Skip to content

திரு. மேலை பழனியப்பன்,கரூர்

திரு. மேலை பழனியப்பன், கரூர்

“தொட்டதெல்லாம் பொன்னாகும்”      “தோன்றின் புகழொடு தோன்றுக”

என்னும் வைர வரிகளுக்குச் சொந்தக்காரர் நம் பழனியப்பன். செந்தமிழ் கல்லூரி நிறுவி தமிழ் வளர்க்கும் மேலைச் சிவபுரியைச் சேர்ந்தவர் என்பதால் மேலையார் என்று புகழப்படுகிறார். பெரியார் குன்றக்குடி அடிகளாரிடமும் தற்போது பொன்னம்பல அடிகளாரிடமும் நல்லாசி பெற்று உலகத் திருக்குறள் பேரவையின் காவலராக விளங்கி திருக்குறள் பரப்புரை பணியை  செவ்வனேசெய்து வருகிறார்.

இவரும் அருணா பொன்னுசாமியும் கரூரில் இரட்டைப்புலவர்களாக இருந்து திருக்குறள் ஆர்வலர்களுக்கு வழிகாட்டி வருகிறார்கள். மருந்து வணிகத்திலும் இவர்கள் இரட்டையர்களே! அது தொழில் என்றால் இவருக்கு உயிர் திருக்குறள் தான். தமிழகத்தின் அனைத்து திருக்குறள் அமைப்புகளுக்கும் தெரிந்த பெயர் மேலை பழனியப்பன். எந்த ஊரில் எந்த திருக்குறள் மாநாடு நடந்தாலும் அங்கே இவர்களைக்  காணலாம். கரூரில் நாம் நடத்திய மூன்றாவது மாநாட்டிலும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியது மட்டுமல்ல நல்ல வழிகாட்டுதலும் செய்தார்.

மேலும் திருக்குறள் போட்டிகள் பரிசளிப்புகள் நடத்தி ஆயிரக்கணக்கானவர்களை 30 ஆண்டுகளாக ஊக்கப்படுத்திவரும் நல்ல தொண்டர். அதுமட்டுமின்றி, குழந்தைகள் கலை மன்றம் நடத்தி கரூரில் வாழும் சிறுவர் சிறுமியர்களின் இசை, பாட்டு, நடனம் கருவிகள் வாசித்தல் அனைத்தையும் கொண்டு வந்து டெல்லி வரை சென்று பரிசு பெறச் செய்துள்ளார். அவர்களின் சிறப்பை வெளிப்படுத்தும் மலர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் தமிழகத்திலுள்ள அனைத்து திருக்குறள் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் நமது முயற்சியில் இவரும் தோள் கொடுத்து உலகத் திருக்குறள் மைய கிளைகளுக்கு தெரிவித்து அடிகளாரிடம் ஒத்துழைப்பு கேட்டுள்ளார் .” இதனை இதனால் இவன் முடிப்பன்” குறளைத்தான்  நான் நம்பியிருக்கின்றேன்.

மேலையாரை திருத்தொண்டர் வரிசையில் சிறப்புக்குரியவராக வைப்பதில் பெருமைப் படுகிறேன்.

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்