முனைவர். வி. முத்து, புதுவை
ஐம்பது ஆண்டுக் காலத் தமிழக அரசியலில் இரண்டு துருவங்களையும் இணைக்கோட்டில் வைத்து தனது சமூகத் தொ ண்டும், கல்வித் தொண்டும், தடையின்றி வளர தடம் பதித்து பணியாற்றுபவர் புதுவை முத்து ஐயா ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவரான இவர் அப்போதே மாணவர் அமைப்புகளில் முன்னோடியாய் திகழ்ந்து செல்வாக்குப் பெற்றவராயினும் யாரையும் முழுமையாக நம்பி வாழாதவாறு சொந்தத் தொழில் வாயிலாகவே வளர்ந்து தமிழகம் புதுவை ஆகிய மாநிலங்களில் பல கல்வி நிறுவனங்களை நடத்திக்கொண்டே சிறந்த தமிழ்த் தொண்டும் ஆற்றிவருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்து பல சமூகத் தொண்டையும் தமிழ்த் தொண்டையும் ஆற்றி வருகிறார்.
எனது வேண்டுகோளை ஏற்று அரியலூர் மா.சோ . விக்டர் சொல்லாய்வுகளை தமிழ்ச் சங்க ஏற்பாட்டில் ஒரு லட்ச ரூபாய் செலவில் சிறந்த ஆய்வரங்கை நடத்தி அவருக்கு சிறப்பு செய்தார். கூடுதலாக நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்குவித்தல் உலக அளவில் புதுவைக்கும் சுற்றுலாவரும் அனைவரும் தமிழ்ச் சங்கத்திற்கு வரச் செய்து பாராட்டுவிழா நடத்துகிறார். நமது திருக்குறள் மாநாடுகளில் கலந்துக் கொள்வது இல்லாமல் நினைவுப் பரிசுகளையும் வழங்கி சிறப்புச் செய்தார். பேரா. கடலூர் குழந்தைவேலனாரோடு இணைந்து திருக்குறள் தொண்டும் தமிழ்த் தொண்டும் ஆற்றுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறார். அவர் போன்ற செயல் வீரர்களை இணைத்துக் கொண்டுதான் மதுராந்தகத்திலுள்ள 100 ஏக்கர் இடமுள்ள திருக்குறள் பீடத்தை உலகறியச் செய்ய திட்டமிட்டுள்ளேன்.
முனைவர். முத்து நடத்தும் பல்லவா கல்விக்குழுமத்தின் பேருந்துகளை தமிழ்நாட்டில் நடக்கும் எல்லா தமிழ்த்திருவிழாக்களிலும் திருவள்ளுவர் தேரோட்டத்திலும் பார்க்கலாம். பழகுவதற்கு எளிமையானவர் அவரிடம் செல்வச் செருக்கைக் காணமுடியாது. அறிவுச் செருக்கு வேண்டுமானால் இருக்கலாம்!
“எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தழைத்து” என்பது இவர் போன்ற திருக்குறள் தொண்டர்களுக்கே சாலப் பொருந்தும் .
வாழ்க தா ழ்வில்லாச் செல்வர் தொண்டு ! வளர்க அவர் புகழ் !!