Skip to content

மருத்துவர். பாலதண்டாயுதம்,விழுப்புரம்.

மருத்துவர். பாலதண்டாயுதம், விழுப்புரம்.

விழுப்புரம் நான்கு சாலை சந்திப்பில் ஒரு புகழ்பெற்ற மருத்துவர் எங்களுக்காக நான்குமணி நேரம் காத்திருந்தார் என்று அறிந்தபோது துடித்துப் போனோம். அதிகப் பழக்கமில்லை. ஆயினும் சுமந்து வருவது திருவள்ளுவர் சிலை என்று தெரிந்ததும் தான் திருவள்ளுவர் பால் வைத்திருந்த பற்றின் காரணமாக அவரும் அவரோடு சில நண்பர்களும் காத்திருந்தனர்.

நானும் எனது ஆசிரியரான ப. முத்துக்குமரனும் மகாபலிபுரத்திலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் செலவில் திருவள்ளுவர் கற்சிலை ஒன்றை வாங்கி எடுத்துக்கொண்டு ஒரு வாகனத்திலிருந்து புறப்பட்டோம். 12.00 மணிக்கு விழுப்புரம் வந்துவிடுவோம் உங்களை எதிர்ப்பார்கின்றோம் என்று தொலைபேசியில் சொல்லிவிட்டோம். அதற்காகவே திருவள்ளுவர் மன்றத்தின் தலைவரான மருத்துவர். பாலதண்டாயுதம் 4 மணிநேரம் மாலையுடன் தவமிருந்தார். எங்களைக் கண்டதும் மகிழ்ச்சியில் ஓடோடி வந்து கை கொடுத்து திருவள்ளுவருக்கு மாலையணிந்து எங்களை உபசரித்து அனுப்பி வைத்தார்.

எத்தனை பேர் தமிழ் நாட்டில் அதுவும் மருத்துவர்கள் திருவள்ளுவருக்காகக் காத்திருப்பார்கள். அதில்தான் நான் அவரோடு ஐக்கியமாகி விழுப்புரம் செல்லும் போதெல்லாம் விழுப்புரம் நகராட்சிக்கு அருகிலுள்ள அவரது மருத்துவமனைக்குச் சென்று அளவளாவி வருவேன். நான் எத்தனை முறை சென்றாலும் மருத்துவமனையை விட்டு வெளியே வந்து உணவு விடுதிக்கு தானே வந்து அப்போது உணவு அருந்தும் நேரம் இல்லாவிட்டாலும் இப்போது குறைந்த அளவாவது சாப்பிடுங்கள் இனி நீங்கள் ஊருக்குச் சென்று உணவருந்த இந்த சக்தி தேவையாயிருக்கும் என சொல்வார்.

திருவள்ளுவர் கூறும் அன்பைச் சொல்வதோ? விருந்தோம்பலை சொல்வதோ? ஈகையை சொல்வதோ? கண்ணோட்டத்தைச் சொல்வதோ? எல்லாமே திருக்குறளால் வந்தது என எண்ணி பூரிப்பேன். மனிதனை தெய்வமாக்கும் ஆற்றல் திருக்குறளுக்கு உண்டு என்பது தானே உண்மை.

மருத்துவர் ஒரு முறை எனது திருக்குறள் சிலைகளின் வரலாற்றை எல்லாம் கேள்விப்பட்டு தான் வைத்த திருள்ளுவர் சிலையின் அவலத்தைக் கூறி வருந்தி பழைய பேருந்துநிலையம் அருகில் இருந்த சிலையைதழுவி மாலையிட்டபோது அவரது மகிழ்ச்சியைப் பார்த்து நானும் மகிழ்ந்தேன். அவர் சிறந்த கவிஞர் என்பதால் அவருக்கு மேலும் ஒரு சிறப்பு.

வள்ளுவம் போற்றும் மருத்துவ மாமணி திரு பாலதண்டாயுதம் அவர்களை நாமும் போற்றுவோம் !

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்