திரு. அ. மாணிக்கம், மயிலாடுதுறை
மயிலாடுதுறை சேந்தங்குடியில் குமரன் நகர் முதல் எண் வீட்டின் தோற்றத்தைப் பார்த்துவிட்டு தெருவில் போவோர் வருவோர் எல்லாம் ஒரு மணித்துளி நின்று விட்டு வணக்கம் தெரிவித்துவிட்டுத் தான் கடந்து செல்கிறார்கள். காரணம் மயிலாடுதுறையில் யார் வீட்டிலும் இல்லாத அளவிற்கு சுவர் முழுவதும் திருக்குறள், வாசலிலேயே ஒரு திருவள்ளுவர் சிலை என திருவள்ளுவர் கோவிலாகவே காட்சி அளிக்கிறது நம் மாணிக்கத்தின் வீடு. அந்நகரிலுள்ள அறிஞர்கள் பேராசிரியர்கள் எல்லாம் இதைப் பார்ப்பதற்காகவே அங்கு வருகிறார்கள், கூடுகிறார்கள், விவாதிக்கிறார்கள். இப்படி ஒரு ஏற்பாட்டை தமிழ்நாட்டில் வேறெந்த நகரத்திலும் கூட காணமுடியாது.
மாணிக்கம் ஆசிரியராக இருந்த செயங்கொண்ட சோழபுரத்தில் ஓய்வு பெற்ற போது கூட பெரிய அளவில் அறிமுகமானவரல்ல. ஆனால் இன்று தங்கியுள்ள மயிலாடுதுறையில் புகழ் வாய்ந்த திருக்குறள் தொண்டராகவே வாழ்ந்து வருகிறார்.
சிவன் கோவில் உழவாரப்பணியை தொடங்கிய அவரது ஓய்வுக் காலப்பணி ,தற்போது திருக்குறள் இயக்கத்தின் முன்னோடியானப் பணியில் தீவிரமாகியுள்ளது. திருவள்ளுவர் ஞானமன்றத்தின் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பில் இருந்தாலும் செயங்கொண்ட சோழபுரத்தில் அவர் பணி செய்ய முடியவில்லை . ஆனால் மயிலாடுதுறையில் தற்போது சிறப்பாக நடைபெற்று வரும் திருக்குறள் பேரவை நிறுவனர் நீலகண்டனை எனக்கு அறிமுகப்படுத்தியவரே மாணிக்கம் தான். அதற்குப் பிறகு தான் நீலகண்டனும், தானும் சேர்ந்து திருக்குறள் பேரவையை தொடங்கினர்.
ஒரு தொண்டர் முழுமையாகச் செயல்படத் தொடங்கினால் ஒரு ஊரே திருக்குறள் தொண்டிற்கு அணியமாகிவிடும் என்பதற்கு மாணிக்கமே சான்று. அவர் வாயிலாக சிவத் தொண்டர் கோமல் சேகர் அவர்களின் நிதிஉதவியும் ஞான மன்றத்திற்கு கிடைத்தது என்பதை நன்றியோடு நினைவு கூர்கிறேன் .
எப் போதும் என் குரலுக்கு செவி சாய்க்கும் மாணிக்கத்தைத் திருக்குறள் தொண்டர்களில் மாணிக்கமாகவே கருதலாம்.