பன்னீர்செல்வம் திருக்குறளின் அமைப்புமுறை குறித்து ஓர் ஆய்வு நூல் வெளியிட்டு பலதரப்பட்ட தரவுகளை அதில் கொடுத்துள்ளார். வைணவம், சைவம் பற்றிய நூல்களும் சமூக வரலாறு குறித்த நூல்களும் எழுதிக் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள பல தமிழ் அமைப்புகளிலும் தொடர்பு வைத்துள்ளார்.

திருக்குறள் கருத்துக்கள் பரவ வேலூர் மாவட்டத்தில் வழக்கறிஞர் தினகரனோடு இணைந்து தொடர்பு மையம் ஏற்படுத்தும் போது பன்னீர்செல்வம் அதில் பொறுப்பை எற்பார் என்று நம்புகிறேன். தன் மகனை சிறந்த மருத்துவராக்கி மகிழ்ந்தவர். அப்பணியுடன் கூடவே தமிழ்ப்பணியும் திருக்குறள் பணியும் இணைந்து செயல்படுத்த அணியமாகியுள்ளார். அவரது தாமரை இல்லம் எப்போதும் திருக்குறள் பணிக்கு திறந்தே இருக்குமென்பது வெள்ளிடைமலை.

வாழ்க ! வளர்க !!

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்